2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கபடவுள்ளது.

இந்த யோசனைகள் அடங்கிய பிரேரணையை அமைச்சர் மங்கள சமரவீர இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பார். 

இந்த வரவு செலவுத்திட்டத்தில் வறுமை நிலையில் உள்ள மக்களை மேம்படுத்துவது தொடர்பான பல திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு தனது பணிக்கு உதவிய மனோ தித்தவெல்ல மற்றும் டெஸ்ஹால் டி மெல் ஆகியோருக்கு தனது நன்றிகளை தெரிவிப்பதாக அமைச்சர் மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை வரவு செலவுத்திட்டம் பொதுமக்களின் ஆலோசனைகளை பெற்று தயாரிக்கப்பட்டதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத்திட்டம் தொடர்பான விவாதம் நாளை புதன்கிழமை ஆரம்பமாகும். அது எதிர்வரும் 12 ஆம் திகதி வரை இடம்பெறும். 

அதேவேளை, வரவு செலவுத்திட்ட பாராளுமன்ற குழுநிலை விவாதங்கள் எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் ஐந்தாம் திகதி வரை இடம்பெறும். 

இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் மொத்த செலவினம் இரண்டு இலட்சத்து 31 ஆயிரத்து 200 கோடி ரூபாவாகும். 

இந்த வரவு செலவுத்திட்டம் தொடர்பான செலவின மதிப்பீட்டு பிரேரணை கடந்த மாதம் ஐந்தாம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

( மேலதிக விபரங்களுக்கு தொடர்ந்தும் எம்முடன் இணைந்திருங்கள் )