(எம்.எப்.எம்.பஸீர்)

இலங்கைக்கு போதைப்பொருளை விநியோகிக்கும் சர்வதேச மாபியா கும்பலொன்றுடன் தொடர்புள்ளதாக சந்தேகத்தின் பேரில் அண்மையில், டாக்கா நகரில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஐவரிடம் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக இலங்கையின் விசேட பொலிஸ் குழுவொன்று பங்களாதேஷிற்கு சென்றுள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்பிரிவின் பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழ் அப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ஒருவரை உள்ளடக்கிய இருவர் கொண்ட குழுவே இவ்வறு பங்களாதேஷுக்கு இன்று அதிகாலை புறப்பட்டுச் சென்றுள்ளது. 

இதற்கான அனுமதி  ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சிடமிருந்து பெறப்பட்டிருந்த நிலையில், இவ்விரு பொலிஸ் அதிகாரிகளும்  இவ்வாறு பங்களாதேஷ் நோக்கி சென்றதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இலங்கை முழுவதும் ஹெரோயின் விநியோகிக்கும் பாதுகாப்பு இல்லமாகவும் மத்திய நிலையமாகவும் செயற்பட்டுவந்த வீடொன்றை கடந்த 2018 டிசம்பர் 31 ஆம் திகதி சுற்றிவளைத்து அங்கிருந்து 336 கோடி ரூபா பெறுமதியான 278 கிலோ ஹெரோயின் போதைப்பொருளை மீட்ட விவகாரம் தொடர்பில் பங்களாதேஷ் சிறப்பு பிரிவு பொலிஸார் டாக்கா நகரில் வைத்து ஐவரை கடந்த  ஜனவரி இறுதியில் கைதுசெய்திருந்தனர்.  

இந் நிலையிலேயே அவர்களை விசாரிக்க  சிறப்புக் குழு பங்களாதேஷ் சென்றுள்ளது.