ஜெயலலிதாவின் பிறந்தநாளில் 94 ஜோடிகளுக்கு இலவச திருமணம்..!

Published By: Digital Desk 3

04 Mar, 2019 | 02:22 PM
image

இந்தியாவின் தேனி மாவட்டத்தில் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, 94 ஜோடிகளுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இலவச திருமணம் நடத்தி வைத்து, 71 வகையான சீர்வரிசை வழங்கினார்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாள் விழா கடந்த மாதம் 24ஆம் திகதி இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அதிமுகவினர் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக, தேனி மாவட்ட அதிமுக சார்பில் 94 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று (3ம் திகதி) காலை, தேனி லெட்சுமிபுரம் வி.எல்.கே. திருமண மண்டபத்தில் 94 ஜோடிகளுக்கு மிக பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.

முன்னதாக, தேர்வு செய்யப்பட்ட மணமக்கள் பட்டு வேஷ்டி - பட்டு புடவை அணிந்து, கழுத்தில் மாலையுடன் மண்டபத்தில் அமர்ந்திருந்தனர். தொடர்ந்து, மங்கள மேளம் முழங்க, வேத மந்திரம் ஒலிக்க, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திருமாங்கல்யம் எடுத்துக்கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.

தொடர்ந்து, மணமக்கள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. இதையடுத்து, மணமக்கள் 94 பேருக்கும் கட்டில், பீரோ, மெத்தை, பெட்சீட், தலையணை, குக்கர் உட்பட சமையல் செய்வதற்கு தேவையான பாத்திரங்கள் உள்ளிட்ட 71 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா உட்பட மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right