தென்னாபிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் 215 ஓட்டங்களுக்குள் இந்திய அணி சுருண்ட அதேவேளை, 35 ஓட்டங்களில் 6விக்கெட்டுகளை இழந்து தென்னாபிரிக்க அணி தடுமாறுகின்றது.


இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 3 ஆவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நேற்று ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இந்திய அணிக்கு தென்னாபிரிக்க பந்து வீச்சாளர்கள் சிம்மசொப்பனமாக விளங்கினர்.

இந்திய அணி சார்பாக ஆரம்ப ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தவான் மற்றும் முரளி விஜய் ஜோடி நிதானமாக துடுப்பெடுத்தாடி 50 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது எல்கர் பந்தில் தவான்  12 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

இதனையடுத்து புஜாராவுடன் ஜோடி சேர்ந்த முரளி விஜய் 40 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மோர்கல் பந்துவீச்சில் வெளியேறினார்.

தொடர்ந்து களமிறங்கிய இந்திய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேற இறுதியில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ஓட்டங்களில் சுருண்டது.

தென்னாபிரிக்க அணி சார்பில் மோர்கல் 3 விக்கெட்டுகளையும் சிமொன் ஹார்மர் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து களமிறங்கிய தென்னாபிரிக்க அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

4 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆரம்ப ஆட்டக்காரரான வான் ஷயல் அஸ்வின் பந்துவீச்சில் வெளியேறினார்.

இந்நிலையில் தென்னாபிரிக்க அணி 6 விக்கெட் இழப்பிற்கு 35 ஓட்டங்களைப்பெற்று இன்றை இரண்டாம் நாள் ஆட்டத்தில் தடுமாறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.