‘செல்பி’ எடுத்த நபர் ஒருவருக்கு 20 வருட சிறை தண்டனையும், 60 மில்லியன் டொலர் அபராதமும் விதித்து நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ள சம்பவம் ஒன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு மிக மோசமான தீ விபத்தொன்று இடம்பெற்றது.

கடந்த2014ம் ஆண்டு செப்டம்பர் 13ம் திகதி கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த 39 வயதுடைய வெய்ன் அலன் ஹன்ஸ்மன் என்ற நபர் சியரா நெவாடா என்ற மலைப்பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

வனப்பகுதியில் உல்லாசமாக இருக்க வேண்டும் என்பதால், போகும் வழியில் மதுபான போத்தல்களையும் வாங்கி சென்றுள்ளார்.

 

வனப்பகுதியை அடைந்த குறித்த நபர் உல்லாசமாக மது அருந்திய பின்னர், வித்தியசமாக ‘செல்பி’ வீடியோ ஒன்றை எடுக்க நினைத்து அருகில் உள்ள காய்ந்துபோன இலைகளுக்கு தீவைத்துள்ளார்.

தனக்கு பின்னால் தீப்பற்றி எரிய, அதனுடன் சேர்ந்து சிரித்துக் கொண்டே செல்பி வீடியோ எடுத்துள்ளார்.

‘ஹலோ….நான் இப்போது வனப்பகுதியில் இருக்கிறேன். என்னைச் சுற்றி தீப்பற்றி எரிகிறது தெரிகிறதா?’ என சிரித்துக் கொண்டு பேசியுள்ளார்.

ஆனால், இதற்கு பிறகு தான் நிலைமை விபரீதமாகியுள்ளது. பற்றி எரிந்த தீ மளமளவென வனம் முழுவதும் பரவியுள்ளது.

இதைக்கண்டு அதிர்ச்சியுற்ற அந்த நபர் உடனடியாக 911 என்ற எண்ணை தொடர்புகொண்டு பொலிசாருக்கு தகவல் அளித்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

தகவல் பெற்று வந்த பொலிசார் மற்றும் 300 தீயணைப்பு வீரர்கள் சுமார் 30 நாட்கள் கடுமையாக போராடிதீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஆனால், இந்த தீ விபத்தால் சுமார் 1,00,000 ஏக்கர் வனப்பகுதி முற்றிலும் எரிந்து நாசமானது. வனப்பகுதியில் அமைந்திருந்த 100 கட்டிடங்கள் சேதமானது. ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டனர்.

இந்த விபத்தை தொடர்ந்து வீடியோ மூலம் குற்றவாளியை பொலிசார் கைது செய்தனர். தொடக்கத்தில் இந்த தவறை செய்யவில்லை என குற்றவாளி தெரிவித்துள்ளார். ஆனால்,சில நாட்களுக்கு பிறகு தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர் அதற்காக நீதிபதிகளிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.

இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை கடந்த வாரம் நீதிமன்றத்திற்கு வந்தது.

இலட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவு உள்ள வனப்பகுதியை முற்றிலுமாக சேதப்படுத்திய குற்றத்திற்காகவும், கட்டிடங்கள் மற்றும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காகவும், அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 60 மில்லியன் டொலர் அபராதமும் விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.