சிலாபம் பரப்பன்முல்ல, முஹூனுவட்டவான பிரதேசத்தில் உள்ள குளத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலத்தை நேற்று மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் இவ்வாறு பெண்ணொருவரின் சடலம் ஒன்று கிடப்பதாக சிலாபம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில், குறித்த பிரதேசத்திற்கு விஜயம் செய்த பொலிஸார் சடலத்தை மீட்டதுடன், விசாரணைகளையும் ஆரம்பித்தனர்.

இவ்வாறு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் உடலில் தீக்காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், உயிரிழந்த பெண் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன்,  உயிரிழந்தமைக்கான காரணம் பற்றியும் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதேவேளை, சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த நீதிவான், விசாரணைகளின் பின்னர், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.