ஜனநாயக மக்கள் முன்னணியுடன் மீண்டும் இணையப்போவதில்லை. பதினொரு வருடங்கள் பொறுமைகாத்த பின்னரே இளைஞர்களுக்கான அரசியல்களத்தினை முன்னிலைப்படுத்தி தமிழ் மக்கள் இணையத்தினை உருவாக்கியுள்ளோம் என அதன் தலைவரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான சண்.குகவரதன் வீரகேசரிக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தார். 

சுமூகங்களின் மீது அக்கறை கொண்டவர்களாக காட்டிக்கொள்ளும் தலைவர்கள் தீர்வை வழங்குவதில்லை என்றும் அவர் கூறினார். அப்பேட்டியின் முழுவடிவம் வருமாறு, 

கேள்வி:- தமிழ் மக்கள் இணையம் என்ற பெயரில் புதிதாக உருவாகியுள்ள கட்சியின் நிருவாக கட்டமைப்பு பற்றி கூறுங்கள்?

பதில்:- தலைவர், பொதுச்செயலாளர், நிதிச்செயலாளர், நிருவாகச் செயலாளர், ஊடகச்செயலாளர் என அரசியல் உயர்மட்டக்குழுவிலே 15பேர் இருக்கின்றோம். இக்குழுவே கட்சியின் சகல விடயங்களையும் கலந்துரையாடி தீர்மானிக்கும். இதனைவிடவும் மகளிர் இணையம், இளையோர் இணையம், அறிவோர் இணையம் ஆகியன உள்ளன. மிக முக்கியமாக, எதிர்வரும் தேர்தல்களில் நாம் போட்டியிட்டு மக்கள் ஆணையைப்  பெற்று அரசியல் உறுப்புரிமையைப் பெறுகின்றபோது, அந்த நபர்கள் கட்சியின் பதவி நிலைகளிலிருந்து இராஜினாமாச் செய்து அடுத்த இளையவர்களுக்கு அப்பதவிகளை வழங்க வேண்டும் என்பது பிரதான விடயமாகும். இந்த விடயத்தினை முன்மாதிரியாக செயற்படுத்த எதிர்பார்த்துள்ளோம். 

கேள்வி:- தற்போதைய அரசியல் சூழலில் தலைநகரில் இத்தகையதொரு இணையத்தின் உதயம் அவசியம் தானா? 

பதில்:- ஆம், அவசியமாகின்றது.

கேள்வி:- அதற்கான காரணத்தினை கூறமுடியுமா? 

பதில்:- இலங்கை அரசியல் தளத்தில் பெரும்பன்மை, சிறுபான்மை மக்களைப் பிரதிதிநிதித்துவப்படுத்தி பல கட்சிகள் உருவாகின்றன. ஆனால் ஒருசில கட்சிகளே நிலைத்து நிற்கின்றன. ஏனையவை காணாமல்போகின்றன. ஆரம்பகால கட்டங்களிலிருந்து, தற்போது வரையில் புதிய கட்சிகள் ஏன் தோற்றம் பெறுகின்றன என்பதை சற்று ஆழமாக பார்க்க வேண்டியுள்ளது. 

குறிப்பாக எந்தவொரு அரசியல் கட்சியும், அதன் தலைவரும் இன்னொரு தலைவரை உருவாக்குவதற்கு விரும்புவதில்லை. ஒவ்வொரு தலைவர்களும் ஆயுட்காலத்திற்கும் அப்பதவியில் இருந்து அதன் பின்னரே அப்பதவியை ஏனையவர்களிடத்தில் ஒப்படைக்கின்ற வரலாறு தான் தமிழர் தரப்பில் காணப்படுகின்றது. எனது இருபது வருட சமூக சேவைக்காலத்திலும், 16 வருட அரசியல் அனுபவத்திலும் இவ்வாறான நிலைமையையே பார்க்க முடிந்துள்ளது. இதனைவிடவும், யுத்தத்திற்கு முன்னரும், பின்னரும் மக்களின் தேவைகளை அறிந்து அதனை எமது சுயநலமாக மாற்றிக் கொண்டு முன்னெடுக்கப்படுகின்ற அரசியல் செயற்பாடுகளையே காணக்கூடியதாக உள்ளது. 

உதாரணமாக, யுத்தம் நிறைவடைவதற்கு முன்னரான வெள்ளைவான் கடத்தல்கள், யுத்தத்திற்குப் பின்னர் காணாமலாக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகள் விடயங்கள், தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினை இத்தகைய விடயங்களை முன்னிலைப்படுத்தும் தலைவர்கள் அந்த சமூகங்களின் மீது அக்கறை கொண்டவர்களாக காட்டிக்கொள்கின்றார்களே தவிர அதற்கு தீர்வு வழங்கியதாக இல்லை. 

உலகம் நவீனத்துவத்தில் வேகமாக நகர்ந்துகொண்டிருக்கையில், அரசியல் தலைமைகள் இளைஞர்களையும் ஒருங்கிணைத்து அவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான உரிய அரசியல் அந்தஸ்தினை ஏன் வழங்கக்கூடாது என்ற கேள்வி எம்முள் பலநாட்களாக எழுந்திருந்தது. இதன் காரணத்தால் தான் தமிழ் மக்கள் இணையம் உருவாகுவதற்கு தலைப்பட வேண்டியேற்பட்டது. 

கேள்வி:- தங்களின் அரசியல் பயணம் ஆரம்பமான அரசியல்கட்சியில் மேற்படி விடயங்களை கலந்துரையாடி முன்னெடுத்திருக்க முடியுமல்லவா? 

பதில்:- எமது அரசியல் கட்சியினுள் இந்த விடயங்களைக் குறிப்பிட்டு பல கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம். குறிப்பாக, கட்சியில் ஏதேச்சாதிகார தலைமைத்துவம் இருக்கின்றது. கட்சியின் பொறுப்புக்களை பிரித்துக்கொடுத்ததாக வரலாறுகள் இல்லை. முடிவுகள் தனியொரு நபரால் எடுக்கப்படுகின்றன. உயர்மட்டக்குழு தேர்தல் காலத்தினை தவிர எக்காலத்திலும் கூடியதாக இல்லை. இவ்வாறு பல குறைபாடுகளை சுட்டிக்காட்டியே வந்திருந்தோம். தலைநகரில் தமிழ் மக்களுக்காக உள்ளுராட்சிமன்றங்கள், மாகாணசபை, பாராளுமன்றம் என பிரதிநிதித்துவங்களைப் பெற்று படிப்படியாக வளர்ந்து வருகின்ற அரசியல் கட்சியை குலைத்து தமிழர்களின் பிரதிநிதித்துவங்களை இல்லாது செய்துவிடக்கூடாது என்பதற்காக கடந்த பதினொருவருடங்களாக பொறுமைகாத்து வந்திருந்தோம். எனினும், அடிப்படையில் எவ்விதமான மாற்றமும் இல்லாத நிலையில், மக்களை தொடர்ந்தும் ஏமாற்று அரசியலுக்குள் கொண்டு செல்வதை தடுக்க வேண்டிய தேவை சாதாரண குடிமகனாக எமக்கு இருந்தது. 

கேள்வி:- எவ்வாறாயினும், தாங்கள் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டதாக அறிவிப்பு விடுக்கப்பட்டதன் பின்னரான சொற்பகாலத்தில் அல்லவா இணையம் உதயமாகியிருக்கின்றது?

பதில்:- நான் சார்ந்திருந்த கட்சியில் ஆரம்பத்தில் பிரபாகணேசன், நல்லையா குமரகுருபரன், இளைஞர் அணித்தோழர்கள் வெளியேறியிருந்தார்கள். அமரர் வேலணை வேணியன் வெளியேறியிருந்தார். பின்னர் நான், இறுதியாக இராஜேந்திரன் வெளியேறியிருந்தார்.  கடந்த உள்ளுராட்சி மன்றத்தேர்தலின் பின்னர் நான் சுயாதீனமாக செயற்பட ஆரம்பித்து விட்டேன். அதன் காரணமாகவே என்மீது திட்டமிடப்பட்டு தனிப்பட்ட விடயமொன்றை அரசியலாக்கி அரசியல் தளத்திலிருந்தே வெளியேற்றுவதற்கு நாடகமொன்று அரங்கேற்றப்பட்டது. இருப்பினும் முடியவில்லை. ஒருகட்சியிலிருந்து தொடர்ச்சியாக வெளியேற்றங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றதாயின், தவறுகள் எங்கேயிருக்கின்றன என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.  

கேள்வி:- கட்சியினுள் தவறுகள் இடம்பெறுகின்றனவென்றால், இத்தனைபேர் வெளியேறுவதற்கு பதிலாக கட்சிக்கட்டமைப்புக்களை பயன்படுத்தி சுயபரிசீலனையொன்றை மேற்கொள்வதற்கு அழுத்தங்களைப் பிரயோகித்திருக்கலாம் அல்லவா?

பதில்:- தலைவர் அவர்களே!, நீங்கள் தான் தலைவர், நீங்களே தான் பொதுச்செயலாளர். ஏன் பொதுச்செயலாளர் பதவியை கூட எமது கட்சியில் இருக்கின்ற பிறிதொருவருக்கு வழங்க முடியாது என்று கோரினோம். கட்சியில் வழங்கப்பட்டுள்ள பதவிகளுக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவில் உள்ள பதவிகளுக்கும் வேறுபாடுகள் காணப்படுகின்றன என்பதை சுட்டிக்காட்டினோம். மேலும், கட்சியின் முடிவுகள் தொடர்பில் உயர்மட்டக்குழுவில் கலந்துரையாடப்பட்டாலும் தனியொருவரே தீர்மானங்களை எடுக்கும் நிலைமைகளே இருந்தன. உயர்மட்டக்குழு பெயரளவிலேயே இருந்தது. இந்த விடயங்களையெல்லாம் நாம் எடுத்துக்கூறியபோதும் மாற்றங்கள் எவையும் நடைபெற்றிருக்கவில்லை.  

கேள்வி:- தலைமைப்பதவியும், பொதுச்செயலாளர் பதவியையும் ஒருவர் வகிப்பதற்கு யாப்பில் ஏற்பாடுகள் இருக்கின்றதா?

பதில்:- யாப்பில் ஏற்பாடுகள் காணப்படுகின்றன. ஆனால் கடந்த காலத்தில் கட்சியின் பொதுச்செயலாளராக நல்லையா குமரகுருபரன் பதவி வகித்திருந்தார். அவரது வெளியேற்றத்தின் பின்னர் அப்பதவியை தலைமை யாருக்கும் விட்டுக்கொடுக்கவில்லை. அதற்கு காரணம், அவநம்பிக்கையீனமும், அரசியலில் தன்னைவிடவும் வளர்ச்சி கண்டுவிடுவார்களோ என்ற அச்சமுமே ஆகும். 

கேள்வி:- உங்களுக்கு பிரதி செயலாளர், உபதலைவர் பதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றனவே? 

பதில்:- அவையெல்லாம் பெயரளவிலேயே இருந்தன. தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறையாக அறிவிக்கப்பட்டிருந்ததா என்ற கேள்விகள் இருக்கின்றன. இந்த இடத்தில் நான் ஒரு உதாரணத்தினைக் கூற விளைகின்றேன். மேற்படி பதவிகள் எனக்கு வழங்கப்பட்டிருந்தன, ஆனால், அண்மையில் ஒருவெள்ளிக்கிழமை இரவு, தலைமை திடீரென தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு, எமது கட்சிக்கு அமைப்புச்செயலாளர் பதவிக்கு ஒருவர் விண்ணப்பித்திருக்கின்றார். அவருக்கு அப்பதவியை வழங்கப்போகின்றேன். முடிந்தால் வாருங்கள் என்று கூறப்பட்டது. இந்த விடயத்தில் தான் நான் நேரடியாக முரண்பட்டேன். ஏற்கனவே சண்பிரபாகரன் என்பவர் அமைப்புச்செயலாளராக இருக்கின்றார். ஏனைய உறுப்பினர்களுக்கு இந்த விடயம் தெரியாது. திடீரென எவ்வாறு அப்பதவியை புதிதாக வந்தவொருவருக்கு வழங்க முடியும். இப்படி ஏதேச்சதிகாரத்தனமாக முடிவுகளை எடுக்கும் தலைமையின் கீழ் மக்கள் நலன் சார்ந்த அரசியல் பயணத்தினை எவ்வாறு முன்னெடுக்க முடியும். 

கேள்வி:- தமிழ் மக்கள் இணையம் எத்தகைய அரசியல் தனித்துவங்களைக் கொண்டிருக்கின்றது? 

பதில்:- அடுத்த தலைமுறையினரிடத்தில் அரசியலைக் கையளிப்பதற்கு புதிய தலைவர்களை மக்களிடத்திலிருந்து உருவாக்க வேண்டியுள்ளது. அதற்கான புதிய அரசியல் கலாசாரத்தில் நாம் செயற்படவுள்ளோம். மக்களின் தேவைகளைப் பயன்படுத்தி நாம் அரசியல் செய்யப்போவதில்லை. உதாரணமாக, காணமல்போனவர்கள், அரசியல் கைதிகள், தோட்டத்தொழிலாளர்கள் ஆகியோர் விடயத்தில் எம்மால் என்ன செய்யமுடியுமோ அந்த குழுவினரிடத்தில் நேர்மையாக உண்மையான விடயத்தினை முன்வைத்து முற்றுப்புள்ளி வைத்து விடுவோம். இவ்வாறு மக்களின் தேவையைப் பயன்படுத்தி அரசியல் மேற்கொள்ளாது, நேர்மையாக செயற்படுவதே எமது பிரதான விடயமாகின்றது. 

கேள்வி:- தமிழ் மக்கள் இணையத்தின் அடுத்த அரசியல் நகர்வு எவ்வாறு அமையவுள்ளது? 

பதில்:- தற்போதைய நிலையில் எமது கொள்கைகள், இலக்குகளை வைத்துப்பார்க்கின்றபோது எந்தக்கட்சியுடனும், கூட்டிணைய முடியாத நிலைமைகள் தான் இருக்கின்றன. எனினும், எமது கோரிக்கைகளை தூரநோக்குடன் எந்தவொரு கட்சி ஏற்றுக்கொண்டு இளைஞர்களுக்கு இடமளிக்க தயாராக இருக்கின்றதோ அக்கட்சியுடன் இணைவதா இல்லையா என்ற தீர்மானத்தினைக்கூட மக்களிடத்திலேயே விட்டுவிடுவோம். 

கேள்வி:- தலைநகர் வாழ் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்த நீங்களே தற்போது புதிய அரசியல் அணியை உருவாக்கியுள்ளதால் வாக்குச்சிதறல்கள் தானே இடம்பெறப்போகின்றன?  

பதில்:- தலைநகரில் தமிழர்களின் பிரதிநிதித்துவங்களை குறைப்பது எமது நோக்கமல்ல. தலைநகர் மக்களின் வாக்குகளைப் பெற்று அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப்பதவியையும் ஏற்றுக்கொண்டு அந்த மக்களை மறந்து செயற்பட முடியாது. வடகிழக்கிற்கு வெளியே நானே தலைவர் என்றும், தற்போது வடக்கு கிழக்கிலும் பிரவேசித்து தேசிய தலைவராகின்ற சிந்தனையில் வாக்களித்த மக்களை மறந்து செயற்படுகின்றபோது தலைநகர் வாழ் தமிழ் மக்கள் அடுத்த தேர்தலில் அரசியல் அநாதைகளாகிவிடுகின்ற சூழல் ஏற்பட வாய்ப்;பிருக்கின்றது. வாக்களித்த மக்களின் தேவைகளை நிறைவேற்றாது அதனைவைத்து அடுத்த தேர்தலில் எவ்வாறு அரசியல் செய்ய முடியும் எனச் சிந்தனை செய்யும் பிரதிநிதித்துவங்கள் இல்லாமலிருப்பதில் பிரச்சினை இல்லை. தமிழ் மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள சலிப்பால் எதிர்காலத்தில் சிங்கள பிரதிநிதித்துவத்தினை உருவாக்கிவிடக்கூடாது என்பதில் தமிழ் மக்கள் இணையம் உறுதியாக இருக்கின்றது. 

கேள்வி:- தமிழ் மக்கள் இணையத்தின் அரசியல் செயற்பாடுகள் மேல்மாகாணத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கப்போகின்றதா?

பதில்:- நாம் அடுத்ததாக கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் எமது செயற்குழுக்களை ஸ்தாபிக்கவுள்ளோம். வடக்கு கிழக்கு மக்களின் உரிமைகள், பிரச்சினைகளை பேசுவதற்கு சிரேஷ்ட தலைவர் சம்பந்தன் இருக்கின்றார். மலையகத்தில் தோட்டத்தொழிலாளர் பிரச்சினைகளை பேசுவதற்கும் பிரதிநிதிகள் இருக்கின்றார்கள். ஆகவே நாம் உடனடியாக இந்த விடயங்களை கையிலெடுக்கவில்லை. அதேநேரம் இந்த விடயங்களை முன்னெடுப்பதற்கு நாமும் துணையாக, குரலாக இருப்போம். அதேநேரம், மலையகத்தில் லயத்திலிருந்து அல்லது குடும்பத்திலிருந்து ஒருவர் அரச, தனியார் நிறுவனத்தில் கடமையாற்ற வேண்டும் என்ற வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளோம். அதேபோன்று வடக்கு கிழக்கில் நடைபெறும் ஆக்கிரமிப்புக்களுக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. தமிழ் குடிமகனாக சிந்தித்து அவ்விடயங்களை கையாள்வோம். 

கேள்வி:- பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ரவிராஜிற்கு பின்னர் அமைச்சர் மனோகணேசனுடன் மிக நெருக்கமாகச் செயற்பட்ட நபராக நீங்கள் இருக்கின்றீர்கள். அந்தவகையில் நீங்கள் கூறுகின்ற குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றமையை அவர் ஏற்றுக்கொண்டு அவை மீளமைக்கப்பட்டால் ஜனநாயக மக்கள் முன்னணியுடன், தமிழ் மக்கள் இணையம் மீண்டும் கைகோர்ப்பதற்கு வாய்ப்பிருக்கின்றதா? 

பதில்:- தமிழ் மக்கள் இணையம், ஜனநாயக மக்கள் முன்னணியுடன் எந்த உடன்பாட்டிற்கு வந்தாலும் மீண்டும் அக்கட்சியுடன் கைகோர்ப்பதற்கு தயாரில்லை. அதேநேரம் தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற அமைச்சர் திகாம்பரம், இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் ஆகியோருடன் நட்பு இருக்கின்றது. அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது தொடர்பில் எதிர்வரும் காலங்களில் சிந்திப்பதற்கு வாய்ப்புள்ளது.

கேள்வி:- பிரபாகணேசன் தலைமையிலான அணியுடன் இணைந்து செயற்படுவதற்கு சந்தர்ப்பங்கள் ஏற்பட்டால்? 

பதில்:- அவருடன் எனக்கு நெருங்கிய நட்பு உள்ளது. ஆனால் அரசியல் ரீதியாக இணைந்து பணியாற்றுவதற்கு எதிர்பார்ப்பில்லை. மேலும் தமிழ் மக்கள் இணையம், கடந்த காலத்தில் உருவாகியுள்ள கட்சிகள் தொடர்பில் ஆராய்ந்தே தனக்கென்ற தனித்துவக் கொள்கைகளை உருவாக்கியுள்ளது. ஆகவே அவற்றை முன்னெடுப்பதை நோக்கியே நகர்ந்து செல்லும். அதேநேரம் வடக்கு, கிழக்கு மலையக, தலைநகர் என சகல இளைய தரப்பினரை ஒருங்கிணைத்து தேசிய அரசியலில் பயணிப்பது தொடர்பில் காலவோட்டத்தில் ஆராயவுள்ளோம். 

கேள்வி:- ஐ.தே.க.வின்.உபதலைவரும், அமைச்சருமான ரவிகருணாநாயக்கவுக்கும், அமைச்சர் மனோகணேசனுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன. எனினும் அமைச்சர் மனோகணேசன் தலைமையிலான தரப்பு ஐ.தே.மு இணைந்து செயற்படவுள்ளமை உறுதியாகிவிட்டது. இவ்வாறிருக்க, தாங்கள் அமைச்சர் ரவிகருணாநாயக்கவினை சந்தித்தீர்கள். தற்போதும் உறவுகள் நீடிக்கின்ற நிலையில் தங்களின் தரப்பு அவர் ஊடாக ஐ.தே.முன்னணியில் வாய்ப்பிருக்கின்றதா? 

பதில்:- மேல்மாகாண சபையில் நாங்கள் எதிர்க்கட்சியிலேயே இருக்கின்றோம். அதனால் கட்சி குழுக் கூட்டங்கள் இருக்கின்றன. அச்சமயத்தில் நாங்கள் அமைச்சர்களை சந்திப்பது வழமை. அமைச்சர் அகிலவிராஜ், ரவிகருணாநாயக்க போன்றவர்களையெல்லாம் சந்தித்தோம். இதனால் ஏற்பட்ட நட்பின் காரணமாக, அவர் அமைச்சுப்பதவியில் இல்லாத தருணத்தில் அவரைச் சந்தித்திருந்தேன். அமைச்சுப்பதவியை பெற்றதன் பின்னர் வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்தேன். அவை வெறும் நட்பின் அடிப்படையில் நடைபெற்ற விடயங்களாகும். தேர்தல் கூட்டு தொடர்பில் தலைநகர் வாழ் மக்களே எமக்கு தீர்மானத்தினை வழங்குவார்கள் என்பதை மீண்டும் கூறுகின்றேன். 

நேர்காணல்:- ஆர்.ராம்