இன்றைய காலகட்டத்தில் நம் இளைஞர்கள் சம்பாதிப்பு என்ற பெயரில் வெளிநாட்டிற்குச் சென்று தனக்குத் தானே தீங்கை விளைவித்துக் கொள்கின்றனர்.

அவ்வாறு அயல் நாட்டிற்குச் சென்று தன் வாழ்க்கையைத் வருடந்தோறும் கரைத்து கொண்டிருக்கும் இளைய சமூகத்தைப் பற்றிய கட்டுரையே இதுவாகும்.

பெரும்பாலான இளைஞர்கள் படித்து முடித்ததும் உடனே தேடுவது ஒரு நல்ல வேலை...! கல்லூரியை விட்டு வெளியில் வந்ததும் அரசாங்கமோ, பெரிய தனியார் நிறுவனமோ 'இந்தா அப்பாயின்மென்ட் ஆர்டர்' என்று தூக்கி கொடுத்து விடாது. 

எனவே இளைஞர்கள் கட்டாயமாக வேலைக்கான தகுதியை வளர்த்து கொள்வதுடன், தனக்கு தகுந்த வேலையை தேடுவதும் அவசியம். ஆனால் வெளியிடங்களில் வேலை தேடியே சோர்ந்து போய் விடுகின்றனர் நம் இளைஞர்கள்.

இவ்வாறு இந்த நாட்டில் வேலை கிடைக்கவில்லை என்று வெளிநாட்டு வேலைக்காக வீடு, நிலத்தை விற்றும், கடன் வாங்கியும் பணம் சேர்த்தவர்கள், இறுதியாக அந்த பணத்தை சம்பாதிப்பதற்காகவாவது உழைப்போம் என அதிகமானோர் தயாராகிவிடுகிறார்கள். பின்பு அவர்கள் சொந்த இடத்திற்கு திரும்பியவுடன், சொந்த நாட்டிலே வேலைதேட முடியாமல் திண்டாடுகின்றனர்.

பெரும்பாலும் வெளிநாட்டு வேலையை தேடிச் செல்பவர்கள், அங்குள்ள நிறுவனங்களின் தரத்தினை தெரிந்துகொண்டு செல்வது மிகவும் அரிதாகும். அவ்வாறு படித்து முடித்தவுடன், எந்தவித முன் அனுபவமும் இல்லாமல் வெளிநாடு செல்வோரின் வேலைவாய்ப்புகள் கேள்விக்குறியாக ஆகிவிடுகின்றன. பொறியியல் போன்ற மேல் படிப்பு படித்தவர்களுக்கு பெரும்பாலும் இந்த பிரச்சினை இல்லை. 

குறைந்த அளவிலான கல்வித் தகுதியை அடிப்படையாகக் கொண்டு தையல், கட்டுமானம், மீன் பிடித்தல், தோட்டத் தொழில், தொழிற்சாலைகள் உள்ளிட்ட வேலைவாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவோரின் நிலைமை பரிதாபத்துக்குரிய நிலைமையாகி விடுகின்றது.

அதிக ஊதியம் வழங்குவதாக ஆசைவார்த்தை கூறி இங்கிருந்து அழைத்துச் செல்லப்படும் தொழிலாளர்கள், அங்கு அடிமைகளாகவும், வேறு பணிகளிலும் ஈடுபடுத்தப்படுவதன் மூலம் படும் இன்னல்கள் அவ்வப்போது பத்திரிகைகளில் செய்திகளாக வெளிவந்தாலும், இதுபோன்ற பல்வேறு சம்பவங்கள் வெளி உலகுக்கு தெரியாமலே போய்விடுகின்றன.

இவ்வளவு சிக்கலை கேட்டும், மக்களிடம் வெளிநாட்டு மோகம் இன்னும் உள்ளதால் வெளிநாட்டில் வேலையை நாடுபவர்கள், முதலில் எந்தெந்த நாடுகளில் என்னென்ன வேலை வாய்ப்புகள் சாத்தியப்படும் என்பது குறித்து அறிய வேண்டும்.

வெளிநாடு செல்ல நினைப்போர் செய்ய வேண்டியவைகள்.

0. இலங்கை அரசின் வெளிவிவகாரத்துறை அமைச்சகத்தின் கீழ் உரிமம் பெற்ற வெளிநாட்டு முகவர்களே, வெளிநாட்டுக்குப் பணியாட்களை அனுப்பும் தகுதி பெற்றவையாகின்றன. ஒருவேளை நீங்கள் வெளிநாட்டு வேலைக்கு ஏதாவது ஒரு வெளிநாட்டு முகவரை அணுகும்பொருட்டு, அவர்களிடம் அரசாங்கத்தின் அனுமதிப்பத்திர எண்ணைக் கேட்டு, அதை அயல்நாட்டு வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் வலைதளத்தை பரிசோதித்துக் கொள்ளுங்கள்

·1 பின் அந்த வெளிநாட்டு முகவருக்கு அரசாங்கத்திடமிருந்து கிடைக்கப் பெற்றிருக்கும் ஆட்கள், தேவைக்கான கோரிக்கை கடித்தில் அளிக்கப்பட்டிருக்கும் வேலை விபரம், சம்பளம், விடுமுறை நாட்கள், விதிமுறைகள் என அனைத்தையும் அந்த கடிதத்தின் மூலம் கேட்டுப் பெற்று, தெரிந்துகொள்ளுங்கள். அந்த கோரிக்கை கடித்தில் வேலை வழங்கும் நிறுவனம், அந்த நாட்டில் பெற்ற அனுமதிப்பத்திர எண் குறிப்பிடப்பட்டிருக்கும்.

·2 அதன் மூலம் அந்த நிறுவனத்தின் நம்பகத்தன்மையை அறிந்து கொள்ளலாம். வேலைக்கு ஆள் எடுக்க, சம்பந்தப்பட்ட நிறுவனம், தன் நாட்டு அரசாங்கத்திடம் இருந்து 'நோ ஒப்ஜெக்ஷன்' கடிதம் வாங்கியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் வேலை பார்ப்பவர், நிறுவனம் இருவருக்கும் அது சிக்கல்களைத் தரும்.

ஆகவே நம்நாட்டிலே ஏராளமான வேலைவாய்ப்புகளும், வியாபார வாய்ப்புகளும் உருவாகி வருகின்றன. வெளிநாட்டு வேலை மோகத்தை ஒழித்துவிட்டு இங்கேயே வேலை, வியாபாரம் செய்தாலும் வாழ்வில் உயரலாம்" என்ற எண்ணக் கருவை மனதில் பதித்துக் கொள்வது சிறந்ததாகும்.