பாகிஸ்தானில் பிடிபட்டுள்ள இந்திய விமானப்படையின் விமானி அபிநந்தன் எவ்வித ஆபத்துமின்றி நாடு திரும்ப வேண்டுமென பாகிஸ்தானின் லாகூர் நகரில் பொதுமக்கள் பதாகைகளை ஏந்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் புகைப்படங்கள் சமூக வளைத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றது.

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள தீவிரவாத முகாம்களில் தாக்குதல் மேற்கொண்டது.

இதற்கிடையில் இருநாடுகளுக்கிடையிலான எதிர்த்தாக்குதல்கள் அதிகமாக இருந்து வந்ததோடு, அவ்விரு நாடுகளிலும் போர் பதற்றம் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் இரு நாடுகள் இடையேயும் பதற்றம் சூழ்ந்த நிலையை தணிக்கும் முயற்சியில் உலக நாடுகள் பலவும் இறங்கியதோடு, இந்திய இராணுவ விமானியான அபிநந்தனை விடுதலை செய்யக்கோரி பல தரப்பினர் பாகிஸ்தான் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனிடையே அபிநந்தனை உடனடியாக பாகிஸ்தான் விடுதலை செய்ய வேண்டும் என இந்திய மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் பாராளுமன்ற கூட்டத்தில் பேசிய அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான்,  அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் நாளை (01.03.2019 இன்று ) விடுவிக்கப்படுவார் என அறிவித்தார்.

பாகிஸ்தான் பிரதமரின் முடிவுக்கு உலக நாடுகள் உட்பட இந்தியாவிலும் பலத்த வரேவேற்பு கிடைத்தது.

எனினும் இந்திய விமானி அபிநந்தன் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும் என்ற வேண்டுகோளுடன் பாகிஸ்தானைச் சேர்ந்த பலரும்  போர் வேண்டாம் என  பதாகைகளை ஏந்தி வண்ணம்   லாகூரில் ஒன்று கூடி , விமானியின் விடுதலைக்கு ஆதரவாக கவயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.