(இராஜதுரை ஹஷான்)

குற்றவாளிகளை மீண்டும் ஆட்சிக்கு அமர்த்திவிட்டு ஊழலுக்கு எதிராக போராடும் தகுதி மக்கள் விடுதலை முன்னணியினருக்கு கிடையாது என பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜயசேகர தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் குறிப்பிட்ட அவர், 

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை சுட்டிக்காட்டி  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26 ‍ஆம் திகதி ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார் .   

இதன்போது பிணைமுறி முறைகேடுகளும், குற்றவாளிகளை அரசாங்கம் பாதுகாத்தமையினையும் பொருட்படுத்த முடியாமையின் காரணமாகவே ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தியதாகவும் ஜனாதிபதி மக்களுக்கு  விசேட  உரை நிகழ்த்தினார். 

ஆனால் இடைக்கால அரசாங்கத்திற்கும் மக்கள் விடுதலை முன்னணியே எதிராக செயற்பட்டு மீண்டும் பிணைமுறி  ஊழல்வாதிகளிடம் ஆட்சியினை பெற்றுக்கொடுக்க வழிமுறைகளை ஏற்படுத்தியது எனவும் சுட்டிக்காட்டினார்.