உலகின் மாபெரும் இரகசிய ஆவணக்கசிவு “பனாமா பேப்பர்ஸ்”

Published By: Raam

11 Apr, 2016 | 07:51 AM
image

உலக வரலாற்றில் மாபெரும் இரகசிய ஆவணங்களின் கசிவான ‘பனாமா பேப்பர்ஸ்’ ஆவணக் கசிவு இலங்கை உட்பட உலகமெங்குமுள்ள பல செல்வந்தர்களையும் அதிகாரத்திலுள்ளவர்களையும் கதிகலங்க வைத்துள்ளது.

இரகசியமாக சொத்துக்களையும் பணத்தையும் பதுக்கி வைத்திருந்தவர்களும் பொருளாதார தடை விதிப்புகளை துச்சமென மதித்து அவற்றின் கண்ணில் மண்ணைத் தூவிக் கொண்டிருந்தவர்களும் சட்டவிரோதமாக கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டிருந்த வர்களும் தாம் எப்போதும் சட்டத்தின் விசாரணைப்பிடியில் சிக்கலாம் என்ற அச்சத்தில் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

உலகை உலுக்கிய இந்த ஆவணக் கசிவுகளின் மூலாதாரமாக பனாமாவை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் மொஸாக் பொன்ஸேகா என்ற சட்ட நிறுவனம் விளங்குகிறது.

அந்த நிறுவனம் உலகமெங்கும் அலுவலகங்களைச் செயற்படுத்தி அதிகாரத்தில் உள்ளவர்களதும் பிரபலங்களினதும் செல்வந்தர்களதும் சொத்து மற்றும் பணப் பதுக்கல் நடவடிக்கைகளுக்கு உதவி வருகின்றமை ‘பனாமா பேப்பர்ஸ்’ ஆவணக் கசிவின் மூலம் அம்பலமாகியுள்ளது.

மொஸாக் பொன்ஸேகா நிறுவனத்திலிருந்து கசிந்த 11.5 மில்லியன் இரகசிய ஆவணங்கள் உலகமெங்குமுள்ள 214000 க்கு மேற்பட்ட வெளிநாட்டுக் கம்பனிகள் குறித்து அந்த கம்பனிகளின் பங்குதாரர்கள் மற்றும்  பணிப்பாளர்களை ஆளடையாளப்படுத்துவது உள்ளடங்கலான தகவல்களை வழங்குகின்றன.

ஆர்ஜெண்டீனா, ஐஸ்லாந்து, சவூதி அரேபியா, உக்ரேன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் தற்போதைய அரசாங்கத் தலைவர்களும் பிரேசில், சீனா, பேரு, பிரான்ஸ், இந்தியா, மலேசியா, மெக்ஸிக்கோ, பாகிஸ்தான், ரோமானியா, ரஷ்யா, தென் ஆபிரிக்கா, ஸ்பெயின், சிரியா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் உள்ளடங்கலாக 40 க்கு மேற்பட்ட ஏனைய நாடுகளது அரசாங்கத் தலைவர்களது நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் அரசாங்க அதிகாரிகளும் எவ்வாறு தமது செல்வத்தை பதுக்கி வைத்துள்ளனர் என்ற தகவல்களை மேற்படி கசிந்த ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன.

அந்த ஆவணங்கள் 12 தற்போதைய மற்றும் முன்னாள் அரசாங்கத் தலைவர்களும் அரசாங்கத் தலைவர்களுக்கும் ஏனைய அரசியல் வாதிகளுக்கும் நெருக்கமான 60 க்கு மேற்பட்ட உறவினர்களும் நண்பர்களும் தமது சொந்த நாட்டு பணத்தை களவாடியுள்ளதாக குற்றஞ்சாட்டுகின்றன.

மொஸாக் பொன்ஸேகாவால் அதி இரகசியமாக பாதுகாப்பாக பேணப்பட்ட இந்த ஆவணங்கள் எவ்வாறு கசிந்தன என்பது அறியப்படாதுள்ளது.

மொஸாக் பொன்ஸேகா நிறுவனமானது அந்தக் கசிவுகள் தனது நிறுவனத்திலுள்ளவர்களினால் மேற்கொள்ளப்படவில்லை என வலியுறுத்தியுள்ளது.

1977 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 40 வருட காலத்திலான ஆவண தரவுகளை உள்ளடக்கிய மேற்படி 2 .6 ரெராபைட்ஸ் அளவான தரவுகள் கணினிகளை ஊடுறுவி தகவல்களைத் திருடும் வெளியாரால் களவாடப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் கூறுகிறது.

மேற்படி தரவுகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அனாமதேய வட்டாரமொன்றால் ஜேர்மனியின் மிகப் பெரிய தினசரியான சட்டெயுட்ச் ஸெய்துங்கிற்கு வழங்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து அந்த ஆவணங்கள் அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் சர்வதேச புலனாய்வு ஊடகவியலாளர்கள் அமைப்பிடம் கையளிக்கப்பட்டது.

இதனையடுத்து அந்த ஊடகவியலாளர் அமைப்பு தனக்குக் கிடைக்கப் பெற்ற  அந்தப் பெருந்தொகையான தரவுகளை உள்ளடக்கி குழப்பகரமாகவுள்ள அந்த ஆவணங்களை பகுப்பாய்வு செய்வதற்காக அவற்றை 80 க்கு மேற்பட்ட நாடுகளிலுள்ள 107 ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 400 ஊடகவியலாளர்களுக்கு விநியோகித்தது.

அவ்வாறு பகுப்பாய்வு செய்யப்பட்ட மேற்படி ஆவணங்கள் தொடர்பான முதலாவது அறிக்கை கடந்த 3 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை வெளியாகியுள்ளது.

அதே சமயம் மொஸாக் பொன்ஸேகா நிறுவனத்துடன் தொடர்புபட்ட முழு கம்பனிகளதும் பட்டியல் எதிர்வரும் மே மாத ஆரம்பத்தில் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மொஸாக் பொன்ஸேகா நிறுவனத்தால் வெளிநாடுகளில் செயற்படுத்தப்பட்டு வந்த கம்பனிகள் தனக்கென குறிப்பிடத்தக்க சொத்துக்களையோ செயற்பாடுகளையோ கொண்டிராது வர்த்தக பரிமாற்றங்களுக்கான ஊடகமாக சேவைகளை வழங்கி வந்துள்ளன. அவ்வாறான கம்பனிகளை செயற்படுத்துவது சட்ட விரோதமானதல்ல எனினும் அத்தகைய கம்பனிக்ள அந்தரங்கமாக வரி ஏய்ப்புகளுக்கும் நிதி மோசடிகளுக்கும் பயன்பட்டு வருகின்றன.

மேற்படி ஆவணங்களின் கசிவால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி தனது பதவியையே துறக்கும் நிலைக்கு ஐஸ்லாந்து பிரதமர் சிக்மண்டர் டேவிட் கன்லாக்ஸ்கன் தள்ளப்பட்டிருந்தார்.

அவர் தனது மனைவிக்கு சொந்தமான கம்பனியில் தனது வரி வருமானத்தை மறைத்து வைத்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது. 

இதன் மூலம்,  ஐஸ்லாந்து சட்டம் எதனையும் அவர் மீறவில்லை என்ற போதும் அவரது வெளிப்படைத்தன்மையில்லாத செயற்பாடு குறித்து நாடளாவிய ரீதியில் அவர் கடும் எதிர்ப்பை எதிர் கொண்டதால் பதவி விலகும் நிர்ப்பந்தத்துக்கு உள்ளானார்.

மேலும் இந்த ஆவணங்கள் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு நெருக்கமானவர்கள் சந்தேகத்துக்கிடமான பல பில்லியன் டொலர் பண மோசடி வலைப்பின்னலுடன் தொடர்பு கொண்டுள்ளதை அம்பலப்படுத்தியுள்ளன. 

அத்துடன் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோனின் மறைந்த தந்தை லான் கமெரோன் மொஸாக் பொன்ஸேகாவின் வாடிக்கையாளர் என அந்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கின் குடும்ப உறுப்பினர்களும் அந்நாட்டின் அதிகாரத்துவம் பொருந்திய சபையின் ஏனைய உறுப்பினர்கள் இருவரும் வெளிநாடுகளில் செயற்பட்டு வந்த நிறுவனங்களுடன் தொடர்பைக் கொண்டுள்ள தாக அந்த ஆவணங்களில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சீன அரசாங்கம் இது தொடர்பில் விமர்சனம் எதனையும் வெளியிட மறுத்துள்ளது. எனினும் மேற்படி விவகாரம் குறித்து சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை தணிக்கை செய்ய கோரப்பட்டுள்ளது. 

ஆர்ஜென்டீனா ஜனாதிபதி மௌரிசியோ மாகிறை, சவூதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல்லாஸிஸ், உக்ரேனிய ஜனாதிபதி பெட்ரோ பொரோ ஷென்கோ, ஜஸ்லாந்து பிரதமர் சிக்மன்டர் டேவிட் கன்லாக்ஸன், ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதி கலிபா ஸெய்த் பின் சுல்தான் ,ஜோர்ஜிய முன்னாள் பிரதமர் பிட்ஸினா ஜவனிஷ்விலி, ஈராக்கிய முன்னாள் பிரதமர் அயத் அல்லாவி, ஜோர்தான் முன்னார் பிரதமர் அலி அபு அல் ராகெப், கட்டார் முன்னாள் பிரதமர் ஹமான் பின் ஜஸிம், கட்டார் முன்னாள் ஆட்சியாளர் கலிபா அல் தானி, சூடான்  முன்னாள் ஜனாதிபதி அஹ்மட் அலி அல் மிர்கானி, முன்னாள் உன்ரேனிய பிரதமர் பவ்லோ லஸரென்கோ ஆகியோரே பனாமா பேப்பர்ஸ் ஆவணங்களில் குறிப்பிடப்பட்ட 12 தற்போதைய மற்றும் முன்னாள் தலைவர்களாவர். 

 எனினும் அந்தத் தலைவர்களில் அநேகர் தாம் எதுவித குற்றச் செயற்பாட்டிலும் ஈடுபடவில்லை என வாதிட்டு வருகின்றனர். ஏனையோர் எதுவித விமர்சனத்தையும் வெளியிடாது மௌனம் சாதித்து வருகின்றனர்.

பாகிஸ்தானிய பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் மூன்று மகன்மாரில் ஒருவரான ஹுஸைன் ஷெரீப் வெளிநாடொன்றில் சொத்துக்களைக் கொண்டிருப்பதாக மேற்படி ஆவனங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஹுஸைன் தான் எதுவித தவறையும் செய்யவில்லை என வாதிட்டும் வருகின்றார். 

மேற்படி ஆவணக்கசிவில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள 800 தனிநபர்களிடம் அவுஸ்திரேலிய வரி அலுவலகம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. 

அதே சமயம் இது தொடர்பில் பிரித்தானியா, ஆஸ்திரியா, பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து உள்ளடங்களாக உலகின் பல நாடுகளில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

மொஸாகா பொன்ஸேகா நிறுவனம் பொருளாதார தடைகளை எதிர்கொண்டுள்ள ஈரான், வடகொரியா, ரஷ்யா, சிரியா உள்ளடங்களான நாடுகளின் நிறுவனங்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுக்கவும் வர்த்தக பரிமாற்றங்களை மேற்கொள்ளவும்  உதவிவந்துள்ளதாக பனாமா பேப்பர்ஸ் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் 'பனாமா பேப்பர்ஸ்'ஆவணக் கசிவில் எச்.எஸ்.பி.சி,  கிரெடிட் சுஸி, ஸ்கொட்லான்ட் ரோயல் வங்கி உள்ளடங்களாக வங்கிகளின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. 

அந்த வங்கியின் பொருளாதார தடைகளை எதிர்கொண்டுள்ள நாடுகளைச் சேரந்த முக்கியஸ்தர்களுக்கு பணப்பரிமாற்றங்களை மேற்கொள்ள உதவியதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. 

அத்துடன் இந்த வங்கிகள் உலகமெங்குமுள்ள வர்கள் பண லஞ்சம் பெறுதல், வரி ஏய்ப்பு செய்தல் என்பவற்றுக்கு உதவியுள்ளதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. எனினும் அந்தக் குற்றச்சாட்டை அந்த வங்கிகள் மறுத்து வருகின்றன. 

'பனாமா பேப்பர்ஸ்'   ஆவணத்தில் இலங்கை

ஜரிஸ் டைமஸ் ஊடகத்தால் வெளியிடப்பட்ட உலக வரைப்படத்தில் மேற்படி ஆணவக் கசிவில் உள்ளடங்கிய நாடுகளில் ஒன்றாக இலங்கை குறிப்பிடப்பட்டுள்ளது. 

அந்த ஆவணப்பட்டியலில் 43 வாடிக்கையாளர் மற்றும் 22 பங்குதாரர்களுடன் 3 இலங்கைக் கம்பனிகள் உள்ளதாக 'ஜரிஸ் டைமஸ்'  தெரிவிக்கிறது. 

இது தொடர்பான முழுமையான தகவல்கள் வெளிவரும் பட்சத்தில் இலங்கையில் அதிகாரத்துவம் மிக்க பதவிகளில் இருந்தவர்களால் மேற்கொள்ளப்பட்ட கடந்த கால மற்றும் நிகழ்கால ஊழல்கள் அம்பலத்துக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

பிரான்பரன்ஸி இன்டர் நஷனலால்  2002 ஆம் ஆண்டுக்கும் கடந்த ஆண்டுக்கும் இடையில் வெளியிடப்பட்ட ஊழலுக்கு எதிரான சுட்டெண்ணில் இலங்கை ஊழல் நிலை சராசரியாக 81.79 ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மொஸாகா பொன்ஸேகாவுடனான சுமார் 15,600  கம்பனிகளுடன் 500க்கு மேற்பட்ட வங்கிகள் தமது கிளைகள் மற்றும் உப நிறுவனங்களை உள்ளடக்கி பதிவு செய்துள்ளன. 

இந்தக் கம்பனிகள் பணத்தின் நிஜ உரிமையாளர்களையும் பணம் எங்கிருந்து பெறப்பட்டது என்பதையும் மறைத்து அந்தப் பணத்திற்கு வரி செலுத்தாது தப்பிக்க உதவுகின்றன.

மேற்படி வெற்றுக் கோதுகள் போன்ற கம்பனிகன் தனக்கென எதுவித சொத்துகளை கொண்டிராத போதும் தன்னால் கையாளப்படும் பணத்தின் உண்மையான உரிமையாளர்களை மறைத்து தனது பெயரில் பரிமாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. 

கசிந்த தரவுகள், கடவுச் சீட்டு விபரங்கள் உள்ளடங்களாக தனிப்பட்ட தகவல்கள் குற்றச் செயற்பாடுகளில் சம்பந்தப்படாத தரவுகள்  என்பனவற்றையும் உள்ளடக்கி பாரியதாக காணப்படுகின்றன. தற்போது வெளியாகியுள்ள ஆவணக் கசிவுகள் உலகளாவிய ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மே மாத ஆரம்பத்தில் வெளியிடப்படவுள்ள எஞ்சிய ஆவண இரகசியங்கள் உலகில் மறைவாக மேற்கொள்ளப்படும் மேலும் பல உழல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் என்பதில் சந்தேகமில்லை.

இதற்கு முன் வெளிவந்து பரப்பரப்பை ஏற்படுத்தியிருந்த விக்கிலீக்ஸ் ஆவணக் கசிவுடன் ஒப்பிடுகையில் பனாமா ஆவணக் கசிவு பாரிய அளவான ஒன்றாக கருதப்படுகிறது. விக்கிலீக்ஸ்  ஆவணத்தின் கசிவை சிறிய நகரொன்றின் அளவிற்கு ஒப்பிடும் ஆய்வாளர்கள் பனாமாக கசிவை இந்தியா போன்ற ஒரு நாட்டின் அளவிற்கு ஒப்பிடுகின்றனர். 

இந்த ஆவணக் கசிவுகள் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அவர்கள் பராபட்சமற்ற முறையில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது அவசியமாகவுள்ளது. 

© 2016. Virakesari. All Rights Reserved. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நிலையான தீர்வுகளுக்கான தேசிய கொள்கை அவசியம்...

2025-02-07 11:00:58
news-image

பிள்ளையானிற்கு பிணை கிடைக்க உதவிய பசில்...

2025-02-06 16:41:49
news-image

வலிமையானவர்கள் தோல்வியுற்ற இடத்தில் - இலங்கையில்...

2025-02-05 21:23:34
news-image

ஊடகவியலாளர்களே அலட்சியப்படுத்தாது உங்கள் பாதுகாப்பை உறுதிசெய்யுங்கள்...

2025-02-05 17:05:14
news-image

பாராளுமன்றத்துக்கு வெளியே சுத்தப்படுத்த வேண்டியவை…!

2025-02-05 17:19:24
news-image

லசந்தவின் வாகனச்சாரதியை கடத்தியவர் ; லசந்தவின்...

2025-02-05 16:21:31
news-image

பாரதிய ஜனதாவின் உள்நாட்டு அரசியல் நிகழ்ச்சி...

2025-02-05 09:56:52
news-image

எதிர்காலத்துக்காக ஈரநிலங்களைப் பாதுகாப்போம்!

2025-02-04 17:15:47
news-image

இராணுவத்தை போற்றி பாதுகாக்கும் பாரத இந்தியா

2025-02-04 13:34:29
news-image

ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயமும் அதன் தாக்கங்களும்

2025-02-04 10:59:53
news-image

முன்னெச்சரிக்கையால் பாதிப்பை குறைத்து புற்றுநோயை வெல்வோம்!...

2025-02-04 11:05:21
news-image

2025க்கான ஒதுக்கீடு சட்டமூலமும் பொருளாதார நோக்கும்

2025-02-03 20:08:27