தாலி கட்டும் நேரத்தில் ஓடிசென்ற காதலன் மீது புகார் கொடுக்க, சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு தாம்பாளத் தட்டில் பட்டு வேஷ்டி - சேலை, தாலி எடுத்து சென்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

 சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்தவர் கௌரி நேற்று தாய் ஈஸ்வரி மற்றும் உறவினர்களுடன் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு ஒரு தாம்பாளத் தட்டில் பட்டு வேஷ்டி - சேலை, தாலி ஆகியவற்றை வைத்து எடுத்து சென்றுள்ளார்.

பாதுகாப்பு பணியிலிருந்த பொலிஸார், அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். 

இதன் போது “நானும் எனது ஊரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தோம். இதனால் நான் கர்ப்பமானேன். இதை அவரிடம் தெரிவித்தபோது, ‘கருவை கலைத்து விட்டு வா; உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்’ என்றார். நானும் அவர் கூறியபடி கருவை கலைத்தேன். ஆனால், அவர் என்னை திருமணம் செய்ய மறுத்து விட்டார்.

இதுகுறித்து மேச்சேரி பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். பொலிஸார் அவரை அழைத்து விசாரணை நடத்தினர் அப்போது, என்னை திருமணம் செய்துகொள்வதாக உறுதி அளித்தார். அதை நம்பி நாங்கள் அங்காளம்மன் கோயிலில் வைத்து திருமணம் செய்ய ஏற்பாடு செய்தோம். அதற்காக பட்டு வேஷ்டி - சேலை, தாலி ஆகியவற்றை வாங்கினோம்.

ஆனால் குறித்த இளைஞர், அவருடைய பெற்றோர் பேச்சைக் கேட்டு என்னை  திருமணம் செய்ய மறுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

எனவே, என்னை காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். இதையடுத்து பொலிஸார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.