வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் மீண்டும் சர்ச்சையான நிலை ஏற்பட்டுள்ளது.

வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் வவுனியா மதவுவைத்தகுளம் பகுதியில் 291 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. 

2015 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், குறித்த பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கான இட தெரிவு தொடர்பில் பல்வேறு குழப்ப நிலைகள் மக்கள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் ஏற்பட்டிருந்தது. 

இந்த நிலையில் இறுதியாக வவுனியா, மதவுவைத்தகுளம் பகுதியில் இரண்டரை ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டு அதன் பூர்வாங்க வேலைகள் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அப்போதைய கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஹரிசனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

தற்போது அதன் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதில் உள்ள வர்த்தக நிலையங்களை வழங்குவது தொடர்பாக கவனம் செலுத்தப்படுகிறது. குறித்த பொருளாதார மத்திய நிலையத்தில் 50 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இதில் 35 கடைகளை ஏற்கனவே வவுனியா நகர்ப்பகுதியில் மொத்த மரக்கறி நிலையத்தில் வியாபாரம் செய்பவர்களுக்கு வழங்க முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டும் என மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அவற்றையும் திறந்த கேள்வி மூலம் வழங்கவுள்ளதாக கூறப்படும் நிலையில் மீண்டும் சர்ச்சையான நிலை தோன்றியுள்ளது.

இதனையடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்கு குறித்த விடயம் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு அவர் தெரிவித்துள்ளார். 

அத்துடன் உள்ளூர் விவசாய செய்கையாளர்கள் தமக்கும் குறித்த பொருளாதார மத்திய நிலையப் பகுதியில் உள்ள கடைத்தொகுதியில்  குறிப்பிட்ட வீதத்தில் கேள்வி கோரல் இல்லாது தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது கட்டி முடிக்கப்பட்ட நிலையில் கடைகளை எவ்வாறு வழங்குவது என்ற குழப்பத்துடன் பொருளாதார மத்திய நிலையம் தற்போது காணப்படுகின்றது.