சாவகச்சேரி தொகுதியின் தென்மராட்சி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட மறவன்புலோ பகுதியில் அமைக்கப்படும் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் சந்தித்து பேசியுள்ளார்.

இந்த சந்திப்பில் கலந்துகொண்ட பிரதேச மக்கள்,

குறித்த காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்கள் தமது குடிமனைகளில் இருந்து 100மீற்றருக்கும் குறைவான தூரத்தில் அமைந்திருப்பதாகவும், காற்றாலை உற்பத்திக்காக பயன்தரு கடற்கரை மரங்களை அழித்து வருவதாகவும், குறித்த நிறுவன பணிகளுக்காக நாளாந்தம் நான்கு பவுசர் தண்ணீர் விவசாயக் குளங்களில் இருந்து எடுக்கப்படுவதாகவும், இதனால் கால்நடைகள் மற்றும் விவசாயத்திற்கு நீர் இல்லாமல் போவதாகவும், தமது மீன்பிடித் தொழில் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்தனர். 

மேலும்  குறித்த நிறுவனம் 17 பேருக்கு யுத்த காலத்திற்கு முன்னர் வழங்கப்பட்ட அனுமதி பத்திர  காணியினை சட்டத்திற்கு முரணான வகையில் கொள்வனவு செய்து, காற்றாலை மின் உற்பத்தி பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், இதுவரை குறித்த நிறுவனம் மறவன்புலோ பகுதியில் காற்றாலை அமைப்பதற்கு, தென்மராட்சி பிரதேச செயலகம், ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மற்றும் சாவகச்சேரி பிரதேச சபையில் எந்தவொரு அனுமதியையும் பெறவில்லை எனவும் ஆதாரத்துடன் தெரிவித்திருந்தனர்.

இவ்வாறான பாரிய அபிவிருத்திகளை முன்னெடுக்கும் போது பிரதேச செயலகம் மற்றும் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களில் உரிய அனுமதியைப் பெற்று ஆரம்பித்திருக்க வேண்டும். வரும் அபிவிருத்தியைத் தடுக்கக் கூடாது. ஆனால் அதே அபிவிருத்தி மக்களுக்கு பாதிப்பு என்றால் அதனை அனுமதிக்க முடியாது. காற்றாலை உற்பத்தி நிலையங்கள் மக்கள் குடியிருப்பில் இருந்து இவ்வளவு தூரத்தில் தான் இருக்க வேண்டும் என்ற ஒரு உத்தேச அளவு விஞ்ஞான ரீதியான கணிப்பிடப்பட்டிருந்தால் அந்த அளவுப் பிரமாணத்திற்கு குறைவான தூரத்தில் காற்றாலை அமைக்க அனுமதிக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இதன்போது தெரிவித்திருந்தார்.