பனாமா நாட்டில் சட்டவிரோதமாக பணம் பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியலில் தனது பெயரும் இடம்பெற்றிருப்பது தொடர்பாக அமிதாப் பச்சன் விளக்கமளித்துள்ளார்.

அமிதாப் பச்சன் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சமீபத்தில் என்னைப்பற்றி சில நாளிதழ்களில் உண்மைக்கு புறம்பான வகையில் கட்டுரைகளும், செய்திகளும் வெளியாகி வருகின்றன.

'பனாமா பேப்பர்ஸ்' என்ற கள்ளத்தனமான பணப்பரிவர்த்தனை தொடர்பாக வெளிவரும் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு நிறுவனங்களிலும் நான் எந்தக் காலத்திலும் இயக்குநராக இருந்தது கிடையாது.

பனாமா நாட்டில் இந்திய பிரபலங்கள் குவித்து வைத்திருப்பதாக கூறப்படும் கறுப்புப் பணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த இந்திய அரசு உத்தரவிட்டிருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்துள்ளேன். இந்த பட்டியலில் எனது பெயர் இடம்பெற்றிருப்பது எப்படி? என்பதை இந்த விசாரணையின் மூலம் அறிந்துக்கொள்ள நானும் ஆவலாக இருக்கிறேன்.

என்மீதான இந்த குற்றச்சாட்டுகள் வெளியானதில் இருந்து மராட்டிய மாநிலத்தின் புலிகள் பாதுகாப்பு பிரசார தூதர் பதவியிலிருந்து என்னை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இது, மராட்டிய மாநில அரசின் காழ்ப்புணர்வு நடவடிக்கை. இதை நான் தாழ்மையான மரியாதையுடன் ஏற்றுக் கொள்கிறேன்.

யார் எந்த முடிவை எடுத்தாலும், சமூக நலனுடன் தொடர்புடைய புலிகள் பாதுகாப்பு பிரசாரம், போலியோ ஒழிப்பு, தூய்மை இந்தியா திட்டம், காசநோய் ஒழிப்பு, ஹெபிடைட்டிஸ்-பி, நீரிழிவு விழிப்புணர்வு பிரசாரம், குடும்பக் கட்டுப்பாடு பிரசாரம் உள்ளிட்ட அனைத்து பிரசாரங்களிலும் என்னுடைய தனிமனித உழைப்பு என்றென்றும் இருக்கும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்பிகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.