சர்வதேச இருபதுக்கு 20 கிரக்கெட் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்ப்பந்து வீச்சாளம் ரஷித் கான் 4 பந்துகளின் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரானது இந்தியாவின் உத்தரகாண்டில் நடைபெற்று வந்தது.

இதில் முதல் இரு போட்டிகளை வெற்றிகொண்டு ஆப்கானிஸ்தான் தொடரை கைப்பற்றியுள்ள நிலையில் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி நேற்று இடம்பெற்றது.

இதில் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 210 ஓட்டங்களை குவித்தது.

211 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 20 ஓவர்களின் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 178 ஓட்டங்களை குவித்து 32 ஓட்டத்தினால் தோல்வியை தழுவியது. 

பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் சுழல் புயல் ரஷித் கான் 4 ஓவர்களில் 27 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியதுடன், ஹெட்ரிக் உட்பட தொடர்ச்சியாக 4 பந்துகளில் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தித் தள்ளினார்.  

இதன் மூலம் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். 

இந்த தொடரை ஆப்கானிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் வசப்படுத்தியது.

20 வயதுடைய ரஷித் கான் இதுவரை 38 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி 75 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.