வடக்கில் அரசியல் தரப்புக்களும் உயர்மட்ட வர்த்தகர்களுமே போதைப்பொருள் விற்பனையின் பின்னணியில் - ரஞ்சன் விசேட செவ்வியில் தெரிவிப்பு

Published By: Priyatharshan

24 Feb, 2019 | 09:16 AM
image

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் அங்கு போதைப்பொருளை விற்பனை செய்யவில்லை. வடக்கில் அரசியல் தரப்புக்களும், உயர்மட்ட வர்த்தகர்களும் தான் அதன் பின்னணியில் இருக்கின்றார்கள் என வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியின்போது தெரிவித்த நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, போதைப்பொருள் பயன்படுத்தும் அரசியல்வாதிகளில் தமிழ் பேசுபவர்களும் இருக்கின்றார்கள். அதற்கான சான்றுகளும் என்னிடத்தில் உள்ளன எனவும் இதன்போது தெரிவித்தார்.

அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு,

கேள்வி:- அமைச்சர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் போதைப்பொருட்களைப் பயன்படுத்துகின்றார்கள் என்று திடீரென வெளிப்படுத்தியமையின் பின்னணி என்ன?

பதில்:- நான் திடீரென்று எதனையும் வெளிப்படுத்தவில்லை. சரியான தகவல்களைப் பெற்று அவற்றை உறுதிசெய்த பின்னர் தான் வெளிப்படுத்தினேன். கடந்த காலங்களில்   பிரதமர், அமைச்சர்கள், இராஜாங்க, பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், போதைப்பொருள் கடத்தல்கள் மற்றும் விநியோகத்துடன் தொடர்புபட்டுள்ளார்கள் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன. சில அரசியல் தரப்பினர் மீது தற்போதும் அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வழக்குகள் பதிவாகி அவற்றின் மீது விசாரணைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. ஆகவே இத்தகைய பின்னணிகள் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து இரண்டு மூன்று ஆண்டுகளாக நான் இந்த விடயங்கள் தொடர்பில் தொடர்ச்சியாக ஆழமாக அலசி ஆராய்ந்த பின்னரே கருத்துக்களை முன்வைத்துள்ளேன்.

கேள்வி:- இருப்பினும் மாகந்துரே மதுஷ் உள்ளிட்டவர்கள் டுபாயில் கைதுசெய்யப்பட்டு சொற்ப நாட்களில் தானே இத்தகைய தகவலை வெளியிட்டிருக்கின்றீர்கள்?

பதில்:- அவ்வாறில்லை, சிறுவர் துஷ்பிரயோகம், படுகொலைகள், போதைப்பொருள் கடத்தல்கள் வியாபாரம் போன்றவை தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்திவந்துள்ளதோடு அவற்றை நிறுத்துவதற்காக தொடர்ச்சியாக குரல்கொடுத்தும் வந்திருந்தேன். நீர்கொழும்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் செயற்பாடு குறித்து பகிரங்கப்படுத்தியதால் எனக்கு எதிராக 200 கோடி ரூபா கோரி நீர்கொழும்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் மதூஷ் டுபாயில் கைது செய்யப்பட்ட பின்னர் நெடுஞ்சாலைகள் தொடர்பில் களஆய்வுகளைச் செய்வதற்கான பயணத்தில் அவ்விடயத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் என்றவகையில் நானும் பங்கேற்றிருந்தேன். அதன்போதே ஊடகவியலாளர்கள் போதைப்பொருள் வியாபாரத்தினை தடுத்து நிறுத்த முடியாதா என்று என்னிடத்தில் கேள்வி எழுப்பினார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில் தான் அரசியல்தரப்பினரே போதைப்பொருட்களை பயன்படுத்திக் கொண்டும் அவற்றை வியாபாரம் செய்வதன் பின்னணியிலும் செயற்படுகின்றார்கள் என்பதை சுட்டிக்காட்டியிருந்தேன். அதன் பின்னரே இவ்விடயம் பகிரங்கமானது.

கேள்வி:- நீங்கள் வெளிப்படுத்தியுள்ள பாரிய குற்றச்சாட்டுகள் நாட்டின் அரசியல் களத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில் அக்கூற்றிலிருந்து பின்வாங்காது தற்போதும் உறுதியாக இருக்கின்றீர்களா?

பதில்:- ஆம், அமைச்சர்கள், இராஜாங்க, பிரதி அமைச்சர்களின் கொக்கெய்ன் உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்துபவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் எமது கட்சிக்காரர்களாகவும் இருக்கலாம் வேறு கட்சியைச் சார்ந்தவர்களாகவும் இருக்கலாம். கடந்த அமைச்சரவையில் அங்கம் வகித்த, தற்போதை ஆட்சியிலிருக்கின்ற அரசாங்கத்தின் அமைச்சரவையில் இருக்கலாம் அவ்வாறானவர்கள் உள்ளார்கள். அந்தக்கருத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லை என்பதில் திடமாகவே இருக்கின்றேன். அக்கருத்துக்களிலிருந்து என்றும் பின்வாங்கப்போவதில்லை.

கேள்வி:- போதைப்பொருள் பயன்படுத்தும் அரசியல் தரப்பின் பட்டியலை குறிப்பிடுவீர்களா?

பதில்:- ஆதாரங்களை உங்களுடன் பகிரமுடியாது. சபாநாயகருடன் நான் தொலைபேசி ஊடாக கலந்துரையாடியுள்ளேன். விரைவில் அவருக்கு எழுத்து மூலமாக அறிவிப்பேன். தற்போது பதிவுத்தபால் மூலமாக குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு பெயர் பட்டியலை அனுப்பி வைத்துள்ளேன். அத்துடன் எனது வாக்கு மூலத்தினை குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்குவதற்காக நேரமொன்றை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளேன்.

கேள்வி:- எத்தனை பேர் வரையிலானவர்களின் தகவல்கள் உங்களிடத்தல் உள்ளன?

பதில்:- வியாபாரத்தில் இருப்பவர்கள், பின்னணியில் இருப்பவர்கள், பயன்படுத்துபவர்கள் எனப்பலர் பற்றிய தகவல்கள் உள்ளன. தற்போதைக்கு 24பேரின் ஆதரங்களுடனான தகவல்கள் உள்ளன. ஒரு விடயத்தினை வேண்டுமென்றால் என்னால் கூறமுடியும். போதைப்பொருள் பயன்படுத்தும் அரசியல்வாதிகளில் தமிழ் பேசுபவர்களும் இருக்கின்றார்கள். அதற்கான சான்றுகளும் என்னிடத்தில் உள்ளன.

கேள்வி:- நீங்கள் வெளிப்படுத்தியுள்ள கருத்துகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில் நால்வர் கொண்ட குழுவொன்று உங்கள் கட்சியாலேயே நியமி;க்கப்பட்டுள்ளமையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:- கட்சி சார்பில் அவர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கையை எடுத்திருக்கின்றார்கள்.  

கேள்வி:- அக்குழுவால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை பற்றி?

பதில்:- என்னால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் உண்மையானவை என்பதை வெளிப்படுத்தும் வகையில் உதாரணங்களுக்காக வாய்மூலம் சிலரின் பெயர்களை குறிப்பிட்டுள்ளேன். அத்துடன் விசாரணை குழுவின் வினாக்கள் சிலவற்றுக்கும் பதிலளித்தேன். கட்சியின் உள்ளக விடயம் என்பதால் அதனை பகிரங்கமாக கூறமுடியாது.

கேள்வி:- உங்களுடைய கட்சியை அல்லது கூட்டணியைச் சார்ந்தவர்கள் காணப்படுவார்களாயின் அவற்றை வெளிப்படுத்துவதில் அழுத்தமான நிலைமைகள் ஏற்படுமென்று கருதுகின்றீர்களா?

பதில்:- ஒருபோதும் இல்லை. நான் பல விடயங்களை வெளிப்படுத்தியிருக்கின்றேன். அவை பொய்த்துப்போகவில்லை. அதனடிப்படையில் அழுத்தமான நிலைமைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்றே கருதுகின்றேன். ஆனாலும் 'வணக்கம் செலுத்துவதற்கு தேவாலயத்திற்கு செல்கின்றபோது தலையில் இடிந்து விழுகின்றமை''  போன்ற அனுபவங்கள் எனக்கு உள்ளன. அதற்காக ஆதரங்களை வெளிப்படுத்துவதற்காக பின்னிற்கப்போவதில்லை. என்னிடத்தில் புள்ளிவிபரங்கள் உள்ளிட்ட ஆதாரங்கள் இருக்கின்றன. கடந்த காலங்களில் கட்சி பேதங்களுக்கு அப்பால் நீதி நியாயத்திற்காகச் செயற்பட்டிருக்கின்றேன். எதிர்காலத்திலும் செயற்படுவேன். உண்மையை ஒருபோதும் மறைக்க முடியாது.  அவ்வாறு மறைப்பதற்கு நான் இடமளிக்கப்போவதுமில்லை.

கேள்வி:-  போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாவனை தொடர்பில் அரசியல்தரப்புக்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை நீங்கள் முன்வைத்திருக்கின்ற நிலையில் இலங்கையின் அரசியல் கலாசாரத்தில், உங்களின் ஆதாரங்களை ஆகக்குறைந்தது பகிரங்கப்படுத்துவதற்கு வாய்ப்பு ஏற்படுமென்றாவது நம்புகின்றீர்களா?

பதில்:- எனது நாட்டின் எதிர்காலத்தினை மையப்படுத்தியே நான் இந்த விடயத்தினை கையிலெடுத்துள்ளேன். எனக்கு இதில் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்கள் எவையும் இல்லை. என்னைப்பொறுத்தவரையில் எனக்கென்று எதுவுமில்லை. வீடு, வாகனம், பெற்றோர், மனைவி, பிள்ளைகள் என்று எதுமில்லை. ஆகவே எனது இலக்கை நோக்கி பயணிக்கின்றபோது தடைகள் ஏற்படுத்த முடியாது என்ற நம்பிக்கை உள்ளது.

கேள்வி:- போதைப்பொருள் பயன்படுத்தும் அரசியல்வாதிகள் இருக்கின்றார்கள் என்று நீங்கள் கருத்து வெளியிட்டதை அடுத்து உங்களுடைய கட்சியே விசாரணைக் குழுவை உடனடியாக அமைத்துள்ள நிலையில் ஆதாரங்களை பகிரங்கப்படுத்த முற்பட்டால் உங்களின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடாதா?

பதில்:- அப்படியொரு நிலைமை ஏற்பட்டு என்னை கட்சியை விட்டு நீக்கினால் நான் சுயாதீனமாக தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகவே உள்ளேன். எமது நாடும், எதிர்கால சந்ததியும் சீரழியப்போகின்றது என்பதை உணர்ந்து கொண்டு அரசியலுக்காக மௌனம் சாதிக்க முடியாதல்லவா? நான் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டு தேர்தலில் களமிறங்கினால் என்னை அங்கீகரிப்பதா இல்லையா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்.

உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உட்பட இரண்டு வழக்குகள் உள்ளன.  இவை அடங்கலாக எனக்கு எதிராக 24 வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் எவையுமே நான் தவறிழைத்து விட்டதாக தனிப்பட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் அல்ல. மக்களுக்காக உண்மைகளை வெளிப்படுத்தியதால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளே.

கேள்வி:- போதைப்பொருளற்ற நாடாக இலங்கையை மாற்றவேண்டும் என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை எவ்வாறு பார்கின்றீர்கள்?

பதில்:- அரசியல் பேதங்களுக்கு அப்பால் அந்த முயற்சி சிறப்பானது. போதைப்பொருளை கட்டப்படுத்துவது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நானும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கருத்துக்களை பகிர்ந்துள்ளேன்.  குறிப்பாக பிலிப்பைன்ஸில் போதைப்பொருள் வியாபாரம், பாவனை உள்ளிட்ட செயற்பாடுகள் நிறுத்தப்பட்ட அனுபவத்தினைபெற்றுக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் கலந்துரையாடியுள்ளேன். அதற்கு அமைவாக ஜனாதிபதி முன்னெடுக்கும் செயற்பாடுகள் ஆரோக்கியமாகவே இருக்கின்றன. கடந்த காலத்தில் கோத்தாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்தார். இருப்பினும் அக்காலத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த பிரபல்யங்களான குடுலால், சித்தீக், முஜா, வெலே சுதா, துமிந்தசில்வா போன்றவர்களை சுதந்திரமாக நடமாட விட்டிருந்தார். ஆனால்  2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஜனாதிபதி தலைமையில் எமது அரசாங்கம் அமையப்பெற்றபின்னரே இத்தகையவர்கள் கைதுசெய்யப்பட்டர்கள். தொடர்ச்சியாக போதைப்பொருளை ஒழிப்பதற்கான விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. பெருமளவான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றன.

கேள்வி:- போதைப்பொருள் வியாபாரத்தின் கேந்திரமாக இலங்கை உருவெடுக்கின்றதென விமர்சிக்கப்படுகின்ற நிலையில் ஒட்டுமொத்தமாக போதைப்பொருள் செயற்பாடுகளை ஒழித்துவிட முடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றதா?

பதில்:- போதைப்பொருள் வர்த்தகம், பாவனை ஆகியவற்றுக்கு அரசியல்வாதிகளின் ஆசீர்வாதங்கள் கிடைக்கப்பெறுகின்றன. இந்த நிலைமைகள் நிறுத்தப்படும் வரையில் முற்றாக ஒழிப்பது என்பது மிகவும் கடினமான விடயம். உதாரணமாக டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள மதூஷுக்கு அரசியல் செல்வாக்கு இருந்துள்ளமையால் தான் அவரை கைது செய்ய முடியாத நிலைமை தொடர்ந்திருந்தது. ஆகவே இவ்வாறான நிலைமைகள் தவிர்க்கப்பட்டால் போதைப்பொருளை இலகுவாக ஒழித்து விடமுடியும்.

கேள்வி:- உங்களுடைய புலனாய்வாளர்கள் வழங்கும் தனிப்பட்ட ரீதியிலான தகவல்களின் பிரகாரம் டுபாயில் கைதாகியுள்ள மதூஷ் உள்ளிட்டவர்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன?

பதில்:- எனது தனிப்பட்ட புலனாய்வாளர்கள் வழங்கிய தகவல்களின் பிரகாரம், மதூஷ் உள்ளிட்டவர்களுக்கு இலங்கை கடவுச்சீட்டே காணப்படுகின்றது. வெளிநாட்டவர்கள் என்ற அடிப்படையிலும் முதற்தடவையாக இத்தகைய குற்றச்சாட்டுக்கு உட்பட்டவர்கள் என்ற அடிப்படையிலும் ஒருவருடத்தில் மன்னிப்பளித்து விடுதலையாவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. அதேநேரம், போதைப்பொருளை விற்பனை செய்தார்கள் என்ற விடயம் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் குறைந்த பட்சம் 25ஆண்டுகள் சிறைத்தண்டனை  வழங்குவதே டுபாய் சட்டமாக இருக்கின்றபோதும் வெளிநாட்டவர்கள் என்ற அடிப்படையில் நான்கு ஆண்டகளாக குறைவடைய வாய்ப்புக்கள் உள்ளன. எவ்வாறாயினும் மதூஷ் உள்ளிட்டவர்களின் சிறுநீர் பரிசோதனையின் போது போதைப்பொருள் பயன்படுத்தியமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அவர்கள் இலகுவாக விடுதலையடைவார்கள் என்று கூறமுடியாது.

கேள்வி:- போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக மரணதண்டனையை அமுலாக்க வேண்டும் என்பது குறித்து தங்களின் நிலைப்பாடு என்னவாக உள்ளது?

பதில்:- சிறுவர்களை படுகொலை செய்பவர்கள், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்பவகளுக்கு எதிராக மரண தண்டனையை அமுலாக்குமாறு நான் பகிரங்கமாக கோரியிருந்தேன். வித்தியா, சேயா போன்ற அப்பாவி சிறுமிகளின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு மரணதண்டனை அளிக்கப்பட வேண்டும் என்பதற்காக போராடினேன். அது முடியாது போய்விட்டது.  அதேபோன்று தான் போதைப்பொருளுக்கு அடிமையாக அதனை பயன்படுத்துபவர்களை தண்டிப்பதை விடுத்து  பாரிய அளவில் கடத்தல்களில், வியாபாரத்தில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகின்றது.

கேள்வி:- தாங்கள் அரசியல்வாதி என்பதற்கு அப்பால், இலங்கை திரையுலகத்தில் முக்கியமானவராக காணப்படுகின்றீர்கள். மதுஷ் உள்ளிட்டவர்களுடன் கலைஞர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளமையானது அத்துறை மீதான மக்கள் அபிமானம்  குறைவதற்கு காரணமாகின்றதல்லவா?

பதில்:- கலைஞர்கள் சமூகத்திற்கு முன்மாதிரியாக இருப்பவர்கள். சமூகத்தின் நன்னடத்தைகளுக்கும், முன்னேற்றத்திற்கும் வழிகாட்டியாக இருக்க வேண்டியவர்கள். கலைஞர்கள் என்ற அந்தஸ்து மக்களின் அங்கீகாரத்திலிருந்தே கிடைக்கின்றது. அவ்வாறான மக்களின் அங்கீகாரத்தினை பெற்று கலைஞர்கள் என்ற கட்டமைப்புக்கள் வருகின்ற போது அவர்கள் நிச்சயமாக தமது நிலையை சீர்செய்து முன்மாதிரியாக இருக்கும் வகையில் செயற்பட வேண்டியது அவசியமாகின்றது. மக்களின் அங்கீகாரத்தினை பெற்ற பின்னர் தவறுகளை இழைப்பதானது, மக்களையும் தவறாக வழிகாட்டுவதற்கு வித்திட்டுவிடும். ஆகவே பாரதூரமான சமூக பிறழ்வினை தவிர்க்கும் வகையிலேயே செயற்பட வேண்டும் என்பது அனைத்து கலைஞர்களினதும் பொறுப்பாகின்றது.

கேள்வி:- சமூகத்திற்கு முன்மாதிரியாக கலைஞர்கள் இருக்க வேண்டும் என்று குறிப்பிடும் நீங்கள் போதைப்பொருளுக்குள் சிக்கியிருக்கும் சமூகத்தினை அதிலிருந்து வெளிக்கொண்டுவருவதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளீர்கள்?

பதில்:- சர்வதேச பாடசாலைகளில் 20முதல் 30சதவீதமானவர்கள் போதைப்பொருளுக்கு இலக்காகியுள்ளனர். இதனைவிடவும் நிபுணத்துவம் வாய்ந்த துறைசார்ந்தவர்களும் அடிமையாகியுள்ளனர். ஆகவே போதைப்பொருட்களின் ஆபத்துக்கள் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு அளிப்பதற்கும், பகிரங்கமான கோரிக்கைகளையும் சமூக ஊடகங்கள் ஊடாக வெளியிடுவதற்கு தீர்மானித்துள்ளேன். எதிர்காலத்தில் அதற்குரிய நிகழ்ச்சித்திட்டமொன்றை தயார்படுத்துவதற்கு முயற்சிப்பேன்.

கேள்வி:- போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் சில ஆண்டுகளாக தகவல்களை சேகரித்து வருவதாக கூறியுள்ளீர்களே, யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னரான சூழலில்  வடக்கில் போதைப்பொருள் வர்த்தகமும், பாவனையும் தாராளமாகியுள்ளமை தொடர்பில் தகவல்கள் உள்ளனவா?

பதில்:- ஆம், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் அங்கு போதைப்பொருளை விற்பனை செய்யவில்லை.  வடக்கில் அரசியல் தரப்புக்களும், உயர்மட்ட வர்த்தகர்களும் தான் அதன் பின்னணியில் இருக்கின்றார்கள்.

நேர்காணல்:- ஆர்.ராம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புலம்பெயர்வில் புதுத்திறன் வளர்த்து உள்நாட்டில் தொழில்...

2023-09-29 18:57:24
news-image

இலங்கை சுற்றுலாத்துறையின் முதுகெலும்பான தேசிய விமான...

2023-09-29 17:50:38
news-image

பொருளாதார நெருக்கடி நூல் விற்பனையிலும் தாக்கம்...

2023-09-29 14:00:32
news-image

38 நிபந்தனைகளை மாத்திரம் நிறைவேற்றியுள்ள இலங்கை...

2023-09-27 14:40:25
news-image

ஒடுக்குமுறை நீடித்து நிலைக்கக்கூடிய ஒரு தெரிவு...

2023-09-27 13:42:35
news-image

நிகழ்நிலைக் காப்பு ஆணைக்குழுச் சட்டமூலம் “ஜனாதிபதியின்...

2023-09-27 11:41:14
news-image

சுற்றுலா மற்றும் பசுமை முதலீடுகள் ;...

2023-09-26 19:45:02
news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் உலக சுற்றுலா தினநிகழ்வுகள் 

2023-09-26 17:30:26
news-image

எதிர்கால இயற்கை பாதுகாப்பை சிதைக்கும் அபிவிருத்தி...

2023-09-26 15:00:53
news-image

இத்தாலியின் வெளியேற்றத்தால் தகர்ந்து போகும் சீனாவின்...

2023-09-26 11:09:20
news-image

இணையத்தை வேகமெடுக்க வைக்கும் எலனின் திட்டத்திற்காக...

2023-09-25 21:57:42
news-image

நீதிக்கான மன்றாட்டமும்  வாயால் வடை சுடுதலும்

2023-09-25 12:30:48