கற்பிட்டி, நுரைச்சோலைப் பகுதியில் 14 கிலோ கிராம் கேரளக் கஞ்சா பொதிகளுடன் சந்தேக நபர்கள் இருவர் இன்று சனிக்கிழமை (23) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கற்பிட்டி நுரைச்சோலை பகுதியிலிருந்து, பாலாவியை நோக்கி சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றை இன்று சனிக்கிழமை (23) காலை நுரைச்சோலை போக்குவரத்து பொலிஸார் சோதனை செய்தனர்.

இதன்போது, மேசை மின் விசிரி பெட்டி ஒன்றில் சூட்சகமான முறையில் 2 கிலோ கிராம் வீதம் 7 பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 14 கிலோ கிராம் கேரளக் கஞ்சாவை போக்குவரத்து பொலிஸார் கைப்பற்றியதுடன், முச்சக்கர வண்டி சாரதியையும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட முச்சக்கர வண்டி சாரதி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.

அத்துடன், புத்தளம் போதை தடுப்பு பிரிவினரும் அழைக்கப்பட்டு, பொலிஸ் மோப்ப நாயின் உதவியுடன் நுரைச்சோலை பகுதியில் மேலதிக தேடுதல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, நுரைச்சோலை குரவன்குடி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 150 கிராம் கேரளக் கஞ்சா மற்றும் கடற்பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இயந்திரப் படகு ஒன்றும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகத்தின் பேரில் குறித்த வீட்டின் உரிமையாளரும் , இயந்திரப் படகின் உரிமையாளருமான நபர் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இயந்திரப் படகு மூலம் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள குறித்த கேரளக் கஞ்சா, விற்பனை செய்யும் நோக்கில் நுரைச்சோலையில் இருந்து பாலாவிப் பகுதியை நோக்கி முச்சக்கர வண்டியில் கொண்டு சென்றிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, பொலிஸாரதல் கைப்பற்றப்பட்ட 14 கிலோ கிராம் கேரளக் கஞ்சாவை புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் ஜே.சந்திரசேன உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

புத்தளம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சம்பிக்க ஸ்ரீவர்தனவின் ஆலோசனையிலும், புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் ஜே.சந்திரசேனவின் விஷேட உத்தரவிலும் நுரைச்சோலை பொலிஸார் இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.