கடந்த வருட இறுதியில் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிறப்பித்த உத்தரவு அரசியலமைப்புக்கு முரணானது என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்ற அமர்வுக்கு தலைமைதாங்கிய பிரதம நீதியரசர் அடுத்த மாதம் ஓய்வுபெறவிருக்கிறார். 

அதன் பின்னணியில் நோக்குகையில் அரசியலமைப்பு பேரவைக்கு எதிராக ஜனாதிபதி தொடர்ச்சியாக தொடுத்துவரும் தாக்குதல் புதிய பிரதம நீதியரசர் நியமனத்தில் செல்வாக்குச் செலுத்துவதற்கான அவரின் ஒரு முயற்சியா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் கிளம்பியிருக்கிறது.

  பல தசாப்தங்களுக்குப் பிறகு நாட்டின் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்ட நீதித்துறையைச் சேர்ந்த முதலாவது நபர் என்ற பெருமைக்குரிய நளின் பெரேரா 1954 பெப்ரவரியில் பிறந்தவர். உயர்நிலை நீதிமன்றங்களின் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 65 என்பதால் அவர் அடுத்தமாதம் ஓய்வுபெறவேண்டியிருக்கிறது.

    " அடுத்த பிரதம நீதியரசர் நியமமனத்தில் செல்வாக்குச் செலுத்த ஜனாதிபதி சிறிசேன முயற்சிக்கின்றார் போலத் தோன்றுகிறது. அவரின் அந்த முயற்சிக்கு தற்போது பிரதான  தடையாக இருப்பது அந்த நியமன விவகாரத்தில் இறுதி முடிவை எடுக்கப்போகும் அரசியலமைப்பு பேரவையே.அடுத்த பிரதம நீதியரசராக தனது விருப்பத்துக்குரிய ஒருவரை அங்கீகரிப்பதற்கு அரசியலமைப்பு பேரவைக்கு நெருக்குதல் கொடுக்க ஜனாதிபதி முயற்சிக்கின்றார் என்றே தோன்றுகிறது" என்று இந்த விவகாரங்களுடன் பரிச்சயமான தகவலறிந்த வட்டாரம் ஒன்று தெரிவித்திருக்கிறது.

மூன்றாவது பதவிக்காலத்துக்கும் ஜனாதிபதியாக தெரிவாவதற்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இருக்கிறதா?, இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டவரும் அமெரிக்கப் பிரஜாவுரிமையை கைவிடுவதற்கு விண்ணப்பம் செய்திருப்பவருமான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்சவுக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதி இருக்கிறதா? 

என்ற விடயங்கள் புதிய பிரதம நீதியரசரின் முன்னால் பரிசீலனைக்கு வரக்கூடிய சாத்தியம் இருக்கிறது. அரசியலமைப்புக்கான 19 வது திருத்தம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் பதவிக்காலத்தை இரண்டாக மட்டுப்படுத்துகின்ற போதிலும், அந்த திருத்தம் பின்னோக்கிய காலத்துக்கும் செல்லுபடியாகக்கூடியதான ஏற்பாடு எதுவும் இல்லை என்று ராஜபக்ச முகாமின் ஆதரவாளர்கள் வாதிடுகிறார்கள்.

    கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு பேரவை மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்த ஜனாதிபதி சிறிசேன நீதித்துறையின் உயர்பதவிகளுக்கு தன்னால் பிரேரிக்கப்பட்டவர்களின் பெயர்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் எதுவும் அரசியலமைப்பு பேரவையினால் கூறப்படவில்லை என்று கூறினார்.

   " நிராகரிக்கப்பட்ட நீதிபதிகளில் சிலர்  மேன்முறையீட்டு விண்ணப்பத்துடன் என்னிடம்  பலதடடைகள் வந்தார்கள்.அவர்களுக்கு பதில் கூறுவதற்கு நான் கடமைப்பட்டவன்" என்று கூறிய ஜனாதிபதி, அரசியலமைப்பு பேரவையின் நடவடிக்கைகள் அடாத்தானவை என்று வர்ணித்தார். " நியமிக்கப்பட்டிருக்கும் நீதிபதிகளைப் பற்றி எனக்கு பிரச்சினை இல்லை.நிராகரிக்கப்பட்ட நீதிபதிகளைப் பற்றியே நான் கேட்கிறேன்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

   முக்கியமான நியமனங்கள் என்று வரும்போது அரசியலமைப்பு பேரவையினால் கடைப்பிடிக்கப்படுகின்ற பிரமாணங்கள் தெளிவற்றவையாகவும் புரிந்துகொள்ள முடியாதவையாகவும் இருப்பதாக ஜனாதிபதி சிறிசேன குறைகூறினார்.