(ஆர்.விதுஷா)

காலி ரத்கமவில் கடத்தி செல்லப்பட்டு கொலை செய்யப்ப்டதாக கூறப்படுகின்ற இரு வர்த்தகர்களின்  உறவினர்களும் பிரதேச வாசிகளும் இணைந்து இன்று சனிக்கிழமை கொழும்பு - காலி வீதியை இடைமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த இரு வர்த்தகர்களின் பிள்ளைகள் "எங்கள் தந்தை எங்களக்கு வேண்டும் "என்று கோஷமிட்டவாறு வீதியின் நடுவே அமர்ந்து கதறியழுதனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இரு வர்த்தகர்களினதும் படங்களை ஏந்திய வண்ணம் காணப்பட்டனர். இதே வேளை ரத்கம ரயில் பாதையை மறித்து மரக்குற்றிகளையிட்டு போக்குவரத்திற்கு தடையேற்படுத்தினர்.

ஜனவரி 23ஆம் திகதி ரத்கம பகுதியை சேர்ந்த ரசீன் சிந்தக அசேல மஞ்சுள குமார ஆகிய இருவர்த்தகர்கள் சொகுசு வேனில் சென்ற பொலிஸ் சீருடையணிந்தவர்களால் கடத்தப்பட்டிருந்தனர்.

இச்சம்பவத்தையடுத்து அவர்களுக்கு நேர்ந்த கதி குறித்து கலகமடைந்த உறவினர்களும் பிரதேசவாசிகளும் அர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் சீ.ஐ.டீயினருக்கு ஒப்படைக்கப்பட்டது.

அதன் படி சீ.ஐ.டியின் உதவி பொலிஸ் அத்தியச்சர் தலைமையிலான குழுவினர். விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இந்;நிலையில் விசாரணைகளின் ஆரம்பத்திலேயே தென்மாகாணத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா  அதிபராக கடமையாற்றிய ரவி விஜெயகுணவர்த்தன இடம் மாற்றப்பட்டதுடன், அவரின் கீழ் செயற்பட்ட சிறப்பு விசாரணை பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கபில நிசாந்த சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.

அதனையடுத்து நேற்று  குறித்த சிறப்பு விசாரணைப்பிரிவின் உப பொலிஸ் பரிசோதகரான மதுசங்க குறித்த வர்த்தகர்களின் கடத்தல் மற்றும் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை 48 மணிநேரம் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க காலி நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய வர்தகர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படும் அந்தீமனை - கொனமுல்ல பகுதியில் உள்ள குறித்த வீடு நீதவான் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதேவேளை , சடலங்கள் எரிக்கப்பட்டதாக கூறப்பட்ட வெலஸ்முல்ல கனுமுல்தெனிய காட்டுப்பகுதியின் வற்றிய ஓடையிலிருந்து எரிக்கப்பட்ட சடலங்களின் எச்சங்கள் மீட்கப்பட்டன. அதனைத்தொடர்ந்தே இருவர்த்தகர்களின் உறவினர்கள் மற்றும் ரத்கம பிரதேச வாசிகளும் ஒன்றிணைந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.