(எம்.மனோசித்ரா)

இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் நாமநாயக்கவால் முன்வைக்கப்பட்ட ' கொக்கைன் போதைப் பொருள் " விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையினை எதிர்வரும் திங்கட் கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

என ரஞ்சன் ராமநாயக்கவால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆசு மாரசிங்க  தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கொய்கெய்ன் போதைப் பொருள் பயன்படுத்துபவர்களாக காணப்படுகின்றனர் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்டிருந்த கருத்துக்கு ஆளும், எதிர் தரப்பிலிருந்து வெவ்வேறு கருத்துக்கள் வெளியாகியவண்ணமுள்ளன.

 எனவே இந்த விடயத்தில் வெறும் தகவலை மாத்திரம் வெளியிட்டால் மாத்திரம் போதாது எனவும், அதனை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்தும் வலியுறுத்தியிருந்தனர்.

அதற்கினங்க குறித்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஐக்கிய தேசிய கட்சியால் சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில் , எரான் விக்ரமரத்ன, ஆசு மாரசிங்க மற்றும் நிஷங்க நாணயக்கார ஆகியோரை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மேற்படி குழுவில் நேற்று வெள்ளிக்கிழமை ரஞ்சன் ராமநாயக்க முன்னிலையாகி வாக்கு மூலமளித்திருந்தார். இதனை அடிப்படையாகக் கொண்டே குறித்த விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டு அது பிரதமரிடம் கைளிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.