ஜெஹான் பெரேரா

அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தத்தின் கீழ் அமைக்கப்பட்ட அரசியலமைப்பு பேரவையையும் சுயாதீன ஆணைக்குழுக்களையும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடனும் ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்களுடனும் சேர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டனம் செய்துவருவதைக்காணக்கூடியதாக இருக்கிறது. இந்த நிறுவனங்களினால் பல பாதகமான விளைவுகள் ஏற்படுவதாக அவர்கள் காரணம் கூறுகிறார்கள். ஜனாதிபதியின் விருப்பங்கள் திரும்பத்திரும்ப நிராகரிக்கப்படுவதாகவும் ஊழல்தனமானவையாக இருக்கும் அந்த நிறுவனங்கள் சிறுபான்மை மதங்களைச் சார்ந்தவர்களுக்கு பக்கச் சார்பாக செயற்படுவதாகவும் ஐக்கிய நாடுகளின் சார்பில் அமைதிகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் இலங்கைப் படைவீரர்கள் மரணமடையக் காரணமாக இருப்பதாகவும் கூட  அவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். தேர்தல்களில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசியல்வாதிகளின் அதிகாரம் மட்டுப்படுத்தப்படுகிறது என்ற விரக்தியே உண்மையில்  இந்தக் கண்டனவிமர்சனங்களின் அடிப்படையாகும்.

 

அரசியலமைப்பு பேரவை என்பது ஒப்பீட்டளவில் இலங்கையில் ஒரு புதிய நிறுவனமாகும். அரசியலமைப்புக்கான 17 ஆவது திருத்தத்தின் கீழ் 2000 ஆம் ஆண்டில் முதன்முதலாக இலங்கையில் அரசியலமைப்பு பேரவை நிறுவப்பட்டது.பாராளுமன்றத்தில் அந்த திருத்தம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அகத ஆதரித்தவர்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சவும் அடங்குவர். தற்போது 10 உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும் அரசியலமைப்பு பேரவையிடம் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிக்கும் பொறுப்பும் அவர்களின் செயற்பாடுகளை கண்காணிக்கும் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அரசையும் அரசாங்க சேவையையும் அரசியல் மயநீக்கம் செய்வதே அரசியலமைப்பு பேரவையின் பிரதான இலக்காகும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு இருந்த மட்டுமீறிய அதிகாரங்களைக் கட்டுப்படுத்தவேண்டும் என்றும்  ஆட்சிமுறையின் ஏனைய நிறுவனங்களை பலப்படுத்தவேண்டும் என்றும் அந்த நேரத்தில் பரவலாக உணரப்பட்டதன் பின்புலத்திலேயே 2000 ஆம் ஆண்டில் அரசியலமைப்பு பேரவை நிறுவப்பட்டது. அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசாங்கத் தலைவர்கள் அதிகாரத்தைத்  துஷ்பிரயோகம் செய்ததன் விளைவாக ஏற்பட்ட எதிர்மறையான அனுபவங்கள் அந்த அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பு ஏற்பாடுகளைக்கொண்ட முறைமையொன்றை வகுக்கவேண்டிய அவசியத்தை உணர்த்தியதைத்தொடர்ந்து இது நிகழ்ந்தது.

 முதன்முதலில் அரசியலமைப்பு பேரவை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் செயற்பட்டது. ஆரம்பத்தில் சுமுகமாக இயங்கியது அந்த பேரவை. மூன்று வருடங்களுக்குப் பிறகு ( அதன் உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைந்து புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவேண்டியிருந்த நிலையில் ) சில நியமனங்களைச் செய்வதற்கு ஜனாதிபதி திருமதி குமாரதுங்க பின்வாங்கினார். அதன் விளைவாக அரசியலமைப்பு பேரவை செயலிழந்தது. முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ச ஒருபடி மேலே சென்று 2010 ஆம் ஆண்டில்  அரசியலமைப்புக்கான 18 ஆவது  திருத்தத்தைக்கொண்டுவந்து அரசியலமைப்பு பேரையை இல்லாதொழித்தார்.அதனிடத்தில் சுயாதீன குழுக்களுக்கு உறுப்பினர்களாக நியமிக்கப்படவேண்டியவர்களின் பெயர்களை சிபாரிசு செய்யும் அதிகாரத்தை மாத்திரம் கொண்ட பாராளுமன்றப் பேரவை கொண்டுவரப்பட்டது.சுயாதீனக் குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிக்கும் ஏக அதிகாரம்  மீண்டும் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது.

2015 ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோற்கடிக்ப்பட்ட பிறகுதான் அரசியலமைப்பு பேரவையின் புதுப்பிப்பு இடம்பெற்றது. கூட்டணி கட்சிகள் நல்லாட்சியைக் கொண்டுவருவதாக நாட்டுமக்களுக்கு தேர்தல் பிரசாரங்களின்போது வாக்குறுதி அளித்தே ஆட்சியதிகாரத்துக்கு வந்தன.அரசாங்கசேவையை அரசியல்மயநீக்கம் செய்வது, தேர்தல்களில் தெரிவுசெய்யப்படுகின்ற அரசியல்வாதிகள் நீதித்துறை, பொலிஸ் மற்றும் தேர்தல் ஆணைக்குழு ஆகியவற்றின் செயற்பாடுகளில் தலையீடுசெய்வதை தடுக்கும்வகையில் அவர்களின் அதிகாரங்களைக் குறைத்தல், இலஞ்சம் மற்றும் ஊழல்மோசடிகளில் ஈடுபட்டவர்களை விசாரணைசெய்து நீதியின் முன் நிறுத்தல் என்பனவும்  நல்லாட்சி வாக்குறுதிகளில் அடங்கும்.நல்லாட்சி இலட்சியத்துக்காக உரக்கக்குரல்  கொடுத்து அதன் பல  நன்மைகளை மக்கள் மத்தியில் தீவிரமாக பிரசாரம்செய்தவர் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன.புதிய அரசாங்கத்தின் முதல் சாதனைகளில் ஒன்று 2015 ஏப்ரிலில் அரசியலமைப்புக்கான 19 வது திருத்தத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி அதன் மூலமாக முனனேற்றகரமான ஏற்பாடுகளுடன் கூடிய அரசியலமைப்பு பேரவையைக் கொண்டுவந்தமையாகும்.

          

அந்த அரசியலமைப்புத் திருத்தம் அரசியலமைப்பு பேரவையை மாத்திரம் உருவாக்கவில்லை, ஜனாதிபதியின் பதவிக்காலத்தையும் அதிகாரங்களையும் குறைத்து அரச நிறுவனங்களின் சுயாதீனத்தை அதிகரிக்கவும் செய்தது. அந்த திருத்தத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளில் முன்னின்று செயற்பட்டமைக்காக தனது பதவிக்காலத்தின் ஆரம்பத்தில் ஜனாதிபதி சிறிசேன பெருமைக்கு உரிமைகோரியபோதிலும், பின்னரான அவரது நடவடிக்கைகள் அதிகாரங்கள் சிலவற்றைக் கைவிட்டமைக்காக அவர் கவலைப்பட்டார் என்பதை வெளிக்காட்டின.உதாரணமாக, தனது பதவிக்காலம் தொடர்பில் உச்சநீதிமன்றத்திடம் அவர் அபிப்பிராயம் கேட்டதைக்கூறலாம். ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட தினத்தில் இருந்து தனது பதவிக்காலம் 6 வருடங்கள் வரை நீடிக்கிறதா அல்லது 19 வது திருத்தத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் 5 வருடங்களில் நிறைவடைந்துவிடுமா என்று அவர் உச்சநீதிமன்றத்தைக் கேட்டார். அந்த திருத்தத்தின் கீழ் ஜனாதிபதியிடமிருந்து அதிகாரங்கள் குறித்து விசேடமாக நீதிபதிகளையும் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரங்கள் குறித்து அவர் இப்போது வேறு சிந்தனையைக் கொண்டிருக்கிறார் போலத் தெரிகிறது. 

           

உயர்நிலை நீதிமன்றங்களுக்கு  நீதிபதியாக தனது தெரிவாக இருந்த ஒருவரை அரசியலமைப்புப் பேரவை ஏற்றுக்கொள்ளாததே அதன் மீதான ஜனாதிபதி சிறிசேனவின் சினத்துக்கான உடனடிக்காரணமாக இருக்கிறது போல் தோன்றுகிறது. ஜனாதிபதியின் அந்த தெரிவை அரசியலமைப்பு பேரவை திரும்பத்திரும்ப நிராகரித்திருந்தது. 62 இலட்சம் வாக்காளர்களினால் தெரிவுசெய்யப்பட்ட தனது தெரிவு அரசியலமைப்பு பேரவையின் தீர்மானத்துக்கு மேலானதாக பார்க்கப்படவேண்டும் என்று ஜனாதிபதி உணருகிறார் போலும். சம்பந்தப்பட்ட நீதிபதியை உயர்நிலை நீதிமன்றங்களுக்கு நியமிக்கவேண்டும் என்ற தனது விருப்பத்தை நியாயப்படுத்துவதற்கு நம்பகபூர்வமான  போதுமான காரணங்களை ஜனாதிபதியினால் முன்வைக்க இயலாமல் போனதே இங்கு பிரச்சினையாகும்.  அந்த நீதிபதியின் பதவயுயர்வுக்கு  அரசியலமைப்பு பேரவையின் பெரும்பான்மையான உறுப்பினர்களின்  ஆதரவு இருக்கவில்லை. ஒருவரின் கருத்துகளுக்கு மேலாக பத்துப்பேரின் அபிப்பிராயம் நிலைபெறுவது நல்லதேயாகும்.

 சுயாதீன ஆணைக்குழுக்களைப் பற்றிய குறிப்பாக, மனித உரிமைகள் ஆணைக்குழுவைப் பற்றிய ஜனாதிபதியின் சில விமர்சனங்கள் எந்த அடிப்படையும் இல்லாதவை அல்லது தர்க்கநியாயமும் இல்லாதவை. உதாரணமாக, மாலியில் இருந்து இலங்கை அமைதிகாக்கும் படையினர் நாடுதிரும்புவதில் ஏற்பட்ட தாமதத்துக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவைக் குற்றஞ்சாட்டிய ஜனாதிபதி, அதன் விளைவாகத்தான் அவர்கள் மரணமடையவேண்டிவந்தது என்று கூறினார். மாலியில் இருந்து இலங்கைத்துருப்புக்களை திருப்பியழைப்பதில் ஏற்பட்ட தாமதத்துக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தரப்பிலான தாமதமே காரணம் என்று கூறுவது முற்றுமுழுதாக தவறானது என்று அந்த ஆணைக்குழு அளித்திருக்கும் விளக்கத்தில் கூறியுள்ளது.

 ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படையின் பணிகளுக்காக வெளிநாடுகளுக்கு  அனுப்பப்படுகின்ற இலங்கைப் படையினரில் எவராவது மனித உரிமை மீறல்களில் அல்லது போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருந்தார்களா என்பதை நுணுக்கமாக ஆராயும் நடவடிக்கைகளை மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொண்டுவருகிறது. மாலியில் ஏற்கெனவே அமைதிகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த படையினர் நாடுதிரும்புவதற்கு வசதியாக இன்னொரு தொகுதி படையினர் அனுப்பப்படவேண்டும். அவ்வானு அனுப்பப்படவேண்டிய படையினரின் கடந்த கால நடத்தைகளை ஆராய்வதில் மனித உரிமைகள் ஆணைக்குழு தாமதம் காட்டியதனாலேயே தங்கள் பணிக்காலத்தை மாலியில் நிறைவுசெய்த படையினர் திரும்பிவரமுடியாமல் போனது என்றும் அந்த தாமதமே அந்த நாட்டில் கிளர்ச்சியாளரின் தாக்குதலில் இலங்கைப்படையினர் பலியாக காரணமாயமைந்தது என்றும் ஜனாதிபதி குற்றஞ்சாட்டினார். வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் படையினரின் கடந்தகால நடத்தைகளை ஆராய்வதற்கு உகந்த தராதரமான நடைமுறை வகுக்கப்படும்வரை  அந்த ஆராய்வுச் செயன்முறைகளை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. அந்த தீர்மானம் இராணுவம், பொலிஸ், வெளியுறவு அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் ஐக்கிய நாடுகள் என்று விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சகல தரப்பினராலும் ஏகமனதாக எடுக்கப்பட்டதாகும் என்று அதன் விளக்கத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழு தெளிவுபடுத்தியிருந்தது.

            

பன்னிரண்டு பெயர்கள் அரசியலமைப்பு பேரவையினால் நிராகரிக்கப்பட்டதாக ஜனாதிபதியினால் ஏற்கெனவே கூறப்பட்டிருந்தாலும்கூட அது தவறான கூற்று என்று அரசியலமைப்பு பேரவையின் தலைவரான சபாநாயகர் கரு ஜெயசூரிய கூறியிருக்கிறார். ஒரு பதவி வெற்றிடத்துக்காக மூன்று அல்லது நான்கு பெயர்கள் பிரேரிக்கப்படும் சந்தர்ப்பங்களில் எம்மால் ஒரு பெயரே தெரிவுசெய்யப்படுகிறது. அதை பெயர்கள்  நிராகரிப்பு என்று வர்ணிப்பது அரசியலமைப்பு பேரவைக்கு செய்யப்படுகின்ற அநீதியாகும்.விளக்கங்களைக் கேட்டுப்பெற்றுக்கொள்ளாமல் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைப்பது நாட்டுக்கு நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும் என்று சபாநாயகர் கூறியிருந்தார்.நாட்டின் ஆட்சிமுறையுடன் தொடர்புடைய விவகாரங்களில் என்ன நடக்கிறது எனபது ஜனாதிபதிக்கு தெளிவாக விளக்கிக்கூறப்படாமல் இருக்கின்றதாகத் தோன்றுகின்ற மிகவும்  துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையில் பொறுப்பு வாய்ந்த பதவியில் இருக்கும் ஒருவரிடமிருந்து வந்திருக்கக்கூடிய கடுமையான ஒரு அறிக்கையாக சபாநாயகரின் கருத்து அமைகிறது.

போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றைத் தவிர்க்கும் முயற்சியாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் 2010 ஆம் ஆண்டில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.அதில் சட்டத்துறையில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களும் இராஜதந்திரிகள் மற்றும் சிறந்த நிருவாகிகளும் அங்கம் வகித்தார்கள்.நல்லாட்சி நிலவவேண்டுமானால்  தனிமனிதர்களின் ஆட்சிக்கு சட்டத்தின் ஆட்சி மேலோங்கவேண்டும் என்று அவர்கள் தங்களது அறிக்கையில் விதந்துரை செய்திருந்தார்கள்.அமெரிக்காவில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நடந்துகொள்வதைப் போன்று, கடந்த வருட இறுதியில் ஜனாதிபதி சிறிசேன நடந்துகொண்டதைப் போன்று மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதிகளின் மதிப்பீடுகள் தவறானவையாக இருக்கமுடியும். கடந்த வருடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பதவியில் இருந்து நீக்கியதுடன் பாராளுமன்றத்தையும் கலைத்த சிறிசேன உச்சநீதிமன்றத்தின் தலையீட்டின் விளைவாக இறுதியில் தனது தீர்மானங்களை  வாபஸ்பெறவேண்டியேற்பட்டது. அரசியலமைப்பு பேரவை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான நியாயப்பாடு நல்லாட்சியே தவிர ஒரு தனிமனிதரி்ன் ஆதிக்கம் அல்ல.