தமிழகத்தில் பெற்ற தாயை கொலை செய்துவிட்டு சடலத்துடன் உறங்கிய இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் செங்கமலநாச்சியார்புரத்தை சேர்ந்தவர் அருணாச்சலப்பாண்டி. இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவியும், பிரபா (7) என்ற மகனும் உள்ளனர். 

குடிபோதைக்கு அடிமையான அருணாச்சலப்பாண்டி கடந்த 6 ஆண்டுகளாக தன் மனைவி மற்றும் மகனை விட்டு பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார். 

குறித்த நபர் வேலைக்குச் செல்லாமல் மது அருந்தியும், ஊர் சுற்றியும் வந்துள்ளார். இந்நிலையில் சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்த குறித்த நபர் தாயுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் வியாழக்கிழமை இரவு மது அருந்த பணம் கேட்டு தாயிடம் அருணாச்சலப்பாண்டி தகராறு செய்துள்ளார். ஆனால் ஈஸ்வரி பணம் தராததால் ஆத்திரமடைந்த அவர் ஈஸ்வரியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு இரவு முழுவதும் தாயின் சடலத்துடனேயே உறங்கியுள்ளார். 

பின்னர் அருணாச்சலப்பாண்டியின் அப்பா சின்னகணபதி வீட்டுக்கு சென்று பார்த்தபோது கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்டு ஈஸ்வரி கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது.

குறித்த சம்பவம் தொடர்பாக குறித்த நபரின் தந்தை பொலிஸில் புகார் அளித்த நிலையில் பொலிஸார் அருணாச்சலப்பாண்டியை கைது செய்துள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.