இப் பிரதேசம் யுத்தத்திலிருந்து மீண்டாலும் தவறான அரசியல் வழி நடத்தலாலும் பிரதேசவாத அரசியல்வாதிகளின் சுயநலத்தாலும் பொருளாதாரம் மற்றும் இதர அபிவிருத்திகளில் முன்னேற்றம் காணமுடியாதிருக்கிறது. 

இதற்குக் காரணம் அரசியல் தொடர்பில் தேர்தல் நேரங்களில் வழங்கப்படும் போலியான வாக்குறுதிகளாகத் தான் இருக்கின்றன என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

இன்றையதினம் கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி வலைப்பாடு பிரதேச மக்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்;

கடந்தகால தமிழ் அரசியல் தலைவர்கள் எல்லோரும் கற்பாறையிலேயே எமது மக்களுக்கான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர். அவர்களது சுயநலன் கலந்த இச்செயற்பாடுகளே இன்று எமது மக்கள்படும் அவலங்களுக்கும் துயரங்களுக்கும் காரணமாகிறது.

ஏதோ ஒருவகையில் இன்று எமது பிரதேசத்தில் யுத்தம் ஓய்ந்துவிட்டது. அதனால் ஏற்பட்ட அழிவுகளும் குறைந்துவிட்டன. ஆனாலும் அதன் தாக்கத்திலிருந்து இன்னும் மக்கள் முழுமையாக மீளமுடியாதிருக்கின்றனர். ஆனாலும் ஓரளவேனும் மக்கள் தமது வாழ்வியலில் முன்னேற்றம் கண்டிருக்கின்றனர். அது இன்னும் முழுமைபெறாதிருப்பது ஏன் என்பதே இன்றுள்ள கேள்வியாக இருக்கின்றது.

மக்களது தேவைகளையும் அவர்களது அபிலாசைகளையும் பெற்றுக் கொடுப்பதே எமது நிலைப்பாடாகும். அதைத்தான் நாம் நீண்டகாலமாக முன்னெடுத்து வந்திருந்திருக்கின்றோம். ஆனால் எம்மிடம் குறைந்தளவு அரசியல் அதிகாரம் இருப்பதனால் மக்கள் தேவைகளையும் அரசியல் உரிமை பிரச்சினைகளையும் எம்மால் முழுமையாக செய்யமுடியாதிருக்கின்றது.

தமிழ் மக்கள் தமது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தொடர்ந்தும் போலித்தேசியவாதத்திற்கு எடுபடாது மக்களின் நலன்சார்ந்து உழைக்கும் சரியான அரசியல் தலைமைகளுக்கு தமது அரசியல் அதிகாரத்தை கொடுக்க முன்வரவேண்டும். அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில்தான் தமிழ் மக்கள் தமது அபிலாசைகளை வென்றெடுக்கமுடியும். 

அந்தவகையில் வரவுள்ள சந்தர்ப்பத்தை தமிழ் மக்கள் சரியாகப் பயன்படுத்தி எமது கரங்களுக்கு அரசியல் பலத்தை தருவார்களேயானால் மிக விரைவில் தமிழ்மக்களது தீராப் பிரச்சினையாகத் தொடர்ந்து வரும் அரசியலுரிமைப் பிரச்சினை மற்றும் அபிவிருத்திகள் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டு தர எம்மால் முடியும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. அதை நான் நிச்சயம் செய்து காட்டுவேன் என்றார்.

இச்சந்திப்பின் போது கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாகச் செயலாளர் வை.தவநாதன் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளர் அமீன் உள்ளிட்ட பலர் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.