(நா.தனுஜா)

ஞானசார தேரரை மனோகணேசன்,அஸாத் சாலி போன்ற சிறுபான்மையினப் பிரதிநிதிகள் சிறைச்சாலையில் சென்று சந்தித்திருப்பதனை இன நல்லிணக்கத்திற்கான சமிக்ஞையாகவே கருதுகின்றோம்.

இச்சந்திப்பு நீண்ட காலநோக்கில் சிறந்ததொரு மாற்றத்தை ஏற்படுத்தும்.அவ்வாறிருக்க அரசியல் கைதிகள் விவகாரம் நாட்டின் தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்ட விடயமாகும். எனவே அவர்களைச் சென்று சந்திப்பதென்பதும் அத்தனை இலகுவான விடயமல்ல. 

எனவே ஞானசார தேரரை சந்தித்துள்ளமையை அரசியல் கைதிகள் விவகாரத்துடன் ஒப்பிடுவது பொருத்தமற்றதாகும் என இலங்கை இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா.டி.அருண்காந்த் தெரிவித்தார்.

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை தேசிய ஒருமைப்பாட்டிற்குப் பொறுப்பான அமைச்சர் மனோகணேசன் சிறையில் சந்தித்திருப்பதை நல்லிணக்கத்திற்கான அடிப்படையாகக் கருதுவதாக பொதுபலசேனா அமைப்பின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டிருந்தது. 

இந்நிலையில் ஞானசாரர் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்ற இலங்கை இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா.டி.அருண்காந்திடம் இவ்விடயம் தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

கடந்த காலங்களில் தமிழ் மக்கள் தொடர்பான பிரச்சினைகளின் போது அவற்றிற்கான

தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதற்கு மனோகணேசன் முன்நின்று செயற்பட்ட விதம் மற்றும் அவரின் முயற்சிகள் குறித்து எமக்கு எவ்வித மாற்றுக்கருத்துக்களும் இல்லை. அவர் தற்போது ஞானசார தேரரை நேரில் சென்று சந்தித்துள்ளமை இனநல்லிணக்கத்திற்கான சமிக்ஞை என்றே நாங்கள் கருதுகின்றோம்.

 மனோகணேசனிடம் இருந்து நடைமுறைச் சாத்தியமுள்ள விடயங்களையே எதிர்பார்க்க முடியும். அரசியல் கைதிகள் விவகாரம் நாட்டின் தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்ட விடயமாகும். 

எனவே அவர்களைச் சென்று சந்திப்பதென்பதும் அத்தனை இலகுவான விடயமல்ல. 

எனவே ஞானசார தேரரை சந்தித்துள்ளமையை அரசியல் கைதிகள் விவகாரத்துடன் ஒப்பிடுவது பொருத்தமற்றதாகும்.

இந்நாட்டில் வாழும் பெரும்பான்மை சிங்களவர்கள்,தமிழர்களை துவேஷ மனப்பான்மை  உடையவர்களாகவே கருதுகின்றனர். அதேபோல் கடந்த காலங்களில் மனோகணேணசன் தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் குரல் எழுப்பியமையால் அவரை பிரிவினைவாதத்திற்கு துணை போகின்ற ஒருவராகவே பெரும்பான்மையினத்தவர்கள் கருதுகின்றனர். 

இந்நிலையில் தற்போது மனோகணேசன் ஞானசாரரை சிறையில் சென்று சந்திருப்பதன் ஊடாக அந்த சிங்கள மக்களின் பார்வையில் மாற்றம் ஏற்படும் வாய்ப்புண்டு. இது இனநல்லிணக்கத்திற்கான அடிப்படையாகவும் அமையலாம்.

மனோகணேசனை விடவும் மேல்மாகாண ஆளுநர் அஸாத் சாலி ஞானசாரரை சந்தித்தமை இன்னமும் ஆச்சரியம் அளிக்கின்ற விடயமாகும். காரணம் கடந்த காலத்தில் இவர்கள் இருவருக்குமிடையில் பாரிய சொற்போர் நடந்துள்ளது. அவ்வாறிருக்க தற்போது ஞானசாரரை சந்தித்துள்ளமையின்மூலம் முஸ்லிம்கள் அனைவரும் அடிப்படைவாதிகள் அல்ல என்ற ஓர் சமிக்ஞை வழங்கப்பட்டுள்ளது.

எனவே இச்சந்திப்பு நீண்ட காலநோக்கில் சிறந்ததொரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்றே நாங்கள் கருதுகின்றோம் என்றார்.