(எம்.மனோசித்ரா)

இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளதைப் போன்று அமைச்சர்கள் எவரேனும் போதைப் பொருள் பயன்படுத்துவது ஆதரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் அவர்களை அமைச்சுப் பதவியிலிருந்து மாத்திரமல்லாமல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 

அமைச்சரவை அமைச்சர்களில் சிலரும் போதைப் பொருள் பாவனையாளர்களாகக் காணப்படுகின்றனர் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளமை தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகளை கைது செய்யும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனினும் கடந்த கால ஆட்சியாளர்களினால் ஏன்  இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை என்பதே எமது கேள்வியாகும். காரணம் அவர்களுக்கு போதைப் பொருள் கடத்தல்காரர்களை கைது செய்வதற்கான தேவை காணப்படவில்லை. 

எவ்வாறிருப்பினும் பொது மக்கள் மத்தியில் பெருகி வருகின்ற போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு மக்கள் பிரதிநிதிகளான அமைச்சர்களிடத்திலும் பாராளுமன்ற உறுப்பினர்களிடத்திலும் காணப்படுகின்றது. இவ்வாறிருக்கையில் அவர்களே போதைப் பொருள் பாவனையாளர்களாக காணப்பட்டால் நாட்டின் எதிர்கால நிலைமை என்வென்பது கேள்விக்குறியாகும். 

அத்தோடு ரஞ்சன் ராமநாயக்க கூறுவதை ஆதரத்துடன் நிரூபிக்க வேண்டும். மாறாக அவர் அதனை வெறும் கருத்தாக மாத்திரம் கூறிவிட்டார் அது பயனற்றதாகிவிடும். பாவனையாளர் யார் என்றாலும் ஆளுங்கட்சி, எதிர்கட்சி பாகுபாடின்றி அவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதோடு அவர்களது பாராளுமன்ற உறுப்புரிமையும் பறிக்கபட வேண்டும் என்றார்.