பதின்ம வயதுச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட  வேன் சாரதியும்  அவருக்கு உடந்தையாகவிருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறுமியின் தாயாரையும் பிணையில் விடுவித்து  யாழ்ப்பாணம் நீதிமன்ற  நீதவான் உத்தரவிட்டார்.

சந்தேகநபர்கள் இருவரும் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் ஆரம்ப விசாரணைகள் நிறைவடைந்தன என்றும் சந்தேகநபர்கள் இருவரையும் பிணையில் விடுவிக்க ஆட்சேபனையில்லை என்றும் பொலிஸார் மன்றுரைத்தனர். அதனால் சந்தேநகநபர்களை பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட மன்று வழக்கை வரும் ஏப்ரல் மாதம் வரை ஒத்திவைத்தது.

கொக்குவில் பகுதியில் குடும்பப் பெண் ஒருவருடன் முறையற்ற உறவை வைத்திருந்த வேன் சாரதி ஒருவர், அந்தப் பெண்ணின் பதின்ம வயதுச் சிறுமியை  வன்புணர்வுக்குட்படுத்தினார் என்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது.

அந்தப் பெண்ணிடமிருந்து மணநீக்கம் பெற்ற பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை இந்த முறைப்பாட்டை வழங்கினார். அதனடிப்படையில் தாயாரின் பாதுகாப்பிலிருந்த சிறுமியை மீட்ட பொலிஸார், அவரை சட்ட மருத்துவரின் பரிசோதனைக்குட்படுத்தினர்.

அத்துடன் சந்தேகநபரை கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவையும் பொலிஸார் கடந்த மாத முற்பகுதியில் யாழ்ப்பாணம் நீதிமன்றில் பெற்றிருந்தனர்.எனினும் சந்தேகநபர் இந்தியாவுக்குச் சென்றிருந்ததால் அவரைக் கைது செய்ய முடியவில்லை.

இந்த நிலையில் சந்தேகநபர் கடந்த மாதம் தனது சட்டத்தரணி வீரகத்திப்பிள்ளை கௌதமனின் ஆலோசனையின் பிரகாரம் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். அவரது வேனையும் பொலிஸார் தடுத்துவைத்தனர்.

விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அவருக்கு எதிராக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டிருந்த சிறுமியை பாலியல் பலாத்காரத்துக்குட்படுத்திய குற்றச்சாட்டின் கீழான முதல் அறிக்கையின் கீழ் முற்படுத்தப்பட்டார்.

சந்தேகநபர் சார்பில் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா முன்னிலையானார். சந்தேகநபர் சார்பில் அவர் பிணை விண்ணப்பத்தை முன்வைத்தார்.

“சந்தேகநபருக்கும் இந்தக் குற்றச்சாட்டுக்கும் தொடர்பில்லை. அவர் சிறுமியை தாயாரின் அனுமதியுடனேயே 3 தடவைகள் வெளியில் அழைத்துச் சென்றார். அதனால் சந்தேகநபரை பிணையில் விடுவிக்கவேண்டும்” என்று  மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா மன்றுரைத்தார்.

எனினும் சந்தேகநபர் சார்பான பிணை விண்ணப்பத்தை நிராகரித்த நீதிமன்று விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது. அவர் ஒரு மாதமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந் நிலையில் சந்தேகநபர் சிறுமியை தாயாரின் அனுமதியுடனேயே 3 தடவைகள் வெளியில் அழைத்துச் சென்றார் என்ற சந்தேகநபரின் சட்டத்தரணியால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டதை பொலிஸார் ஆராய்ந்தனர். அதற்கு அமைய சிறுமியின் தாயாரை கோப்பாய் பொலிஸார் கடந்தவாரம் கைது செய்தனர்.

சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்த சந்தேநபருக்கு சிறுமியின் தாயார் உடந்தையாகவிருந்தார் என்ற குற்றச்சாட்டை பொலிஸார் முன்வைத்ததோடு அவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.