(ஆர்.விதுஷா)

மாவனெல்ல - இலுக்கொட பகுதியில் வைத்து வெடிமருந்து துப்பாக்கியுடன் இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்களிடம் வெடிமருந்து துப்பாக்கி காணப்படுவதாக நேற்று அதிகாலை 1.50 மணியளவில் மாவனெல்ல பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றுக்கு அமைய சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள் இலுக்கொட பகுதியில் வைத்து சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது மோட்டார் சைக்கிளிலிருந்து வெடிமருந்து துப்பாக்கியொன்றும்,அதற்கு பயன்படுத்தப்படுத்தப்படும் வெடிமருந்துப்பொருட்களும்,கத்தியொன்றையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர்கள் 18, 21 மற்றும் 23 வயதுடைய தனாகமவத்தை மற்றும் மாவனெல்ல ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களென விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது. 

இதே வேளை சந்தேக நபர்களை மாவனெல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் நேற்றைய தினம் மேற்கொண்டதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.