பாகிஸ்தானின் தடை பட்டியலில் 69 பயங்கரவாத அமைப்புகள் உள்ளதாக அந்நாட்டு அரசு ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயங்கரவாதிகளின் சொர்க்கபுரியாக பாகிஸ்தான் விளங்குகிறது என்பதுதான் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் குற்றச்சாட்டு. இதை அந்த நாடு மறுத்து வந்தாலும், அதில் துளியும் உண்மை இல்லை என்பதை பயங்கரவாதிகள் அடிக்கடி நிரூபித்து வருகின்றனர். 

 தற்போது காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பயங்கரவாத அமைப்புகளில் முக்கியமானதும், மும்பை தாக்குதலில் ஈடுபட்டதுமான ஜமாத்-உத்-தவா அமைப்பை சமீபத்தில் அந்த நாடு தடை செய்திருக்கிறது. இதையும் சேர்த்து இதுவரை 69 அமைப்புகள் தடை செய்யப்பட்டு இருப்பதாக அந்த நாட்டு அரசு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

எனினும் ஹிஸ்புல் முஜாகிதீன், ஹர்கத் உல் முஜாகிதீன், காஷ்மீரில் இயங்கி வரும் அல் பதர் போன்ற அமைப்புகளை பாகிஸ்தான் அரசு இதுவரை தடை செய்யவில்லை. இதைப்போல இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள 41 பயங்கரவாத அமைப்புகளில் பாதிக்கு மேற்பட்ட குழுக்களுக்கு பாகிஸ்தான் ஆதரவுக்கரமும் நீட்டி வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தானில் சில அமைப்புகள் தடை செய்யப்பட்டு இருந்தாலும், அவற்றின் தலைவர்கள் அங்கே சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். இதில் மும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹபீஸ் சயீத், புல்வாமா தாக்குதலுக்கு காரணமான மசூத் அசார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.