(எம்.மனோசித்ரா)

இலங்கைக்கு வெளிநாடுகளிலிருந்து சட்ட விரோதமான முறையில் சிகரட்டுக்களை கடத்த முற்பட்ட பாக்கிஸ்தான் பிரஜை உள்ளிட்ட மூவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 12.50 மணியளவில் டுபாயிலிருந்து பண்டாரநாயக்க சர்சதேச விமான நிலையத்தை வந்தடைந்த கண 557 என்ற விமானத்தின் மூலம் 160 பக்கட்டுக்களில் பொதியிடப்பட்ட 32 ஆயிரம் சிகரட்டுக்களை கடத்த முற்பட்ட நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

இவரிடமிருந்து மீட்கப்பட்ட சிகரட்டுக்களின் பெறுமதி 17 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் விசாரணைகளின் பின்னர் 25 ஆயிரம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதே போன்று இன்று அதிகாலை 4 மணியளவில் ஷர்ஜாவிலிருந்து இலங்னை வந்த ப9 501 என்ற விமானத்திற்கூடாக 188 பக்கட்டுக்களில் பொதியிடப்பட்ட 25 ஆயிரம் சிகரட்டுக்களை கடத்த முற்பட்ட மோதரையைச் சேர்ந்த நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். 

இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட சிகரட்டுக்களின் பெறுமதி 13 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் விசாரணைகளின் பின்னர் 10 ஆயிரம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கராச்சியிலிருந்து இலங்கை வந்த ரட 184 என்ற விமானத்திற்கூடாக 80 பக்கட்டுக்கடுகளில் பொதியிடப்பட்ட 16 சிகரட்டுக்களுடன் பாக்கிஸ்தான் பிரஜைளொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட சிகரட்டுக்களின் பெறுமதி 88 இலட்சம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் விசாரணைகளின் பின்னர் 10 ஆயிரம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.