புத்தளம், கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் புதிய ஐந்து மாடிக் கட்டடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும்  நிகழ்வு இன்று  வெள்ளிக்கிழமை (22) வைபவரீதியாக இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், இராஜாங்க அமைச்சர்களான பைசல் காசிம், நிரோஷன் பெரேரா, ஐ.தே.க புத்தளம் அமைப்பாளர் எம்.என்.எம்.நஸ்மி, வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ், கற்பிட்டி பிரதேச சபை தலைவர் ஏ.எம்.இன்பாஸ், வடமேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் முஹம்மட் பரீத் உட்பட வைத்தியர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

சீன நாட்டின் கடனுதவியில் 13 வைத்தியசாலைகளை தரமுயர்த்தும் விஷேட வேலைத்திட்டத்தின் கீழ் கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலையும் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், அதற்கான அபிவிருத்திப் பணிகளும் சுகாதார அமைச்சரினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

நோயாளர் தங்கி சிச்சை பெறும் சிச்சையறைத் தொகுதி, மகப்பேற்று பரிசோரனையறை, சத்திர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் குறித்த ஐந்து மாடிக் கட்டடம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

குறித்த புதிய ஐந்து மாடிக் கட்டடத்தின் நிர்மாணப் பணிகளுக்காக 564 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.