தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸுக்காக 154 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டுள்ளது.

போர்ட்எலிசபெதில் நேற்றைய தினம் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்ஸுக்காக 222 ஓட்டங்களை பெற்றது.

இதையடுத்து நேற்றைய தினமே தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 60 ஓட்டங்களை பெற்றிருந்தது.

திமுத் கருணாரத்ன 17 ஓட்டத்தையும், ஒசத பெர்னாண்டோ டக்கவுட் முறையிலும், குசல் மெண்டீஸ் 16 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்த நிலையில் ஆடுகளத்தில லஹிரு திரிமன்ன 29 ஓட்டத்துடனும், கசூன் ராஜித எதுவித ஓட்டமுமின்றி ஆட்டமிழக்காதிருந்தனர்.

இந் நிலையில் போட்டியின் இரணடாம் நாளான இன்று 60 ஓட்டத்துடனும் தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணி தென்னாபிரிக்க அணிப் பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சுகளுக்கு தாக்குப் பிடிக்காத காரணத்தினால் 37.4 ஓவர்களை மாத்திரம் எதிர்கொண்டு 9 விக்கெட்டுக்களை இழந்து 154 ஓட்டங்களுக்குள் சுருண்டு, 68 ஓட்டத்தினால் பின்னடைவை சந்ததித்தது.

லஹிரு திரிமன்ன 29 ஓட்டத்தையும், கசூன் ராஜித ஒரு ஓட்டத்தையும், குசல் பெரேரா 20 ஓட்டத்தையும், தனஞ்சய டிசில்வா 19 ஓட்டத்தையும், நிரோஷன் திக்வெல்ல 42 ஓட்டத்தையும், சுரங்க லக்மால் 7 ஓட்டத்தையும் பெற்று ஆட்டமிழந்ததுடன், விஷ்வ பெர்னாண்டோ எதுவித ஓட்டமுமின்றி ஆட்டமிழக்காதிருந்தார்.

இதேவேளை இந்த இன்னிங்ஸில் காயத்துக்குள்ளான எம்புலுதெனிய துடுப்பெடுத்தாடுவதற்கு ஆடுகளமிறங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில் ரபடா 4 விக்கெட்டுக்களையும், ஒலிவர் 3 விக்கெட்டுக்களையும், முல்டர் மற்றும் கேசஷ் மஹாராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இதையடுத்து 68 ஓட்டத்துடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி சற்று முன்னர் வரை எதுவித விக்கெட் இழப்பின்றி 3 ஓட்டங்களை பெற்றுள்ளது.