(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் )

லிபியாவுக்கு அஸ்வருடன் கப்பலில் சென்றபோது ஏற்பட்ட சம்பவமொன்றை நினைவு கூர்ந்த முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ச அஸ்வர் என்றுமே தன்னால் மறக்கப்பட முடியாதவர் என்றும் கூறினார்.

முன்னாள் எம்.பிக்களான காலஞ்சென்ற ஏ.எச்.எம் அஸ்வர்.பி.எஸ். சூசை தாசன்,பி.ஏ. ஜனதாச நியதபால ஆகியோருக்கான அனுதாபப் பிரேரணை மீதான  உரைகள் சபையில் இன்று இடம்பெற்றன. 

இதில் தனது அனுதாப உரையை நிகழ்த்திய முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த  ராஜபக்ஷ,

எனது வெளிநாட்டுப்பயணங்களில் அதிகமானவற்றில் அஸ்வர் இடம்பிடித்திருப்பார். ஒரு தடைவை நான் கப்பலில் லிபிய நாட்டுக்கு சென்றபோது அவரும் என்னுடன் வந்திருந்தார். இப் பயணத்தின்போது நாம் பயணித்த கப்பல் நடுக்கடலில் சூறாவளியில் சிக்கி தத்தளிக்கத்தொடங்கியது. 

இதனால் நாம் பதற்றமடைந்திருந்தோம். அப்போது அஸ்வர்  தத்தளித்துக்கொண்டிருந்த கப்பலில் இருந்தவாறு எம்மை பாதுகாக்குமாறு கடவுளிடம் மன்றாடினார். இதனை என்னால் எப்போதும் மறக்க முடியாது எனக் கூறினார்.