ரொபட் அன்டனி
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தமிழ்க் கூட்டமைப்புடன் பேசாமல் வேறுயாருடனும் பேச்சு நடத்தினாலும் அர்த்தமில்லை. தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கே அதிகாரத்தை வழங்கியுள்ளனர். எனவே கூட்டமைப்புடன் பேச்சு நடத்தாமல் இனப்பிரச்சினைக்கு அரசி யல் தீர்வு தொடர்பில் எந்த தீர்மானத்தையும் அரசாங்கம் எடுக்காது என்று நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
நீண்டகாலப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காணும் நோக்கிலேயே புதிய அரசியலமைப்பை நாங்கள் உருவாக்குகின்றோம். எனினும் இதனைத்தான் செய்யப்போகின்றோம் என வரைவிலக்கணம் எதையும் இப்போது கூற முடியாது. அது தொடர்பில் எவ்விதமான தீர்மானமும் எடுக்கப்படவில்லை. அவ்வாறு தீர்மானம் எடுத்து எதனையும் செய்யமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
வீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
செவ்வியின் முழு விபரம் வருமாறு
கேள்வி: ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தியபின்னர் கடந்த ஒன்றரை வருடங்களில் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றினீ ர்களா?
பதில்: அந்தக் கேள்வியை நீங்கள் மக்களிடம் தான் கேட்க வேண்டும். சுயாதீனமான எந்தவொரு நபரினாலும் இந்த அரசாங்கம் அனை த்து மக்களினதும் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற எவ்வாறு செயற்படுகின்றது என்பதை உணர்ந்து கொள்ள முடியும். மக்களின் உரிமைகளை பாதுகாத்து எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றி வருகின்றோம்.
கேள்வி: இந்தவிடயத்தில் தேசிய அரசாங்கம் திருப்தி அடையும் நிலையில் இருக்கிறதா ?
பதில்:அரசாங்கம் என்ற ரீதியில் முழுமையாக திருப்தி அடைகின்றோம் என கூற முடியாது. அரசாங்கம் எமக்கு கிடைத்தாலும் தற்போது காணப்படும் இந்த அரச இயந்திரமானது கடந்த பத்து பதினைந்து வருடங்களாக அரசியல் மயமாக்கப்பட்டு விட்டது. இந்த கட்டமைப்பிலிருக்கும் ஒருசில அதிகாரிகளும் கடந்தகால அரசியல்வாதிகளினால் மாற்றப்பட்டுவிட்டனர். எனவே, புதிய அரசாங்கம் மேற்கொள்ளும் நல்ல திட்டங்களும் மழுங்கடிக்கப்படுகின்றன.
கடந்தகால ஆட்சியின் போது மேற்கொள்ளப்பட்ட ஊழல்கள், திருட்டுகள் என்பவை தொடர்பான குற்றச்சாட்டுகளை தவிர்க்கும் நோக்கில் பல்வேறு சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. மின்சார சபையில்கூட அண்மையில் பிரச்சினையொன்று இருக்கலாம். ஆனால் உண்மையான பிரச்சினையைவிட உருவாக்கப்படுகின்ற பிரச்சினைகளே அதிகமாக காணப்படுகின்றன. அரசாங்கத்தின் பிரபலத்தை குறைப்பதற்கு சூட்சுமமாக செயற்பட்டு வருகின்றனர்.
அதிகாரத்தை இழந்த அரசியல்வாதிகள் ஒற்றுமையை சீர்குலைக்க எமது பயணத்தை தடுத்து நிறுத்த பல பிரச்சினைகளை உருவாக்கி வருகின்றனர். சாவகச்சேரியில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் தற்கொலை அங்கி தொடர்பில் எமக்கு இன்னும் உண்மை தெரியாது. அதனை கண்டுபிடிக்க நாட்டிலொரு முறைமை காணப்படுகின்றது. புலனாய்வுத்துறைக்கு நாம் இடமளிக்கவேண்டும்.
ஆனால் ஒருசில அரசியல்வாதிகள் இதனை வைத்து பிரச்சினைகளை உருவாக்க முயற்சிக்கின்றனர். இந்த அரசாங்கம் சிங்கள மக்களின் உரிமைகளை அடக்குவதாக விம்பத்தை காட்டுவதற்கு முயற்சிக்கின்றனர். நாட்டில் மீண்டும் இனவாதத்தை பரப்பி மக்களை குழப்ப முயற்சிக்கின்றனர். சிங்கள பௌத்த மக்களை இனவாதத்திற்குள் தள்ளிவிட்டால் மாத்திரமே தமது இருப்பை தக்கவைத்துக் கொள்ள முடியுமென கருதுகின்றனர். ஆனால் மக்கள் அதிலிருந்து வெ ளியே வருகின்ற தினத்தில் இந்த அரசியல்வாதிகள் காணாமல் போய்விடுவார்கள்.
கேள்வி: உங்களது தேசிய அரசாங்கம் பதவிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் நிறைவடையப் போகின்றன. ஆனால், நிதி நெருக்கடி, ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி போன்ற விடயங்களை நாங்கள் காண்கின்றோம். இதற்கு என்ன காரணம் ?
பதில்:இன்று மரத்தை நட்டுவிட்டு நாளை காய்களைப் பெற முடியுமா ? தற்போது உண்மையில் நெருக்கடிகள் இருக்கின்றன என்று கூறமுடியாது. கடந்த அரசாங்கம் நாட்டின் தேவைகளை கருத்திற்கொள்ளாது, தமக்கான நன்மையை மட்டும் கருத்திற்கொண்டு செயற்பட்டதன் காரணமாக நாடு அதிகளவில் கடன்பட்டது. மஹிந்த ராஜபக்ஷ நாட்டைப் பொறுப்பேற்றபோது எமது நாட்டின் கடன்தொகையானது 1200 பில்லியன் ரூபாவாகும். பத்து வருடங்களின் பின்னர் இன்று 9000 பில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளது. அந்த நிதியை யார் மீள் செலுத்துவது? நாங்கள் தான் அதனை செலுத்த வேண்டும். அவற்றை செலுத்திக் கொண்டு கடந்த 11 வருடங்களாக கொடுக்கப்படாத பொருளாதார நிவாரணங்களை கடந்த ஒருவருடத்தில் நாங்கள் கொடுத்திருக்கின்றோம்.
எரிபொருள் விலைகுறைத்தோம், 13 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத் தோம், அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள உயர்வினை வழங்கினோம். அப்படிப்பார்க்கும்போது இப்போது நெருக்கடியிலிருப்பதாக கூறவே முடியாது. அவை எல்லாவற்றிற்கும் மேலாக மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தியிருக்கிறோம். மக்கள் அரசாங்கத்தை விமர்சிக்கும் உரிமையை வழங்கியிருக்கின்றோம். வௌ்ளை வேன் கடத்தல் எதுவுமில்லை. இனவாதத்தை கட்டுப்படுத்தியிருக்கிறோம். அக்காலத்தில் பிக்குமார் பிரதமர் அலுவலகத்தில் கதிரைகளை தூக்கி வீசிய வரலாறும் காணப்படுகிறது. நாடு அராஜகமாக காணப்பட்டது. நாட்டில் சட்டத்தின் ஆட்சிபடுத்தல் இல்லாவிடின் எது இருந்தும் பலனில்லை. அப்படிபார்க்கும்போது இந்த அரசாங்கத்துக்கு பூ வைத்து கும்பிடவேண்டும்.
கேள்வி:கருத்தொருமைவாத தேசிய அரசாங்கத்தின் ஆயுட்காலம் விரைவில் முடிந்துவிடும்போன்று தெரிகின்றதே?
பதில்: இரண்டு வருடங்களுக்கு தேசிய அரசாங்கத்தை கொண்டு செல்லவே திட்டமிட் டுள்ளோம். ஆனால் எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கும் அரசாங்கத்தைக் கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
கேள்வி:எனினும் சில அமைச்சர்கள் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர். சுதந்திரக் கட்சியின் ஆதரவின் பெறுமதியை அங்கீகரிக்காமல் நடந்துகொள்வதாகவும் தாம் அதிருப்தியுடன் இருப்பதாக வும் சுதந்திரக் கட்சியின் அமைச்சர் ஒரு வர் குறிப்பிட்டுள்ளார். இது எதனை குறிக்கின்றது?
பதில்:அது எதனையும் குறிக்கவில்லை. எங்களுக்கு மக்களே முக்கியமானவர்கள். ஒருசில அமைச்சர்கள் கூறும் விடயங்கள் எங் களுக்கு முக்கியமல்ல. மக்கள் என்ன கூறுகின்றனர் என்பதே முக்கியமாகும். தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் அமைப்போம் என்று நாங்கள் கூறினோம். அப்போது தேசிய அரசாங்கம் அமைக்கமாட்டோம் என்று நிமால் சிறிபால டி. சில்வா கூறியிருந்தார். ஆனால் இன்று அதனை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதனால் ஒருசிலர் உணர்ச்சிவசப்பட்டு கூறுகின்ற விடயங்கள் குறித்து நாங்கள் அலட்டிக்கொள்ளவேண்டியதில்லை. மக்கள் வழங்கிய ஆணையை நாம் கருத்திற்கொள்ளவேண்டும்.
கேள்வி:அப்படியாயின் இவ்வாறான விடயங்கள் தேசிய அரசாங்கத்துக்கு பாதிப்பாக அமையாது என்று கூறுகின்றீர்களா?
பதில்: இவை மிகவும் சிறியளவிலான விடயங்கள்.
கேள்வி: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான அணியினர் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்து அரசாங்கத்துக்கு சவால் விடுக்கப்போவதாக கூறுகின்றனர். இது அரசாங்கத்துக்கு சவாலாக அமையுமா?
பதில்: அரசியல் ரீதியாக நாங்கள் ஜனநாயகத்தை மதிப்பவர்கள். ஜனநாயகம் நீடிக்கப்பட வேண்டுமாயின் கட்சிகள் இருக்கவேண்டும். புதிய கட்சி வந்தால் நாங்கள் வாழ்த்து தெரிவிப்போம். புதிய அரசியல் கட்சி வந்தால் அது எமக்கு சாதகமாக அமையும். ஆனால் அதில் தங்
கியிருந்து அரசியல் செய்ய நாங்கள் தயாராக இல்லை. அடுத்ததாக எமது அரசாங்கத்தை அமைப்பதற்கான திட் டம் எம்மிடம் உள்ளது.
கேள்வி:புதிய கட்சியை உருவாக்கும் பணியில் ஐக்கிய தேசிய கட்சியுடன் டீல் போட்டுக்கொண்டுள்ள சிலர் செயற்பட்டுவருவதாக கூறப்படுகின்றதே?
பதில்: அது அரசியல் வங்குரோத்து காரணமாக கூறும் விடயமாகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்னும் நிறைவேற்று அதிகாரம் உள்ள ஜனாதிபதி ஆவார். அவர் சுதந்திரக் கட்சியின் தலைவர். பிரதமர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர். அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட்டுவருகின்றோம். 19 ஆவது திருத்தச் சட்டம் வந்ததும் அனைவரும் வாக்களித்தனர். மக்களின் ஆணையை மதிப்பது அவசியமாகும்.
கேள்வி:புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகள் இடம்பெறுகின்றன. இதனூடாக தமிழ் பேசும் மக்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு கிடைக்குமென்பதை எவ்வாறு உறுதிப்படுத்த முடியும்?
பதில்:நீண்டகாலப் பிரச்சினைக்கு நிரந்தரதீர்வை காணும் நோக்கிலேயே புதிய அரசியலமைப்பை நாங்கள் உருவாக்குகின்றோம். எனினும் இதனைத்தான் செய்யப்போகின் றோம் என வரைவிலக்கணம் எதையும் இப்போது கூற முடியாது. அது தொடர்பில் எவ்விதமான தீர்மானமும் எடுக்கப்படவில்லை. அவ்
வாறு தீர்மானம் எடுத்து எதனையும் செய்யமுடியாது. அவ்வாறுதான் 1972 ஆம் ஆண் டின் அரசியலமைப்பை செய்தனர். 1978 ஆம் ஆண்டும் அவ்வாறுதான் செய்தனர். அதனால்தான் அவை எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றாமல் போயின. ஆனால் நாங்கள் மக்களின் கருத்துக்களை பெற்று இதனை முன்னெடுக்க முயற்சிக்கின்றோம். அனைவரும் இணக்கத்துக்கு வரும் ஒரு தீர்மானத்திற்கு நாங்கள் செல்வோம்.
கேள்வி:இந்த விடயத்தில் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்புடன் நேரடியாக இருதரப்பு பேச்சுக்களில் ஈடுபடுவீர்களா ?
பதில்:தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நிச்சயமாக நேரடிப் பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் நடத்தும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான் தமிழ் மக்களின் பிரதான கட்சியாகும். தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தமிழ்க் கூட்டமைப்புடன் பேசாமல் வேறுயாருடனும் பேச்சு நடத்தினாலும் அர்த்தமில்லை. தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கே அதிகாரத்தை வழங்கியுள்ளனர். எனவே கூட்டமைப்புடன் பேச்சு நடத்தாமல் தீர்வு தொடர்பில் எந்த தீர்மானத்தையும் அரசாங்கம் எடுக்காது.
கேள்வி:பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குவது தொடர்பில் நீதியமைச்சரான உங்களின் நிலைப்பாடு என்ன ?
பதில்:புதிய அரசியலமைப்பை உருவாக் கும் பணிகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் எனது தனிப்பட்ட கருத்துக்களை கூறுவது பொருத்தமாக அமையாது. நாம் திறந்த முறையிலும் பரந்து பட்ட வகையிலும் செயற்பட்டு வருகிறோம். இப்போது நான் எனது தனிப்பட்ட கருத்தை கூற முற்பட்டால் அது எதிர்கால செயற்பாடுகளை பாதிப்பதாக அமைந்துவிடும். எனது கருத்தை மறந்து பொதுவான இணக்கப்பாட்டிற்கு வருவது மிகவும் முக்கியமாகும்.
கேள்வி:அப்படியாயின் உங்களின் உண்மையான கருத்து அந்த இடத்தில் பிரதிநிதித்துவம் செய்யப்படவில்லை ஏன் ?
பதில்:பிரதிநிதித்துவம் செய்யப்படும். எங் கள் மட்டத்தில் நாங்கள் கலந்து கொள்கின்ற பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெறும். அதில் எமது கருத்துக்கள் இடம்பெறும். ஜனநாயகத்தில் எனது தனிப்பட்ட கருத்தை முன்னெடுத்து செல்வது முக்கியமல்ல. பொதுவான இணக்கப்பாட்டிற்கு வருவது முக்கியமாகும். நான் ஒரு நிலைப்பாட்டினை வகிக்கலாம். சம்பந்தன் ஒரு நிலைப்பாட்டினை வகிக்கலாம் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் இங்கு பொதுவான இணக்கப்பாடு என்பது மிகவும் அவசியமானதாகும்.
கேள்வி:அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளதாக கூறப்படும் உள்ளக விசாரணைப் பொறிமுறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்குமென அரசாங்கம் எவ்வாறு உறுதிசெய்யும் ?
பதில்:நாங்கள் ஜெனிவாவில் இணைந்த பொறிமுறையொன்றை மேற்கொள்ள இணக்
கப்பாட்டிற்கு வந்தோம். நானும் அந்த அமர் வில் கலந்துகொண்டிருந்தேன். அதனூடாக நாங்கள் உள்ளக பொறிமுறையை முன்னெடுக்க முடியும். அதனை செயற்பாட்டில் நிரூபித்துக் காட்ட வேண்டியது எமது பொறுப்பாகும்.
கேள்வி: உள்ளக பொறிமுறையில் மக்கள் எவ்வாறு நம்பிக்கை வைக்க முடி யும்?
பதில்: இறந்தவருக்கு மீண்டும் உயிர்கொடுக்க முடியாது. அங்கு கவலையான சம்பவம் நடைபெற்று விட்டது. நாங்கள் நான்கு முறையின் கீழ் உள்ளகப் பொறிமுறையை முன்னெடுப்போம். உண்மையை கண்டறிதல், நீதியை நிலைநாட்டுதல், நட்டஈடு வழங்குதல், மீண்டுமொரு யுத்தம் இடம்பெறாமல் இருக்க நடவடிக்கை எடுத்தல் ஆகிய நான்கு விடயங்களின் அடிப்படையில் உள்ளகப் பொறிமுறை முன்னெடுக்கப்படும். இதில் நான்காவது விடயம் முக்கியமானதாகும். அதனால்தான் புதிய அரசியலமைப்பை உருவாக்கி வருகிறோம். இதுதான் உலகில் காணப்படும் மிகச்சிறந்த முறையாகும். அதனை நாங்கள் முன்னெடுப்போம்.
கேள்வி:முன்னாள் அரசாங்கம் புலிகளுக்கு பணம் கொடுத்ததாக அமைச்சர் சரத்பொன்சேகா தெரிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு தொடர்பில் அரசாங்கம் என்ன செய்யவுள்ளது ?
பதில்:எனக்கு தெரிந்தவகையில் இந்த விடயம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தி வருகின்றது. இதற்காக சில தரப்பினர் தம்மை கைது செய்ய வேண்டாம் எனக் கூறி நீதிமன்ற தடை உத்தரவினை பெற்றுள்ளனர். பொலிஸார் அது தொடர்பில் விசாரணைகளை நடத்துவார்கள். இது நிருபிக்கப்பட்டால் புலிகளை யார் போஷித்தனர் என்பது மக்களுக்கு தெரியவரும்.
கேள்வி:நல்லிணக்க செயற்பாடுகளில் புலம்பெயர் மக்களின் பங்களிப்பு எவ்வாறு அமையும் ?
பதில்:நல்லிணக்க விடயத்தில் புலம்பெயர் மக்களின் ஆதரவை எதிர்பார்க்கிறோம். புலம்பெயர் மக்கள் தொடர்பான தடைகளை நாங்கள் நீக்கியிருக்கிறோம். புலம்பெயர் மக்கள் வடக்கு மக்களுக்கு அதிக உதவிகளை வழங்க முடியும். இலங்கை வந்து பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்புமாறு நாம் கூறுகிறோம்.
கேள்வி: யாழ்ப்பாணத்திற்கு நீங்கள் எத்தனை முறை சென்றீர்கள் ? அங்குள்ளமக்கள் உங்களிடம் என்ன கூறினார்கள்?
பதில்:யுத்தம் முடிவடைந்த பின்னர் எட்டுத் தடவைகள் நான் யாழ்ப்பாணத்திற்கு சென்றுவந்தேன். கிராமபுற மக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றேன். நீதியமைச்சு சம்பந்தப்பட்ட செயற்பாடுகளை முன்னெடுக்கவும் நான் யாழ்ப்பாணம் சென்றிருந்தேன். எதிர்வரும் மே மாதம் 27 ஆம் திகதி யாழில் தொழிலாளர் மத்தியஸ்தர் சபையினை நிறுவுவதற்கு யாழ்ப்பாணம் செல்லவிருக்கின்றேன். வடக்குடன் நாங்கள் இணைந்து செயற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றோம்.
யாழ்ப்பாண மக்களுக்கு காணப்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் எங்களுக்கு தெரியும். அதில் நாங்கள் புரிந்துணர்வுடனும் உணர்வு பூர்வமாகவும் இருக்கின்றோம். இந்த மக்களுக்கு உயர்ந்த மட்ட சேவையினை வழங்க நாங்கள் எம்மை அர்ப்பணித்திருக்கின்றோம். நீதிமன்றத் துறையை முன்னேற்றுவதிலும் ஏனைய ஏழு மாகாணங்களை விட வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். நான் ஆட்சிமாற்றத்தின் பின்னர் மூன்று தடவைகள் யாழ்ப்பாணம் சென்றேன். அப்போது தமக்கு பிரச்சினைகள் இருப்பதாகவும் கவலைகள் இருப்பதாகவும் ஆனால் தாம் இன்று இலங்கையர்கள் என்ற பெருமையுடன் வாழும் சுதந்திரம் இருப்பதாக மக்கள் கூறினர். இதுவே முக்கியமாகும்.
கேள்வி:தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தற்போது எந்த மட்டத்தில் உள்ளது ?
பதில்:நான் கைதிகளை சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டு வந்தேன். தற்போது அந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்து கொண்டிருப்பதாகவே நான் கருதுகிறேன். பிணை வழங்கக்கூடிய அனைவருக்கும் பிணை வழங்கப்பட்டு விட்டது. பாரதூரமான குற்றச்சாட்டுகள் உள்ள சில வழக்குகள் உள்ளன. அதற்காக நாங்கள் விசேட நீதிமன்றத்தை அமைத்து விசாரித்து வருகின்றோம். கடந்த இரண்டு மாதங்களில் அதிகமான வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்த வருடம் முடியும் முன்னர் அனைத்து வழக்குகளையும் முடிவுக்கு கொண்டுவர முடியுமென நம்புகிறோம்.
கேள்வி:நீங்கள்தான் நீண்டகாலத்திற்கு முன்னரையே 2007 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தை விட்டு ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டீர்கள். அந்த முடிவு குறித்து விளக்க முடியுமா ? அது கடினமான முடிவா ?
பதில்:மஹிந்த ராஜபக் ஷ என்ற தனிநபருடன் எனக்கு எந்தவிதமான தனிப்பட்ட பிரச்சினை களும் இல்லை. நாங்கள் இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். நான் அவரின் சட்ட ஆலோசகராக நீண்டகாலம் செயற்பட்டிருக் கிறேன். எனினும் மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிப தியாகி ஐந்து மாதங்களில் அந்த ஆட்சி மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றாது என்பதனை புரிந்துகொண்டேன். தேசியஒற்றுமை எஞ்சிவிடாது என்று புரிந்து கொண்டேன். யுத்தத்தை வெல்ல முடியும். ஆனால் சமாதானத்தை வெற்றிபெற முடியாது என்பதை புரிந்து கொண்டேன். ஜனநாயகமும் நிலைநாட்டப்படாது என்பதை புரிந்தேன்.
கேள்வி: அது எப்படி உங்களுக்கு தெரிந்தது ?
பதில்: எனக்கு அது தெரிந்தது. ஆனால் அந்த ஆட்சி பாரிய சர்வாதிகார பிரச்சினையுடன்தான் முடியும் என்று எனக்குத்தெரியும். 1978 ஆம் ஆண்டு அரசியலமைப் பினை வரைந்த ஜெயராம் வில்சன் (செல்வநாயகத்தின் மருமகன்) புத்தகம் ஒன்றின் மூலம்விளக்கமொன்றை அக்காலத்தில் வழங்கியிருந்தார். அவர்தான் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பினை வரைந்து ஜே.ஆர். ஜெயவர்தனவுக்கு கொடுத்தவர். அரசியலமைப்பினை வரைந்து இரண்டு வருடங் களின் பின்னர் அவர் புத்தகத்தை வெளியிட்டார். ஜே. ஆர். ஜயவர்த்தனவுக்கு தேவை யான வகையில் இந்த அரசியலமைப்பு உருவாக்கப்பட்டாலும், இதனூடாக நாடு நல்லதை நோக்கியா கெட்டதை நோக்கியா பயணிக்குமென்பதை அரசியலமைப்பு தீர்மானிக்காது என்றும் ஜனாதிபதியாக பதவிவகிப்பவரே அதனை தீர்மானிப்பார் என்றும் கூறியிருந்தார். சர்வாதிகாரத்திலேயே இதற்கு முடிவுவரும் என்றும் ஜெயராம் வில்சன் கூறியிருந்தார். சமூக அரசியல் சக்தியினாலேயே இதனை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்றும் அவர் கூறியிருந்தார். இறுதியில் அதுதான் நடந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM