கேப்பாபுலவில் 723 ஆவது நாளாக நிலமீட்பு போராட்டத்தை மேற்கொண்டுவரும் கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்களை இலங்கைக்கான சுவீஸ்லாந் நாட்டின் தூதரக அதிகாரிகள் (21) இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

கேப்பாபுலவு மக்களின் நிலமீட்பு போராட்டம் குறித்து அவர்களின் காணிவிடுவிப்பு தொடர்பில் இதுவரை ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் அரசாங்கத்தினால் ஏதாவது வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளனவா என்பது பற்றியும் போராட்ட காரர்களின் தற்போதைய நிலைகுறித்தும் கேட்டறிந்து கொண்டுள்ளார்கள்.

குறிப்பாக கேப்பாபுலவு வீதியில் படையினரின் நுளைவாயில் முன்பாக இருந்த போராட்டம் கடந்த கடந்த மாதம் 26.ஆம் திகதியன்று படையினரின் முகாம் அமைந்துள்ள வாயிலுக்கு சென்று போராட்டம் மேற்கொண்டுள்ளநிலையில் ஏற்பட்ட சட்ட சிக்கல் மற்றும் தற்போது படையினரின் நுளைவாயிலில் இருந்து பத்து மீற்றருக்கு அப்பால் விடுவிக்கப்பட்ட காணி ஒன்றில் இருந்து போராட்டத்தினை மேற்கொண்டுவரும் மக்களின் நிலைப்பாடுகள் தொடர்பிலும் போராட்ட மக்களிடம் விரிவாக கேட்டறிந்து கொண்டுள்ளார்கள்.

அதன் பின்னர் கேப்பாபுலவு மக்களிடம் கருத்து தெரிவித்து இலங்கைக்கான சுவீஸ்தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அதிகாரி,

 தான் கடந்த முறை கேப்பாபுலவு மக்களின் போராட்ட இடங்களுக்கு வந்தவேளை இந்த மக்கள் சொந்த நிலங்களுக்கு சென்றுவிடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் சென்றதாகவும் ஒரு ஆண்டுக்கு பிறகு வந்த நிலையில் அவர்கள் இன்றும் சொந்த நிலத்தை கேட்டு போராடிக்கொண்டிருப்பதை நினைத்து தான் கவலையமைகிறேன். 

காணிவிடுவிப்பு தொடர்பில்  மக்களின் பிரச்சனையை கொண்டு செல்ல வேண்டிய இடங்களுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையினை தொடர்ந்து மேற்கொண்டுள்ளதாகவும் இந்த மக்கள் எல்லா தரப்பிடமும் அவர்கள் பிரச்சனைகளை கொண்டு சென்றுள்ளதை தாம் அறிந்திருப்பதாகவும் இருந்தும் இதுவரை இந்த மக்களின் நிலங்கள் விடுவிக்கப்படவில்லை என்பது துரதிஸ்டவசமானது என்றும் தெரிவித்தார்.

 அவர் சுவீஸ் நாடு இந்த மக்களின் நிலைகுறித்து உரிய இடங்களுக்கு தகவலை கொண்டு சேர்க்கும் என்றும் அவர் போராட்ட மக்களிடம் தெரிவித்துள்ளார்.

சுவிஸ் தூதரக அதிகாரிகள்  கேப்பாபுலவுக்கு சென்றிருந்த நிலையில் அரச  புலனாய்வாளர்கள் அதிகளவில் போராட்ட இடத்தை சுற்றிலும் நின்று அவதானிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது .