(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

மலையக பெருந்தோட்டப் பகுதிகளுக்கான தபால் சேவகர்கள் பதவிக்கு ஏற்கனவே விண்ணப்பித்து, நியமனங்கள் கிடைக்காதிருக்கின்றவர்களில் புள்ளிகள் அடிப்படையில் முதலிடம் வகிப்போருக்கான இரண்டாம் கட்ட நியமனங்கள்  எப்போது வழங்கப்படும் என ஈ .பி.டி.பி.செயலரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் இன்று 27 இன் கீழ் 2 இல் விசேட கூற்றை முன் வைத்தபோதே தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகாரங்கள் அமைச்சர் எம். எச். ஏ. ஹலீமிடம் இவ்வாறு டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பினார்.

வடக்கு, கிழக்கு மற்றும் பெருந்தோட்டப் பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தமிழ் மொழியில் முகவரியிடப்பட்டு அனுப்பப்படுகின்ற கடிதங்கள் யாவும் பல நாட்கள் தாமதித்தே உரியவர்களுக்கு கிடைக்கின்ற ஒரு நிலையும் தொடர்ந்து காணப்படுகின்றது. 

இதற்கான காரணத்தை ஆராய்கின்றபோது, தபால் அலுவலகங்களில் தமிழ் மொழி மூல பரிச்சயம் கொண்டவர்களின் பற்றாக்குறை பெருமளவு காணப்படுவதாக தெரிய வருகின்றது. அதாவது மாற்று மொழி தகைமைக்கான சான்றிதழ்களை கொண்டிருக்கின்ற தபால் திணைக்கள ஊழியர்களால் தமிழ் மொழியில் பணியாற்ற இயலாத நிலை காணப்படுவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.