(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் )

அரசியல் அமைப்பு பேரவையில் குறைபாடுகள் இருப்பின் அதனை புதுப்பித்து நீதித்துறையை சுயாதீனப்படுத்த  வேண்டுமே தவிர அரசியல் அமைப்பு சபையை நிராகரிக்கக்கூடாது.பின்வாசல் வழியாக ஆட்சிபீடம் எரிய மஹிந்த ராஜபக்ஷவை நீதித்துறை நிராகரித்த காரணத்தினால் தான் அவர்களின் இன்று நீதித்துறை மீதே கோவமாக உள்ளனர் என சபை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

 பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட அரசியல் அமைப்பு பேரவை குறித்த விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இதில் அவர் மேலும் கூறியதானது, 

அரசியல் அமைப்பு பேரவை மிகவும் ஆரோக்கியமான ஒன்றாகும், இன்று அரசியல் அமைப்பு பேரவையில் நீதியரசர் நியமனம் ஒரு கேள்வியாக எழுப்பப்பட்டு வருகின்றது. 

எனினும் நீதியரசர் நியமனத்தில் ஜனாதிபதியின் தலையீடு இருந்தது.  ஜனாதிபதி தான் நீதியரசர் நியமனத்தை செய்தார். அதன்போதும் அவர் நியமித்த நபர் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட நபரை விடவும் நான்கு தரங்கள் குறைந்தவராகவே  இருந்தார். இவ்வாறான சம்பவங்களுன் இடம்பெற்றன. ஆனால் அரசியல் அமைப்பு பேரவை அதனை நிராகரித்தது.பொருத்தமான நபர்கள் தெரிவுசெய்யப்பட வேண்டும் என்பதே அதன் நோக்கமாக இருந்தது. 

மேலும் சந்திரிகா குமாரதுங்க அம்மையாரின் ஆட்சியில் தனது அரசாங்கத்தை கொண்டு நடத்த பெரும்பான்மை இருக்கவில்லை.  ஆட்சியை கொண்டு நடத்த அதிகாரம் இருக்கவில்லை. அப்போது தான் ஜே.வி.பி முன்வந்து ஆட்சியை கொண்டு நடத்த ஆதரவு வழங்குவதாகவும்  ஆனால் அரசியல் அமைப்பு பேரவை என்ற ஒன்றினை உருவாக்க வேண்டும் என்ற யோசனையை முதல் முதலாக முன்வைத்தனர். 

பின்னர் அது நடைமுறைப்படுத்தவில்லை. எமது  ஆட்சியில் சட்டமாக கொண்டவந்து பாராளுமன்றத்தில் சகலரதும் அங்கீகாரம் கிடைத்தது. அரசியல் அமைப்பு பேரவைக்கு பாராளுமன்றத்தின் முழுமையான அங்கீகாரம் கிடைத்தது. இன்று அதனையே குழப்பப்பார்ப்பது நியாயமற்றதாகும். 

அரசியல் அமைப்பு பேரவையில் குறைபாடுகள் இருக்கலாம். அதனை பேச்சுவார்த்தை மூலமாக சரிசெய்துகொள்ள முடியும்.  எமது ஆட்சியை சூழ்ச்சியால் கைப்பற்றினீர்கள். பின் வாசல் வழியாக மஹிந்த ராஜபக் ஷ ஆட்சிபீடம் ஏறினார். இறுதியாக நீதிமன்றம் அவர்களின் சூழ்ச்சிகர ஆட்சியை நிராகரித்தது. ஆகவேதான் இன்று  நீதித்துறை மீதி நீங்கள் கோவமாக உள்ளீர்கள். ஆனால் நியாயம் என்ற ஒன்று உள்ளது. 

இன்று நீதி சுயாதீனத்துவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  இன்று மீண்டும் இனவாத கருத்துக்களை பரப்பும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றீர்கள். மத ரீதியில் நீதியரசர் நியமிக்கப்படுவதாக கூறுகின்றீர்கள். இது முழுப் பொய். உலகில் எங்கும் அவ்வாறு இடம்பெறவில்லை. எமது நாட்டில் நீதியரசர் நியமங்களை சரியாக செய்யவே அரசியல் அமைப்பு பேரவை கொண்டுவரப்பட்டது. இதில் பிழை இருப்பினும் முறைமையை புதுப்பிப்போம். அதை விடுத்து நாம் இதனை நீக்க வேண்டாம் என்றார்.