கனடாவில் நேற்று முன்தினம் அடுக்கு மாடி வீட்டில் ஏற்றபட்ட தீ விபத்தில் 7 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிரியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அரசுப்படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான இந்த போரில் அப்பாவி மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகிறார்கள். இதனால் இலட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் தேடி பிற நாடுகளுக்கு அகதிகளாக செல்கிறார்கள். 

அந்த வகையில் சிரியாவை சேர்ந்த இப்ராஹிம்-கவ்தார் பாருஹ் என்ற தம்பதி தங்களின் சிறுவர்கள்  15,12,9 வயது மற்றும் 8  ,3,2 வயதுடைய சிறுவர்கள் ஆகியோருடன் கடந்த 2017 ஆண்டு செப்டம்பர் மாதம் கனடாவில் தஞ்சம் புகுந்தனர்.

நோவா ஸ்கொடியா மாகாணத்தின் எல்ம்ஸ்டாலோ நகரில் வசித்து வந்த இந்த தம்பதி, அகதிகளுக்குரிய தொண்டுபணிகளை மேற்கொள்ள 2018-ம் ஆண்டில் அம்மாகாணத்தின் தலைநகரான ஹலிபாக்சில் உள்ள ஸ்பிரைபைல்ட் பகுதிக்கு இடம் பெயர்ந்தனர்.

அங்கு 2 மாடிகளை கொண்ட ஒரு வீட்டில் தங்களின் சிறுவர்கள் உட்பட அவர்களும் வாழ்ந்து வந்தனர். 

இந்நிலையில் குறித்த வீட்டில் திடிரென தீபரவியது. சற்று நேரத்தில் வீடு முழுவதுமாக தீப்பற்றி எரிந்தது. வீட்டில் இருந்த அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் தீ எரிவதை அவர்கள் உணரவில்லை.

இதற்கிடையில் வீட்டில் தீப்பற்றி எரிவதை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை தாரை பிரோகித்து தீயை அணைத்தனர்.

ஆனால் அதற்குள் சிறுவர்கள் 7 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிர் இழந்தனர். இப்ராஹிம் மற்றும் கவ்தார் பாருஹ் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

அவர்களில் இப்ராஹிமின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருவதாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.