மஸ்கெலியா நகரில் 19.02.2019 அன்று இரவு காணாமல் போன 30 வயதுடைய இளைஞன் இன்று காலை மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மஸ்கெலியா தபால் நிலையத்திற்கு அருகாமையில் வசிக்கும் 30 வயதுடைய பெத்தும் மதுசங்க லியனகே என்ற திருமணம் ஆகாத இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேற்படி இளைஞனை காணவில்லை என இளைஞனின் பெற்றோர் பொலிஸில் முறைபாடு செய்திருந்தனர்.

முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்டு வந்த  பொலிஸார், தேடுதல் பணியிலும் ஈடுப்பட்டிருந்தனர்.

அந்தநேரத்தில் மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்திற்கு அருகாமையில் இளைஞனின் பாதணி ஒன்று மீட்கப்பட்டிருந்தது. இதனையடுத்து குறித்த இளைஞன் நீர்தேகத்தில் பாய்ந்திருக்கலாம் என சந்தேகித்து தேடுதல் பணியில் ஈடுப்பட்டனர்.

நேற்று  இரவு வரை தேடுதலில் ஈடுப்பட்டிருந்த பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸார் இன்று கடற்படையினரின் உதவியைக்கொண்டு தேடுதலில் ஈடுப்பட்ட போது இளைஞன் சடலமாக நீர்தேகத்திலிருந்து மீட்கப்பட்டார்.

கடந்த 19ம் திகதி இரவு குறித்த இளைஞனுக்கு வந்த தொலைபேசி அழைப்பை அடுத்து அவர் வெளியே சென்றதாகவும், அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை என பெற்றோர்களால் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைபாட்டையடுத்து, சந்தேகிக்கும் பொலிஸார் மேற்படி இளைஞன் நீர்தேகத்தில் பாய்ந்துள்ளாரா அல்லது யாரேனும் தள்ளிவிட்டார்களா என்ற பல கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அட்டன் நீதவானின் மரண விசாரணைகளின் பின் சடலம் நாவலப்பிட்டி சட்ட மருத்துவ அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தலைமையில் விசேட குழுவினர் ஆரம்பித்துள்ளனர்.