(எம்.மனோசித்ரா)

மாகாண சபைத் தேர்தல்களை உரிய காலத்தில் நடத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு மாத்திரமல்ல, சகல பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் என்ற வகையில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் காணப்படுகின்றது என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.

ஏக்கல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மாகாண சபைத் தேர்தல் குறித்து எம்மால் மாத்திரம் தீர்மானிக்க முடியாது. அது தொடர்பான தீர்மானம் பாராளுமன்றத்திலேயே எடுக்கப்படும். எனவே பாராளுமன்றத்திலுள்ள 225 உறுப்பினர்களும் இந்த விடயத்தில் பொறுப்பு கூற வேண்டியவர்களே. அத்தோடு மாகாண சபைத் தேர்தல் இடம்பெற வேண்டிய தினம், முறைமை என்பன குறித்தும் பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டும்.

இதே வேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மாத்திரமே ஜனாதிபதி தேர்தலை முன்னதாகவே நடத்துவது தொடர்பாக தீர்மானிக்கக் கூடிய அதிகாரம் காணப்படுகின்றது. நாட்டில் அனைவருக்கும் கருத்துக்களை வெளியிடக் கூடிய சுதந்திரம் காணப்படுகின்றது. எனினும் அனைவராலும் கூறப்படும் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாது.

தற்போது ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அதனால் நாம் மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்து வரும் அதே வேளை 2015 ஆண்டுக்கு முன்னர் ஆட்சியில் இருந்தவர்களை மக்கள் புறக்கணித்துள்ளனர்.

இதனாலேயே சிலர் பல பொய் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அதன் காரணமகே ஏதாவதொன்றைச் செய்து 2015 க்கு முன்னர் காணப்பட்ட முறைமையை கொண்டு வர முயற்சிக்கின்றனர். அதனை மக்கள் விரும்பினால் தேர்தலில் அவர்களுக்கு வாக்களிப்பார்கள்.