(ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வசீம்)

பாராளுமன்ற உறுப்பினர்கள் 24 பேர் கொக்கைன் போதைப்பொருள் பாவிப்பதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக முன்வைத்துள்ள குற்றச்சாட்டு குறித்து ஐக்கிய தேசிய கட்சி விசாரணைக்குழு அமைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. 

எனினும் அதற்கு அப்பால் சபாநாயகர் தனிப்பட்ட விசாரணைகளை முன்னெடுக்க முடியும் என சபை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல சபையில் தெரிவித்தார். 

பாராளுமன்ற உறுப்பினர்கள் 24 பேர் கொக்கைன் பாவிப்பதாக  பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக தெரிவித்த கருத்து குறித்து பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய  கேள்விகளுக்கு பதில் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

பாராளுமன்ற உறுப்பினர்கள் 24 பேர் கொக்கைன் போதைபொருள் பாவிப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் கூட அதற்கான ஆதாரங்களை பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக முன்வைக்கவில்லை ஊடகங்கள் முன்னிலையில் குற்றம் சாட்டியுள்ளபோதிலும் அதற்கான எந்தவொரு ஆதாரத்தையும்இ பெயர்களையும்  அவர் சபாநாயகருக்கோ, பிரதமருக்கோ அல்லது சபையில் எமக்கோ முன்வைக்கவில்லை. 

எனினும் ஐக்கிய  தேசிய முன்னணியின் பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் இது குறித்து நாம் பேசினோம். அதன்போது இந்த குற்றச்சாட்டு குறித்து ஆராய எனது தலைமையில் ஏரான் விக்ரமரத்ன சமாரசிங்க,நிசங்க நாணயக்கார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 இந்தக் குழு உடனடியாக அறிக்கையை வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்கும். 

ஐக்கிய தேசிய கட்சி சார்பில்  இந்த விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது. ஆனால் அதற்கு அப்பால் சபாநாயகர் தலையீட்டில் தனிப்பட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும். பிரதி சபாநாயகர் அதற்கான அறிவித்தலை விடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.