தமிழ் அரசியல் கட்சியொன்றின் உறுப்பினர் என தெரிவிக்கப்படுகின்ற ஒருவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சட்டவிரோதமான கைத்துப்பாக்கிக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியமை சட்டரீதியானதா என்பது குறித்து ஆலோசனை பெற்று நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு அரச சட்டத்தரணிக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பணித்துள்ளார். 

அரசாங்கத்தின் அனுமதிப்பத்திரம் இல்லாமல், சட்டவிரோதமாக கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்தார் என்பதற்காக ஈபிடிபி கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் என தெரிவிக்கப்படுகின்ற ஒருவருக்கு எதிராக சட்டமா அதிபரினால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் துப்பாக்கிகள் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 

விசாரணையின் போது, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கைத்துப்பாக்கியை அதே கட்சியைச் சேர்ந்த உயர்நிலை உறுப்பினர் ஒருவர் கொழும்பு இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலமாக யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு வருவதற்கு அந்தத் துப்பாக்கியின் இலக்கத்தைக் குறிப்பிட்டு பாதுகாப்பு அமைச்சினால் அனுமதியளிக்கப்பட்ட கடிதம் ஒன்று சான்றுப் பொருளாக நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது, 

அதேநேரம் இந்தத் துப்பாக்கியின் இலக்கத்தைக் குறிப்பிட்டு அந்தத் துப்பாக்கி இலங்கை அரசுக்கு சொந்தமானதல்ல. அது அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை என்று தெரிவித்து பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட கடிதம் ஒன்றும் இந்த வழக்கில்; இந்தத் துப்பாக்கி சம்பந்தமான ஆவணமாக நீதிமன்றத்தில் இலக்கமிடப்பட்டிருக்கின்றது.

இந்த நிலைமையிலேயே சட்டவிரோதமான துப்பாக்கி என குறிப்பிட்டு, அதனை வைத்திருந்த குற்றத்திற்காகத் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் சட்டவிரோதமான துப்பாக்கிக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்க முடியுமா, அது சட்டரீதியானதா என்பதை சட்டமா அதிபரிடமிருந்து ஆலோசனை பெற்று நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு நீதிமன்றம் அரச சட்டத்தரணிக்கு பணித்துள்ளது. 

இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவராகிய விமலதாஸ் என்பவரை 2013 ஆம் ஆண்டு தகவல் ஒன்றின் அடிப்படையில் பொலிஸார் யாழ்ப்பாணத்தில் கைது செய்திருந்தனர். இவரிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கியும் அதற்குரிய 9 சன்னங்களும் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டிருந்தன. 

இதனையடுத்து, அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமாக கைத்துப்பாக்கியையும் அதற்கான சன்னங்களையும் வைத்திருந்தமை தொடர்பில் விமலதாஸுக்கு எதிராக 2 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றப்பகிர்வு பத்திரம் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணையின்போது அரச தரப்பு சாட்சியாக பயங்கரவாதப் புலனாய்வு பிரிவின் சப் இன்ஸ்பெக்டர் சாட்சியமளித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:

கடந்த 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்;ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உணவு விடுதியொன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒருவரின் நடமாட்டம் இருப்பதாக எமக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. 

இதனையடுத்து, பயங்கரவாதப் புலனாய்வு பிரிவின் 5 பேர் கொண்ட குழுவாக நாங்கள் சம்பவ இடத்திற்குச் சென்றோம். எங்களில் 3 பேர் உணவு விடுதியின் உள்ளே சென்று உளவு பார்த்தனர். அந்த நேரம் நானும் மற்றுமொருவரும் உணவு விடுதியின் வெளியில் நின்று நிலைமைகளை அவதானித்தோம். 

இங்கு எதிரி கூண்டில் நிற்கும் எதிரியான விமலதாஸ் சாதுவாக வெளியில் தெரியத்தக்க வகையில் கைத்துப்பாக்கியொன்றை இடுப்பில் சொறுகியிருந்த நிலையில் உணவு விடுதியின் உள்ளே காணப்பட்டார்.  

இதனையடுத்து நாங்கள் ஐந்து பேரும் அவரை நோக்கி எச்சரிக்கையுடன் முன்னேறிச் சென்றோம். உணவு விடுதியின் உள்ளே உளவு பார்த்த பொலிசார் இருவரும் எதிரியை நெருங்கி அவருடைய இரண்டு கைகளையும் பிடித்து அவரைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். என்னுடன் இருந்த மற்றுமொரு பொலிசார் எனக்குப் பாதுகாப்பாகத் தயார் நிலையில் இருக்க நான் விமலதாஸின் இடுப்பில் இருந்த கைத்துப்பாக்கியைக் கைப்பற்றினேன். 

துப்பாக்கியைக் கைப்பற்றியதும் அவரிடம் விசாரணை நடத்தியபோது, எதிரி தான் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் என தெரிவித்தார். ஆயினும் அதனை உறுதிப்படுத்துவதற்கு அவரிடம் எதுவிதமான அடையாள அட்டையோ ஆவணமோ இருக்கவில்லை. எனவே, உடனடியாக அவரைக் கைது செய்து யாழ்ப்பாணம் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவுக்குக் கொண்டு சென்று துப்பாக்கிகள் சட்டத்தின் கீழ் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தோம். அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இவ்வாறு தனது சாட்சியத்தில் தெரிவித்த அரச தரப்பு சாட்சியாகிய பயங்கரவாதப் புலனாய்வு பிரிவைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டரை எதிரி தரப்பு சட்டத்தரணி குறுக்கு விசாரணை செய்தார்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கைத்துப்பாக்கி சம்பந்தமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த இரண்டு கடிதங்கள் குறித்து குறுக்கு விசாரணையின்போது சாட்சி விளக்கமளித்தார். இரண்டு கடிதங்களும் பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்டவையாகும். 

முதலாவது கடிதம் பாதுகாப்பு அமைச்சு செயலாளருக்காக என தெரிவித்து உயரதிகாரி ஒருவரினால் கையெழுத்திடப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜுன் மாதம் ஈபிடிபி கட்சியின் உயர் நிலை உறுப்பினராகிய கந்தசாமி கமலேந்திரன் என்பவர் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கைத்துப்பாக்கியை அதன் இலக்கத்தைக் குறிப்பிட்டு, அந்தத் துப்பாக்கியுடன் இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலமாக யாழ்ப்பாணம் பலாலிக்குப் பிரயாணம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

பாதுகாப்பு இவ்வாறு அனுமதியளித்திருந்த அந்தக் கடிதத்தின் பிரதியொன்று ஈபிடிபி கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் அனுப்பி வைக்கப்படுவதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த வழக்கின் எதிரியாகிய விமலதாஸ் கைது செய்யப்பட்டதையடுத்து நடத்தப்பட்ட விசாரணைகளின்போது, கொழும்பில் உள்ள பயங்கரவாதப் புலனாய்வு பொலிசாரின் வசமிருந்து இந்தக் கடிதம் பெறப்பட்டதாக அரச தரப்பு சாட்சியாகிய சப் இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்.  

அத்துடன் 2013 ஆம் ஆண்டு விமலாதாஸ் கைது செய்யப்பட்டதன் பின்னர், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கி சம்பந்தமாக பாதுகாப்பு அமைச்சிடம் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவு நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்காக உயரதிகாரி ஒருவர் கையொப்பமிடப்பட்ட கடிதம் என தெரிவித்து இரண்டாவது கடிதம் ஒன்று நீதிமன்றத்தில் ஆவணமாக இந்த சாட்சியாகிய சப் இன்ஸ்பெக்டரினால் சமர்ப்பிக்கப்பட்டது. 

இந்தக் கடிதத்தில் இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கியின் இலக்கத்தைக் குறிப்பிட்டு, இந்தத் துப்பாக்கி, இலங்கை அரச ஆயுதக் கிடங்கு பட்டியலில் இல்லாத துப்பாக்கி எனவும், இது அரசுக்குச் சொந்தமானதல்ல எனவும், அரசினால் இந்தத் துப்பாக்கி வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருப்பதாகக் கூறியதையடுத்து, அந்தக் கடிதம் ஓர் ஆவணச் சான்றாக நீதிமன்றத்தில் இலக்கமிடப்பட்டது. 

கடந்த 2009 ஆம் ஆண்டு ஜுன் மாதம் கந்தசாமி கமலேந்திரன் இந்தத் துப்பாக்கியை அதற்குரிய 50 சன்னங்களுடன் இரத்மலானையில் இருந்து பலாலிக்குக் கொண்டு செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சு ஏன் அனுமதி வழங்கியது என்பது பற்றி பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படவில்லை. 

இந்த முதலாவது கடிதத்தில் அதன் பிரதி ஈபிடிபி கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அனுப்பப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், இது குறித்து அவரிடமும் விசாரணை நடத்தப்படவில்லை. 

அதேபோன்று அது அரசுக்கு சொந்தமான துப்பாக்கியல்ல என்று 2013 ஆம் ஆண்டு அதே பாதுகாப்பு அமைச்சு கடிதம் மூலம் அறிவித்துள்ளமை சம்பந்தமாகவும் பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படவில்லை. இவ்வாறு விசாரணை நடத்துமாறு தமது உயரதிகாரிகள் தங்களுக்குப் பணிப்புரை விடுக்கவில்லை என்று குறுக்கு விசாரணையின்போது அரச சாட்சியாகிய சப் இன்ஸ்பெக்டர் தெரிவித்தார். 

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சட்டவிரோதமான துப்பாக்கி என தெரிவிக்கப்பட்டுள்ள கைத்துப்பாக்கியின் இலக்கத்தைக் குறிப்பிட்டு அதனை கொழும்பில் இருந்து இரத்மலானை வழியாக யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு செல்வதற்கு ஈபிடிபி கட்சியின் உயர்நிலை உறுப்பினராகிய கந்தசாமி கமலேந்திரனுக்கு 2009 ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. 

எனவே, சட்டவிரோதமான துப்பாக்கி ஒன்றுக்கு இவ்வாறு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியமை சட்டரீதியானதா? அவ்வாறு சட்டவிரோதமான துப்பாக்கி ஒன்றுக்கு பாதுகாப்பு அமைச்;சு அனுமதி கடிதம் வழங்க முடியுமா? என்ற கேள்விகள் இந்த வழக்கில் எழுகின்றன. 

அதேநேரம் 2013 ஆம் ஆண்டு இந்தத் துப்பாக்கியின் இலக்கத்தைக் குறிப்பிட்டு, இந்தக் கைத்துப்பாக்கி அரசுக்கு சொந்தமானதல்ல என்றும், அது அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை என்றும் பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட இரண்டாவது கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆகவே, இந்தக் கடிதங்கள் தொடர்பாக சட்டமா அதிபருடன் ஆலோசனை நடத்தி இந்த வழக்கு தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய மேல் நடவடிக்கை குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அரச சட்டத்தரணிக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பணித்துள்ளார். 

இந்த வழக்கு மே மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இந்த இரண்டு கடிதங்களினதும் பிரதிகள் அவை உண்மையான பிரதிகளே என்பதை உறுதிப்படுத்தி நீதிமன்றத்தின் ஆவணக் கோவையில் இணைக்கப்பட்டன. இத்தகைய இரண்டு பிரதிகள் அரச சட்டத்தரணிக்கு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டது. 

இந்தக் கடிதங்கள் இரண்டினதும் பிரதிகள் பெறப்பட்ட பின்னர், அவற்றின் மூலப் பிரதிகள் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவு சப் இன்ஸ்பெக்டரிடமோ நீதிமன்றத்தினால் திருப்பி ஒப்படைக்கப்பட்டன.