2019 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடர் எதிர்வரும் மே மாதம் ஆரம்பாகவுள்ள நிலையில், இதன்போது பாகிஸ்தானுடன் விளையாடுவதா என்பதை மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.

புல்வாமா தாக்குதலின் பின் பாக்கிஸ்தான் உடனான உறவுகளை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில் மே மாதம் ஆரம்பமாகவுள்ள உலகக்கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இதற்கு பதிலளித்துள்ள பி.சி.சி.ஐ, 

ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பாக்கிஸ்தானுடன் இந்தியா விளையாடுவது குறித்து மத்திய அரசே முடிவு செய்யும். பாக்கிஸ்தானுடன் இந்தியா விளையாடுவதை தவிர்த்தால் புள்ளிகளை இழக்க நேரிடும். உலகக் கோப்பை அட்டவணையில் மாற்றம் செய்வது தொடர்பாக ஐ.சி.சி.,யை அணுகவில்லை.

இதில் ஐ.சி.சி. ஒன்றும் செய்ய முடியாது. பாக்கிஸ்தானுடன் விளையாட வேண்டாம் என மத்திய அரசு முடிவு செய்தால், நாங்கள் விளையாட மாட்டோம். அப்படி நாங்கள் மறுத்தால் பாக்கிஸ்தானுக்கு கூடுதல் புள்ளிகள் கிடைக்கும். 

இதனால் இறுதிப் போட்டியில் நாங்கள் விளையாடாவிட்டாலும் பாக்கிஸ்தான் கோப்பையை வென்று விடும் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. 

உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுடன் பாக்கிஸ்தான் மோதுவது தொடர்பாக டுபாயில் எதிர்வரும் 27 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஐ.சி.சி. கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என ஐ.சி.சி. தகவல்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.