அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹோல்புறூக் லோவர் கிரன்லி தோட்டத்தில் 2 வயதுடைய யசிப் விதுர்ஷன் என்ற ஆண் குழந்தையொன்று நேற்று மாலை காணாமல் போயுள்ளது.

நேற்றிரவுவரை குழந்தை குறித்து எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை என்று, மீட்பு பணியில் ஈடுப்பட்டுள்ள பொலிஸாரும், தலவாக்கலை விசேட அதிரடி படையினரும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு காணாமல் போன குழந்தை தனது வீட்டில் விளையாடி கொண்டிருக்கும் பொழுது, வெளியே சென்ற குழந்தை திடீரென காணாமல் போயுள்ளது.

யாரேனும் கடத்தி சென்றுள்ளார்களா அல்லது எங்கேயாவது தவறி விழுந்துள்ளதா என பல கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குழந்தையை தேடும் பணியில் பிரதேச மக்களும் இணைந்துள்ள நிலையில், அக்கரப்பத்தனை மற்றும் டயகம பொலிஸாரும் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த குழந்தை தொடர்பில் தகவல் ஏதும் அறிந்தால் அருகில் உள்ள பொலிஸாருக்கு அறியப்படுத்துமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மற்றும் நுவரெலியா பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.