"நான் எப்போது வருவேன், எப்படி வருவேன் யாருக்கும் தெரியாது.ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வந்துடுவேன்.1995 ஆம் ஆண்டு மாபெரும் வசூல் சாதனை படைத்த முத்து திரைப்படத்தில் ரஜினிகாந்தின் பாத்திரம் பேசிய பிரபல்யமான வசனம் இது.

சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களைப் பொறுத்தவரை, அவர்கள் அவரின் அரசியல் வருகைக்காக  மேலும் காத்திருக்கவேண்டியிருக்கிறது போலத்தெரிகிறது.இன்னும் இரு மாதங்களில் மூன்று மாதங்களில் நடைபெறவிருக்கும் லோக்சபா தேர்தல்களில் இருந்து ஒதுங்கியிருக்க ரஜினிகாந்த் இப்போது தீர்மானித்திருக்கிறார்.சரியான நேரம் இன்னமும் வரவில்லை எனாறு அவர் நம்புதகிறார் போலும்.லோக்சபா தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என்றும் அவர் பிரகடனம் செய்திருக்கிறார்.

சூப்பர் ஸ்டாரை  நீண்டகாலமாக அவதானித்துவருபவர்களுக்கு அவரது அறிவிப்பு ஒன்றும் ஆச்சரியத்தை தரவில்லை. கொலிவூட்டில் தனது சகநடிகரான கமல்ஹாசனைப் போலன்றி ரஜினிகாந்த் எப்போதுமே  மதில்மேல் இருந்தவந்திருக்கிறார்.அரசியலுக்கு வருகை குறித்து திட்டவட்டமான -தெளிவான அறிவிப்பை ஒருபோதும் செய்வதில்லை. எதிர்வரும் லோக்சபா தேர்தல்களில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலுமாக 40 தொகுதிகளிலும் தனது கட்சியின் சார்பில் வேட்பாளர்களைக் களமிறக்கப்போவதாக கமல்ஹாசன் அறிவித்திருக்கிறார்.

ரஜினிகாந்த் இதுவரை காலத்தில் தனது அரசியல் அபிப்பிராயத்தை வெளிப்படையாகக் கூறினார் என்றால் அது  1996 ஆம் ஆண்டில்தான். ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக தெரிவுசெய்யப்படுவாரேயானால், தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று அவர் அப்போது கூறினார்.அடுத்து வந்த தேர்தல்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஏற்பட்ட படுதோல்விகளுக்கெல்லாம் ரஜினிகாந்தின் அந்தக் கூற்றும் முக்கியமான ஒரு காரணம் என்றும் பெருமை பேசப்பட்டது.

அதற்குப் பிறகு, தேர்தல்களுக்கு முன்னதாக அவர் எப்போதும் மறைபுதிரான அறிக்கைகளை மாத்திரம் விடுத்துவந்தார்.தற்போது அவர் எடுத்திருக்கும் நிலைப்பாடு திராவிட மண்ணில் தன்னை நிலைநிறுத்துவதற்குப் பெரும்பாடுபடும் பாரதிய ஜனதாவுக்கு பலத்த ஏமாற்றமாகப் போய்விட்டது.  

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் செல்வாக்குமிக்க தலைவர் ஒருவர் இல்லாதிருக்கும் அண்ணா தி.மு.க. ஜனரஞ்சகமான தலைவர் ஒருவரை அரவணைப்பதைச் சாத்தியமாக்குவதற்கு பாரதிய ஜனதா திரைக்குப் பான்னால் இருந்து முயற்சிகளை மேற்கொண்டுவந்தது என்பது ஒன்றும் இரகசியமல்ல.பாரதிய ஜனதா இன்னமும் முறைப்படியாக அண்ணா தி.ம.க.வுடன் கூட்டணியொன்றை அமைத்துக்கொள்ளவில்லை என்கிற அதேவேளை, திராவிட முன்னேற்றக் கழகம் -- காங்கிரஸ் கட்சி -- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை இடதுசாரிக்கட்சிகளுடன் சேர்ந்து பாரதிய ஜனதாவுக்கு பெரும் சவாலைத் தோற்றுவிக்கும் சாத்தியம் இருக்கிறது.

இந்திமொழி பேசும் மாநிலங்களில் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட தேர்தல் இழப்புக்களை தென்மாநிலங்களில் செல்வாக்கை அதிகரிப்பதன் மூலம் ஈடுசெய்வதற்கு பாரதிய ஜனதா எதிர்பார்த்திருக்கிறது.2014 லோக்சபா தேர்தல்களில் தென்மாநிலங்களில் உள்ள 132 தொகுதிகளில் 19 தொகுதிகளில் மாத்திரமே பாரதிய ஜனதா வெற்றிபெறக்கூடியதாக இருந்தது. இப்போது ரஜினிகாந்தின் அறிவிப்பு எற்படுத்தியிருக்கும் தடுமாற்றத்தையடுத்து காப்டன் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தையும்  வலுவான வன்னியர் ஆதரவுத்தளத்தைக் கொண்ட பாட்டாளி மக்கள் கட்சியையும் சேர்த்துக்கொண்டு கூட்டணியொன்றை அமைப்பதில் பாரதிய ஜனதா இறங்கியிருக்கிறது. விஜயகாந்தின் கட்சி கூட்டணியை அமைக்க அக்கறையாக இருக்கின்ற அதேவேளை, டாக்டர் ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சி கடுமையான பேரம் பேசலில் ஈடுபட்டிருக்கிறது.

தனக்கேயுரித்தான பாணியில் ரஜினிகாந்த் லோக்சபா தேர்தல்களில் இருந்து விலகியிருக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.ஆனால், தமிழ்நாடு மாநிலத்தின் ஆற்றுநீர்ப் பிரச்சினையை தீர்த்துவைக்கக்கூடிய ஒரு கட்சிக்கு வாக்களிக்குமாறு தனது ஆதரவாளர்களை அவர் கேட்டிருக்கிறார். பாரதிய ஜனதாவின் அனுதாபிகளுக்கு அது போதுமானதாக இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம்தான் கோதாவரி ஆற்றையும் காவிரி ஆற்றையும் இணைப்பது குறித்த யோசனையை முன்வைத்தது என்று சுட்டிக்காட்டுகின்ற அளவுக்கு அவர்கள் கீழிறங்கியிருக்கிறார்கள்.

 ரஜனிகாந்தின் இன்னொரு திரைப்படமான கோச்சடையானில் அவரின் பாத்திரம் பேசுகின்ற இன்னொரு பிரபல்யமான வசனத்தை பாரதிய ஜனதாவுக்கு நினைவூட்டலாம் ; " வாய்ப்புகள் அமையாது, நாம்தான் அமைத்துக்கொள்ள வேண்டும்."