யாழ்.கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற பெற்றோல் குண்டு தாக்குதல் தொடர்பாக செய்திகளை சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் இன்று பகல் இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்தில் செய்தி சேகரிப்பதற்காக தான் சென்றிருந்தபோது, தனக்கு அருகில் வந்த கோப்பாய் பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரி, தன்னை அங்கிருந்து செல்லுமாறு கூறியதாகவும் அங்கிருந்து செல்ல தான் மறுப்பு தெரிவித்தமையால் தன்னை தாக்கியதாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த சம்பவத்தை காணொளியாக பதிவு செய்ய வேண்டாமென தெரிவித்தே தன்னை பொலிஸார் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இந்த விடயம் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான குறித்த ஊடகவியலாளர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.