பிரெக்சிட் விவகாரத்தில் முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த 7 எம்.பி.க்கள் திடீரென கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.

பிரெக்சிட் விவகாரம் மற்றும் யூதர்களுக்கு எதிரான பாகுபாடு ஆகிய விவகாரங்களில் தொழிலாளர் கட்சி தலைவர் ஜெரிமி கார்பின் செயல்பாடுகளில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்பதை தெரிவித்தே இவர்கள் கட்சியிலிருந்து விலகியுள்ளனர். 

அத்துடன் இவர்கள் இனி அணியாக செயற்பட தீர்மானித்துள்ளதுடன், தொழிலாளர் கட்சி மற்றும் பிற கட்சிகளின் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். புதிய அரசியல் கட்சியை தொடங்குவதற்காக தங்களுடன் இணையும்படி கேட்டுக்கொண்டுள்ளனர். 

இதையடுத்து, தொழிலாளர் கட்சியில் இருந்து மேலும் சில எம்.பி.க்கள் வெளியேறலாம் என தெரிகிறது. யூத விரோத பிரச்சினையை சரிசெய்யாவிட்டால், ஏற்கனவே விலகிய 7 முன்னாள் எம்.பி.க்களுடன் இணைய விரும்புவது குறித்து யோசித்து வருவதாக இரண்டு எம்.பி.க்கள் கூறியுள்ளனர். 

முக்கிய எம்பிக்கள் விலகியிருப்பது தொழிலாளர் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.