தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெறவுள்ள சர்வதேச ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணிக் குழாமில் அகில தனஞ்சய இடம்பிடித்துள்ளார்.

தென்னாபிரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியானது டெஸ்ட், ஒருநாள், இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் டெஸ்ட் பேட்டிகளில் ஆரம்பமாகியுள்ள நிலையில் இன்றைய தினம் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 17 பேர் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் அணிக் குழாமை இன்று அறிவித்துள்ளது.

இதில் ஏற்கனவே ஐ.சி.சி.யினால் பந்துவீச தடைவிதிக்கப்பட்டிருந்த இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சய உள்ளடக்கப்பட்டுள்ளார். 

அவரது பந்து வீச்சு பாணியில் குற்றமில்லை என ஐ.சி.சி. உறுதிசெய்து, அவருக்கான தடை நீக்கப்பட்ட நிலையிலேயே தற்போது அவர் அணியில் இடம்பிடித்துள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிராக காலியில் நடைபெற்ற போட்டியின்போது இவரது பந்து வீச்சில் சந்தேகம் எழுந்தது. இதன் காரணமாக இவருக்கு மேற்கொண்ட பரிசோதனையின் பின்னரே ஐ.சி.சி. இவருக்கு பந்து வீச தற்காலிக தடைவிதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இத‍ேவேளை தென்னாபிரிக்க அணியுடன் விளையாடவுள்ள 17 பேர் கொண்ட லசித் மலிங்க தலைமையிலான ஒருநாள் அணிக் குழாமில் அவிஷ்க பெர்ணான்டோ, உபுல் தரங்க, நிரோஷன் திக்வெல்ல, குசல் ஜனித் பெரேரா, குசல் மெண்டீஸ், தனஞ்சய  டிசில்வா, திஸர பெரேரா, அஞ்சலோ பெரேரா, அகில  தனஞ்சய, ஒசத பெர்ணான்டோ, கமிந்து மெண்டீஸ், பிரியமல் பெரேரா, இசுறு உதான, விஷ்வ பெர்ணான்டோ, கசூன் ராஜித மற்றும் லக்ஷான் சந்தகன் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இக் குழாமுக்கான அனுமதியினை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.