மது அருந்துவதால் ஏற்படும் தீமை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த, ரஜினிகாந்த் நடித்த படத்தின் காட்சியை மீம்ஸாக உருவாக்கி அசத்தியுள்ளனர் ஆவுஸ்திரேலிய பொலிஸார். 

இன்றைய காலகட்டத்தில், விழிப்புணர்வு குறித்த தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு மீம்ஸ்தான் பிரதான பாலமாக உள்ளது. அந்த வகையில், பொலிஸார் தொடங்கிய குறித்த விடயத்தை தற்போது  பொதுநல அமைப்புகள் பலவும் நல்ல கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்க்க திரைப்படக் காட்சிகளை மீம்ஸாகப் பயன்படுத்தி வருகின்றன.

இதை, இந்தியாவில் மும்பை பொலிஸார் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி செயற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆவுஸ்திரேலியா நகர சாலையில் வாகனம் ஓட்டி சென்ற ஒருவரை அந்நாட்டு பொலிஸார் தடுத்து நிறுத்தி வைத்தியசோதனை செய்த போது அந்த ஆசாமி, குடியால் கோமா நிலைக்கு செல்லவிருப்பது தெரியவந்துள்ளது. 

இதையடுத்து ஆவுஸ்திரேலியாவின் டெர்மி நகர பொலிஸார் மது அருந்துவதால் ஏற்படும் தீமை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, ரஜினிகாந்த் விஞ்ஞானியாக நடித்து வெளியான ‘2.0’ படத்தின் காட்சி மற்றும் ‘This is beyond Science’ என்ற வசனத்தையும் பயன்படுத்தி மீம்ஸ் உருவாக்கி , அதை தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

அந்த மீம்ஸில், ‘மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி சென்ற ஒருவரைச் சோதித்தபோது, அவரது மூச்சுக்காற்றில் 0.341 அளவுக்கு ஆல்கஹால் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த அளவு என்பது, மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சையில் இருக்கும் ஒரு நபரோ, அல்லது கோமா நிலையில் இருக்கும் ஒரு நபரோ வாகனத்தை ஓட்டி செல்வதற்கு சமம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மீம்ஸை, ரஜினி ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி வருகின்றனர்.