மூன்றாம் மாடியொன்றில் டெங்கு நுளம்பு பரிசோதனையில் ஈடுபட்டிருந்த டெங்கு பரிசோதனை அதிகாரியொருவர் மாடியிலிருந்து கீழே விழுந்து படுகாயமுற்ற நிலையில் பதுளை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி மரணமானார்.

குறித்த  இச்சம்பவமானது பதுளையில் இடம்பெற்றுள்ளது.

பதுளை சுகாதார சேவை பணிப்பாளர் பணியகத்தில் டெங்கு நுளம்பு பரிசோதனை அதிகாரியே மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் 49 வயது நிரம்பிய இரு பிள்ளைகளின் தந்தை என விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

பதுளை மாநகரில் மூன்று மாடிகளைக் கொண்ட வர்த்தக நிலையமொன்றில் நுளம்புகள் பரவும் வகையிலான செயற்பாடுகள் நிலவுவதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து பதுளை சுகாதார சேவை பணிப்பாளர் பணியக மூலம் இருவர் சென்று டெங்கு பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தனர். அங்குள்ள பாதுகாப்பற்ற நீர்த்தாங்கியொன்றை சோதனையிடும் போது மாடியிலிருந்து கீழே விழுந்து விட்டார். 

படுகாயமுற்ற அவர் உடனடியாக பதுளை அரசினர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவர் உயிரிழந்த பின்னர் அவரது சிறுநீரகங்களை தானம் செய்வதாக குடும்ப உறுப்பினர்கள் வைத்தியர்களிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து வைத்தியர்கள் குழாம் உடனடியாக மேற்கொண்ட சத்திர சிகிச்சைகளின் பின்னர் உயிரிழந்த நபரின் சிறுநீரகங்களை எடுத்தனர். 

இறந்தாலும் அவரது சிறுநீரகங்கள் மூலம் மேலுமொரு உயிரைக் காப்பாற்ற முடிவதையிட்டு வைத்தியர்கள் கப்பில  குடும்பத்தினருக்கு நன்றியைக் கூறினர்.